நிலையாமை

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.   (௩௱௩௰௧ - 331)
 

நிலைத்து நில்லாத பொருள்களை எல்லாம் நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற இழிவான அறிவுடைமை மிகவும் தாழ்ந்ததாகும் (௩௱௩௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும். (௩௱௩௰௧)
—மு. வரதராசன்

நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது. (௩௱௩௰௧)
—சாலமன் பாப்பையா

நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும் (௩௱௩௰௧)
—மு. கருணாநிதி

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.   (௩௱௩௰௨ - 332)
 

பெரும்பொருள் வந்தடைதல், கூத்தாடுமிடத்திலே கூட்டம் வந்து கூடுவதைப் போன்றதாகும்; அது போய்விடுவதும் அக்கூட்டம் கலைவதைப் போன்றதே (௩௱௩௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது. (௩௱௩௰௨)
—மு. வரதராசன்

நாடக அரங்கிற்கு கூட்டம் வருவது போல் சிறுகச் சிறுக செல்வம் சேரும். நாடகம் முடிந்ததும கூட்டம் கலைவது போல் மொத்தமாய்ப் போய்விடும். (௩௱௩௰௨)
—சாலமன் பாப்பையா

சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும் (௩௱௩௰௨)
—மு. கருணாநிதி

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.   (௩௱௩௰௩ - 333)
 

நிலைத்து இராத தன்மையுடையது செல்வம்; அதனை ஒருவன் அடைந்தால், அது நிலைப்பதற்கான அறமான செயல்களை அப்போதே செய்ய வேண்டும் (௩௱௩௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும். (௩௱௩௰௩)
—மு. வரதராசன்

நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க. (௩௱௩௰௩)
—சாலமன் பாப்பையா

நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும் (௩௱௩௰௩)
—மு. கருணாநிதி

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.   (௩௱௩௰௪ - 334)
 

வாழ்வை ஆராய்ந்து உண்மை உணர்பவரைப் பெற்றால், ‘நாள்’ என்பது ஒரு கால அளவு போலத் தன்னைக் காட்டி உயிரை அறுக்கும் வாள் என்பது விளங்கும் (௩௱௩௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது. (௩௱௩௰௪)
—மு. வரதராசன்

நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும். (௩௱௩௰௪)
—சாலமன் பாப்பையா

வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள் (௩௱௩௰௪)
—மு. கருணாநிதி

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.   (௩௱௩௰௫ - 335)
 

நாக்கு உள்ளே இழுத்துக் கொண்டு விக்குள் மேலாக எழுந்து வருவதற்கு முன்பாகவே, நல்ல செயல்களை விரைவாகச் செய்ய வேண்டும் (௩௱௩௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும். (௩௱௩௰௫)
—மு. வரதராசன்

நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும். (௩௱௩௰௫)
—சாலமன் பாப்பையா

வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும் (௩௱௩௰௫)
—மு. கருணாநிதி

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.   (௩௱௩௰௬ - 336)
 

‘நேற்று உள்ளவனாக இருந்த ஒருவன், இன்று இல்லை’ என்னும் நிலையாமையாகிய பெருமையை உடையது தான் இந்த உலகம் ஆகும் (௩௱௩௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம். (௩௱௩௰௬)
—மு. வரதராசன்

நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம். (௩௱௩௰௬)
—சாலமன் பாப்பையா

இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகப் கொண்டதாகும் (௩௱௩௰௬)
—மு. கருணாநிதி

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.   (௩௱௩௰௭ - 337)
 

அடுத்த பொழுதில் உயிர் வாழும், வாழாது என்பதைத் தெரியாதவர்கள் நினைப்பது, கோடியும் அல்ல; அதன்மேலும் அளவற்ற பலவாகும் (௩௱௩௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள். (௩௱௩௰௭)
—மு. வரதராசன்

உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உ‌டம்பின் நிலையற்ற தன்மையை ஒரு கணப்பொழுதும் அறிய இயலாதவர் கோடிக்கும் மேலான நினைவுகளை எண்ணி நிற்பர். (௩௱௩௰௭)
—சாலமன் பாப்பையா

ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள் (௩௱௩௰௭)
—மு. கருணாநிதி

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.   (௩௱௩௰௮ - 338)
 

தான் இருந்த கூடானது தனித்துக் கிடக்கவும், பறவை பறந்து வெளியேறிப் போய்விட்டது போன்றதுதான் உடலோடு உயிருக்குள்ள தொடர்பு (௩௱௩௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது. (௩௱௩௰௮)
—மு. வரதராசன்

உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே. (௩௱௩௰௮)
—சாலமன் பாப்பையா

உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான் (௩௱௩௰௮)
—மு. கருணாநிதி

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.   (௩௱௩௰௯ - 339)
 

ஒருவன் செயலில்லாமல் தூங்குவதைப் போன்றது சாக்காடு; அவன் மீண்டும் உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்வது போல்வதே பிறப்பு (௩௱௩௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது. (௩௱௩௰௯)
—மு. வரதராசன்

உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு. (௩௱௩௰௯)
—சாலமன் பாப்பையா

நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு (௩௱௩௰௯)
—மு. கருணாநிதி

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.   (௩௱௪௰ - 340)
 

உடலினுள் ஒரு மூலையிலே குடியிருந்த உயிருக்கு, நிலையாக நுழைந்து தங்கியிருப்பதற்குரிய தகுதிவாய்ந்த ஓர் இடம் அமையவில்லை போலும்! (௩௱௪௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ. (௩௱௪௰)
—மு. வரதராசன்

உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்! (௩௱௪௰)
—சாலமன் பாப்பையா

உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது (௩௱௪௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: மோகனம்  |  தாளம்: ஆதி
பல்லவி:
விழிப்புடன் செல் மனமே - என்றும்
விழிப்புடன் செல் மனமே

அநுபல்லவி:
விழிப்புடன் சென்றே நல்வினையெல்லாம் முடித்திடு
வீழ்வதும் வாழ்வதும் இயல்பெனக் கருதிடு

சரணம்:
"கூத்தாட்டவை குழாத்தற்றே பெரும் செல்வம்
கொண்டதன் போக்கும் அது விளிந்தற்றெனவே" செல்லும்
பார்த்தது தெளிந்திந்தப் பாருக்கெடுத்துரைப்பாய்
பயன்படும் செல்வமுள்ளபோதே நயன் விளைப்பாய்

நல்ல செயல் புரிய நாள் எண்ணிப் பார்க்காதே
நாள் ஒருவாள் என்னும் நன்மதி தூர்க்காதே
வல்லமை கொண்டுலகில் மகிழ்ந்து முன்னேறு
வழியெல்லாம் திருக்குறள் மொழிநயம் கூறு




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22