கேள்வி

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.   (௪௱௰௧ - 411)
 

கேள்வியால் அடைகின்ற அறிவே செல்வங்களுள் சிறந்த செல்வம் ஆகும்; அந்தக் கேள்விச் செல்வம் பிற செல்வங்களுள் எல்லாம் முதன்மையானதும் ஆகும் (௪௱௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும். (௪௱௰௧)
—மு. வரதராசன்

செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது. (௪௱௰௧)
—சாலமன் பாப்பையா

செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும் (௪௱௰௧)
—மு. கருணாநிதி

செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.   (௪௱௰௨ - 412)
 

செவிக்கு உணவான கேள்வி இல்லாதபொழுது, உடலைக் காப்பதன் பொருட்டாக வயிற்றுக்கும் சிறிதளவான உணவு அறிவுள்ளவரால் தரப்படும் (௪௱௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும். (௪௱௰௨)
—மு. வரதராசன்

செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும். (௪௱௰௨)
—சாலமன் பாப்பையா

செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும் (௪௱௰௨)
—மு. கருணாநிதி

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.   (௪௱௰௩ - 413)
 

செவியுணவு ஆகிய கேள்வியை உடையவர், இவ்வுலகத்தில் இருப்பவரானாலும், அவியுணவை ஏற்றுக் கொள்ளும் வானுலகத்துத் தேவர்களோடு ஒப்பாவார்கள் (௪௱௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார். (௪௱௰௩)
—மு. வரதராசன்

செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர். (௪௱௰௩)
—சாலமன் பாப்பையா

குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர் (௪௱௰௩)
—மு. கருணாநிதி

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.   (௪௱௰௪ - 414)
 

தான் முயன்று கற்கவில்லை என்றாலும், கற்றவரிடம் கேட்டாவது அறிவு பெற வேண்டும்; அது ஒருவன் தளர்ச்சி அடையும்போது ஊன்றுகோல் போலத் துணையாகும் (௪௱௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும். (௪௱௰௪)
—மு. வரதராசன்

கல்லாதவனே என்றாலும் கற்றவர் கூறும் சிறந்த செய்திகளைக் கேட்க வேண்டும்; அப்படிக் கேட்பது அவனுக்கு நெருக்கடி வரும்போது பிடிப்பதற்கு ஏற்ற துணையாக உதவும். (௪௱௰௪)
—சாலமன் பாப்பையா

நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும் (௪௱௰௪)
—மு. கருணாநிதி

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.   (௪௱௰௫ - 415)
 

நல்ல ஒழுக்கம் உடையவரது வாய்ச்சொற்கள், வழுக்கும் சேற்றில் வழுக்காமல் செல்ல உதவும் ஊன்றுகோல் போல ஒருவனுக்கு எப்போதும் உதவியாக விளங்கும் (௪௱௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும். (௪௱௰௫)
—மு. வரதராசன்

கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும். (௪௱௰௫)
—சாலமன் பாப்பையா

வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும் (௪௱௰௫)
—மு. கருணாநிதி

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.   (௪௱௰௬ - 416)
 

எவ்வளவு சிறிது என்ற போதும் நல்ல பேச்சுக்களையே கேட்கவேண்டும்; அது அந்த அளவுக்கேனும் சிறந்த பெருமையைக் கேட்டவனுக்குத் தவறாமல் தரும் (௪௱௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும். (௪௱௰௬)
—மு. வரதராசன்

சிறிது நேரமே என்றாலும் உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும். (௪௱௰௬)
—சாலமன் பாப்பையா

நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் (௪௱௰௬)
—மு. கருணாநிதி

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.   (௪௱௰௭ - 417)
 

நுட்பமாகக் கற்றுணர்ந்த அறிவோடு கேள்வியறிவும் உடையவர்கள், பிறழ ஒன்றை உணர்ந்தாலும், தமக்குப் பேதைமை தருகின்ற சொற்களைச் சொல்லமாட்டார்கள் (௪௱௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார். (௪௱௰௭)
—மு. வரதராசன்

நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார். (௪௱௰௭)
—சாலமன் பாப்பையா

எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள் (௪௱௰௭)
—மு. கருணாநிதி

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.   (௪௱௰௮ - 418)
 

கேள்வியால் துளைக்கப்படாத செவிகள், பிற ஒலிகளை எல்லாம் கேட்குமாயினும், உண்மையில் செவிடான காதுகளே ஆகும் (௪௱௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே. (௪௱௰௮)
—மு. வரதராசன்

கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே. (௪௱௰௮)
—சாலமன் பாப்பையா

இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும் (௪௱௰௮)
—மு. கருணாநிதி

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.   (௪௱௰௯ - 419)
 

நுண்மையான கேள்வி அறிவைப் பெறாதவர்கள், தாம் வணக்கமாகப் பேசும் வாயினர் ஆகுதல் அருமையே! கேள்வியறிவு பெற்றவர்கள் பணிவாகவே பேசுவார்கள் (௪௱௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது. (௪௱௰௯)
—மு. வரதராசன்

நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம். (௪௱௰௯)
—சாலமன் பாப்பையா

தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது (௪௱௰௯)
—மு. கருணாநிதி

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.   (௪௱௨௰ - 420)
 

கேள்வியாகிய அறிவுச் சுமையை உணராது, வாயால் அறியும் நாக்கின் சுவையுணர்வு மட்டுமே கொண்டவர்கள் இறந்தாலும் வாழ்ந்தாலும் ஒன்றுதான் (௪௱௨௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன. (௪௱௨௰)
—மு. வரதராசன்

செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன? (௪௱௨௰)
—சாலமன் பாப்பையா

செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான் (௪௱௨௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: ரவிசந்திரிகா  |  தாளம்: ஆதி
பல்லவி:
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வமே
செல்வத்துள் ளெல்லாம் தலையாகுமே

அநுபல்லவி:
கல்வியின் பயனே கேள்வியாலன்றோ
கருதும் பொருள் காண வேறுண்டோ

சரணம்:
வழுக்கும் நிலத்தில் ஊன்றும் கோலைப் போல
வலிவாய் நடக்க உதவும் மென்மேலே
ஒழுக்க முடையார் வாய்ச் சொல்லதாலே
உண்டாகும் திண்மை கொண்டாடும் உண்மை

புவியிலோர் விலங்கும் புசிக்கும் உணவு
போற்றும் கேள்விதான் மாந்தரின் உயர்வு
செவிக் குணவில்லாத போழ்தே சிறிது
வயிற்றுக்கும் ஈயும் குறளே இனிது




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22