சான்றாண்மை

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.   (௯௱௮௰௧ - 981)
 

‘நமக்கு இது தகுவது’ என்று அறிந்து, சான்றாண்மை மேற்கொண்டு ஒழுகுபவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் அவருடைய இயல்பாகவேயிருக்கும் என்பார்கள் (௯௱௮௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர். (௯௱௮௰௧)
—மு. வரதராசன்

நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர். (௯௱௮௰௧)
—சாலமன் பாப்பையா

ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும் (௯௱௮௰௧)
—மு. கருணாநிதி

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.   (௯௱௮௰௨ - 982)
 

சான்றோர்களின் சிறப்பாவது, அவர் குணநலங்களால் வந்த சிறப்பே; அ·து ஒழிந்த பிற நலன்கள் எல்லாம், எந்நலத்தினும் சேர்வதான ஒரு நலனே ஆகாது (௯௱௮௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று. (௯௱௮௰௨)
—மு. வரதராசன்

சான்றோர் என்பவர்க்கு அழகு, குறங்களால் ஆகிய அழகே; பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேரா. (௯௱௮௰௨)
—சாலமன் பாப்பையா

நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும் வேறு எந்த அழகும் அழகல்ல (௯௱௮௰௨)
—மு. கருணாநிதி

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.   (௯௱௮௰௩ - 983)
 

அன்பும், நாணமும், யாவரிடத்தும் ஒப்புரவு செய்தலும், கண்ணோட்டமும், வாய்மையும், சால்பென்னும் பாரத்தைத் தாங்கும் ஐந்து தூண்கள் ஆகும் (௯௱௮௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும். (௯௱௮௰௩)
—மு. வரதராசன்

மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள். (௯௱௮௰௩)
—சாலமன் பாப்பையா

அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும் (௯௱௮௰௩)
—மு. கருணாநிதி

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.   (௯௱௮௰௪ - 984)
 

‘தவம்’ ஓர் உயிரையும் கொல்லாத அறத்தினிடத்தது; சால்பு, பிறரது குற்றத்தை அறிந்தாலும், வெளியே சொல்லித் திரியாத நல்ல குணத்தினிடத்து (௯௱௮௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது. (௯௱௮௰௪)
—மு. வரதராசன்

பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு. (௯௱௮௰௪)
—சாலமன் பாப்பையா

உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு பிறர் செய்யும் தீமையைச் சுட்டிக் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு (௯௱௮௰௪)
—மு. கருணாநிதி

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.   (௯௱௮௰௫ - 985)
 

ஒரு செயலை முடிப்பவரது ஆற்றலாவது, துணையாகுபவரைப் பணிமொழியால் தாழ்ந்தும் கூட்டிக் கொள்ளுதல்; சால்புடையார் தம் பகைவரை ஒழிக்கும் படையும் அதுவே (௯௱௮௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும். (௯௱௮௰௫)
—மு. வரதராசன்

ஒரு செயலைச் செய்து முடிப்பவர் திறமை, தம்முடன் பணி ஆற்றுபவரிடம் பணிந்து வேலை வாங்குதலே; சான்றாண்மை தம் பகைவரையும் நண்பராக்கப் பயன்படுத்தும் ஆயுதமும் அதுவே. (௯௱௮௰௫)
—சாலமன் பாப்பையா

ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல் என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும் (௯௱௮௰௫)
—மு. கருணாநிதி

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.   (௯௱௮௰௬ - 986)
 

சால்பாகிய பொன்னின் தரத்தை அறிவதற்கான உரைகல், தம்மினும் உயர்ந்தாரிடம் ஏற்கும் தோல்வியை, இழிந்தவரிடமும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகும் (௯௱௮௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும். (௯௱௮௰௬)
—மு. வரதராசன்

சான்றாண்மையை உரைத்துப் பார்த்துக் கண்டு அறியப்படும் உரைகல் எதுவென்றால், சிறியவர்களிடம் கூடத் தன் தோல்வியை ஒத்துக் கொள்வதே ஆகும். (௯௱௮௰௬)
—சாலமன் பாப்பையா

சமநிலையில் இல்லாதவர்களால் தனக்கு ஏற்படும் தோல்வியைக்கூட ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைகல்லாகும் (௯௱௮௰௬)
—மு. கருணாநிதி

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.   (௯௱௮௰௭ - 987)
 

தமக்குத் தீமை செய்தவர்களுக்கும் இனிய செயல்களைச் செய்யாதவரானால், ‘சால்பு’ என்று சிறப்பாகக் கொள்ளப்படுவது தான், என்ன பயனை உடையதாகுமோ? (௯௱௮௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும். (௯௱௮௰௭)
—மு. வரதராசன்

தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன? (௯௱௮௰௭)
—சாலமன் பாப்பையா

தமக்குத் தீமை செய்வதற்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்? (௯௱௮௰௭)
—மு. கருணாநிதி

இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.   (௯௱௮௰௮ - 988)
 

‘சால்பு உடைமை’ என்னும் பண்பு ஒருவனிடம் உறுதி பெற்றிருந்தால், அவனுக்கு வரும் வறுமைத் துன்பங்களும், அவனுக்கு இழிவான நிலைமையைத் தந்துவிடாது (௯௱௮௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று. (௯௱௮௰௮)
—மு. வரதராசன்

சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது. (௯௱௮௰௮)
—சாலமன் பாப்பையா

சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல (௯௱௮௰௮)
—மு. கருணாநிதி

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.   (௯௱௮௰௯ - 989)
 

சால்புடைமை என்னும் கடலுக்குக் கரை என்று சொல்லப்படும் பெரியோர்கள், ஏனைய கடல்களும் கரையுள் நில்லாமல் காலம் திரிந்த போதும், தாம் நிலைதிரிய மாட்டார்கள் (௯௱௮௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர். (௯௱௮௰௯)
—மு. வரதராசன்

சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார். (௯௱௮௰௯)
—சாலமன் பாப்பையா

தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள் (௯௱௮௰௯)
—மு. கருணாநிதி

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.   (௯௱௯௰ - 990)
 

பல குணங்களாலும் நிறைந்தவரும் தம் தன்மைகளில் குன்றுவார்களானால், இந்தப் பெரிய பூமி தானும் தன் பாரத்தைத் தாங்காததாய் அழிந்து போகும் (௯௱௯௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய் விடும். (௯௱௯௰)
—மு. வரதராசன்

சான்றோர் தம் சான்றாண்மைப் பண்பிலிருந்து விலகிக் குறைவுபடுவார் என்றால், இப்பூவுலகம் தன் பாரம் தாங்காமல் அழியும். (௯௱௯௰)
—சாலமன் பாப்பையா

சான்றோரின் நற்பண்பே குறையத்தொடங்கினால் அதனை இந்த உலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது (௯௱௯௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: கரகரப்பிரியா  |  தாளம்: ஆதி
பல்லவி:
குணநலமே பரவும் சான்றாண்மை
கொள்கை அறிந்தே செய்யும் நாளும் தன் கடமை

அநுபல்லவி:
குணநலம் சான்றோர் நலனாகவே விளங்கும்
கொல்லாமை பிறர் தீமை சொல்லாமையும் வழங்கும்

சரணம்:
அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்து சால்பும் ஊன்றிய தூணாகும் மேன்மையது
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பென்னும் குறட்பரல்

இயற்கை ஊழி பெயர்ந்தாலும் தாம் பெயரார்
இன்மை ஆயிடினும் திண்மையே உடையார்
எண்ண மேவும் கடலே
என்னும் வாழ்வின் பொருளே

ஈடில்லாத நிறை கேடில்லாத பொறை
கூடி வாழும் முறை தேடியாரும் வரும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22