பொறையுடைமை

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.   (௱௫௰௧ - 151)
 

தன்னை அகழ்பவரையும் தாங்கும் நிலத்தைப் போல், தம்மை இகழ்வாரையும் பொறுத்தலே மிகச் சிறந்த பண்பாகும் (௱௫௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும் (௱௫௰௧)
—மு. வரதராசன்

தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம் (௱௫௰௧)
—சாலமன் பாப்பையா

தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும் (௱௫௰௧)
—மு. கருணாநிதி

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.   (௱௫௰௨ - 152)
 

அளவு கடந்து செய்த தீங்கையும் எப்போதும் பொறுத்துக் கொள்ள வேண்டும்; அதனை நினையாமலே மறந்து விடுதல் அதனிலும் நன்மையாகும் (௱௫௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது. (௱௫௰௨)
—மு. வரதராசன்

தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது. (௱௫௰௨)
—சாலமன் பாப்பையா

அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும் (௱௫௰௨)
—மு. கருணாநிதி

இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.   (௱௫௰௩ - 153)
 

வறுமையுள்ளும் வறுமையாவது விருந்தைப் போற்றாமல் விடுதல்; வலிமையுள்ளும் வலிமையாவது அறிவிலார் செயலைப் பொறுத்தல் ஆகும் (௱௫௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும். (௱௫௰௩)
—மு. வரதராசன்

வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது (௱௫௰௩)
—சாலமன் பாப்பையா

வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது (௱௫௰௩)
—மு. கருணாநிதி

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.   (௱௫௰௪ - 154)
 

நிறை உடையனாயிருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமலிருக்க வேண்டுமானால், அவன் பொறையுடைமையைப் போற்றிக் கைக்கொள்ள வேண்டும் (௱௫௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும். (௱௫௰௪)
—மு. வரதராசன்

சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும் (௱௫௰௪)
—சாலமன் பாப்பையா

பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும் (௱௫௰௪)
—மு. கருணாநிதி

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.   (௱௫௰௫ - 155)
 

தமக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரை ஒரு பொருளாக எவரும் மதியார்; ஆனால், பொறுத்தவர்களைப் பொன்போற் பொதிந்து வைப்பார்கள் (௱௫௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர். (௱௫௰௫)
—மு. வரதராசன்

தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர். (௱௫௰௫)
—சாலமன் பாப்பையா

தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள் பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள் (௱௫௰௫)
—மு. கருணாநிதி

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.   (௱௫௰௬ - 156)
 

தீங்கு செய்தவர்களை தண்டித்தவர்களுக்கு அன்று ஒரு நாளைக்கே இன்பம்; ஆனால், பொறுத்தவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் உண்டு (௱௫௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு. (௱௫௰௬)
—மு. வரதராசன்

தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும். (௱௫௰௬)
—சாலமன் பாப்பையா

தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும் மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும் (௱௫௰௬)
—மு. கருணாநிதி

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.   (௱௫௰௭ - 157)
 

தகுதியில்லாதவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், அதனால் மிகவும் மனம் நொந்து அவருக்குத் தீமை செய்யாதிருத்தல் நல்லது (௱௫௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது. (௱௫௰௭)
—மு. வரதராசன்

கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது (௱௫௰௭)
—சாலமன் பாப்பையா

பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும் (௱௫௰௭)
—மு. கருணாநிதி

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.   (௱௫௰௮ - 158)
 

செருக்கு மிகுதியால் தீமை செய்தவர்களை தாம், தம்முடைய பொறுமை என்னும் தகுதியினால் வென்று விட வேண்டும் (௱௫௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும். (௱௫௰௮)
—மு. வரதராசன்

மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக. (௱௫௰௮)
—சாலமன் பாப்பையா

ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம் (௱௫௰௮)
—மு. கருணாநிதி

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.   (௱௫௰௯ - 159)
 

எல்லை மீறி நடப்பவரின் வாயிற் பிறக்கும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள், துறவியர் போலத் தூய்மையாளர் ஆவர் (௱௫௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர். (௱௫௰௯)
—மு. வரதராசன்

நெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப் போலத் தூயரே. (௱௫௰௯)
—சாலமன் பாப்பையா

எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள் (௱௫௰௯)
—மு. கருணாநிதி

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.   (௱௬௰ - 160)
 

உணவு உண்ணாமல் நோன்பு கொள்பவர், பிறர் சொல்லும் கொடுஞ்சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையிலே தான் பெரியவர் ஆவர் (௱௬௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர். (௱௬௰)
—மு. வரதராசன்

பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார். (௱௬௰)
—சாலமன் பாப்பையா

பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள் (௱௬௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: பிருந்தாவனம்  |  தாளம்: ஆதி
பல்லவி:
பொறுமையே நமக்குப் புகழணியாகும்
போற்றிடுவோம் இதை நாம் மிக நாளும்

அநுபல்லவி:
வறுமையால் வாடினும் வளம்பல கூடினும்
வசையினும் வாழ்த்தினும்
மனம் தடுமாறிடாப்

சரணம்:
அகழ்வாரைத் தாங்குகின்ற நிலம் போன்ற தன்மை
அமையப் பெற்றாலதுவே அளித்திடும் வன்மை
இகழ்வாரையும் பொறுத்தே இயற்றுவோம் நன்மை
இதுதானே வள்ளுவம் இசைத்திடும் உண்மை

"ஒறுத்தார்க்கு இவ்வுலகில் ஒருநாளே இன்பம்
பொறுத்தார்க்கு வரும் புகழ் பொன்றும் துணையும்" என்னும்
பெறத்தகும் கருத்திதால் இயேசுவைக் காண்போம்
பிறர் நலமே கருதும் பேரன்பு பூண்போம்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22