பண்புடைமை

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.   (௯௱௯௰௧ - 991)
 

எல்லாரிடத்தும் எளிய செவ்வியராதல் உடையவருக்கு பண்புடைமை என்னும் நன்னெறியினை அடைந்து சிறப்படைதலும், எளிதென்று சொல்லுவார்கள் (௯௱௯௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர். (௯௱௯௰௧)
—மு. வரதராசன்

எவரும் தன்னை எளிதாகக் கண்டு பேசும் நிலையில் வாழ்ந்தால், பண்புடைமை என்னும் நல்வழியை அடைவது எளிது என்று நூலோர் கூறுவர். (௯௱௯௰௧)
—சாலமன் பாப்பையா

யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும் (௯௱௯௰௧)
—மு. கருணாநிதி

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.   (௯௱௯௰௨ - 992)
 

பிறர்மேல் அன்புடைமையும், உலகத்தோடு அமைந்த குடியிலே பிறத்தலும், ஆகிய இவ்விரண்டும் ஒத்து வருதல் பண்புடைமையால் என்று உலகத்தார் சொல்லுவர் (௯௱௯௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ் விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும். (௯௱௯௰௨)
—மு. வரதராசன்

எல்லாரிடமும் அன்புள்ளவனாக வாழ்வது. உலகத்தோடு ஒத்து வாழும் குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகளாகும். (௯௱௯௰௨)
—சாலமன் பாப்பையா

அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும் (௯௱௯௰௨)
—மு. கருணாநிதி

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.   (௯௱௯௰௩ - 993)
 

உடம்பால் ஒருவரோடு ஒருவர் ஒத்திருத்தல், ஒருவனுக்கு நல்லவரோடு சமநிலையைத் தந்துவிடாது; செறியத் தகுந்த பண்பால் ஒத்திருத்தலே சமநிலை தரும் (௯௱௯௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று, பொருந்தத்தக்கப் பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும். (௯௱௯௰௩)
—மு. வரதராசன்

உறுப்புக்களின் தோற்றத்தால் பிறருடன் ஒத்திருப்பது ஒப்பு ஆகாது; உள்ளத்துடன் இணையும் பண்பால் பிறருடன் ஒத்திருப்பதே ஒப்பு ஆகும். (௯௱௯௰௩)
—சாலமன் பாப்பையா

நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியல்ல; நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர் (௯௱௯௰௩)
—மு. கருணாநிதி

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.   (௯௱௯௰௪ - 994)
 

நீதியையும் அறத்தையும் விரும்புதலால், பிறருக்கும் தமக்கும் பயன்படுதலை உடையவரது பண்பினை, உலகத்தார் அனைவரும் போற்றிக் கொண்டாடிப் புகழ்வார்கள் (௯௱௯௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர். (௯௱௯௰௪)
—மு. வரதராசன்

நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர். (௯௱௯௰௪)
—சாலமன் பாப்பையா

நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும் (௯௱௯௰௪)
—மு. கருணாநிதி

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.   (௯௱௯௰௫ - 995)
 

தன்னை இகழ்தல் விளையாட்டின் போதும் துன்பமானது (௯௱௯௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன. (௯௱௯௰௫)
—மு. வரதராசன்

விளையாட்டில் விளையாட்டிற்காகக்கூட ஒருவனை இகழ்ந்து ஏளனமாகப் பேசுவது அவனுக்கு மன வருத்தத்தைத் தரும்; அதனால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறியும் திறம் உள்ளவர்கள், பகைவர்களிடம் கூட ஏளனமாகப் பேசார். (௯௱௯௰௫)
—சாலமன் பாப்பையா

விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும் அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள் (௯௱௯௰௫)
—மு. கருணாநிதி

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.   (௯௱௯௰௬ - 996)
 

பண்புடையாரிடத்தே படுதலால் உலகியல் எப்போதும் உளதானதாய் வந்து கொண்டிருக்கின்றது; அங்ஙனம் இல்லையானால், அது மண்ணினுட் புகுந்து மாய்ந்து விடும் (௯௱௯௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது, அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும். (௯௱௯௰௬)
—மு. வரதராசன்

பண்புடையவர்கள் வாழ்வதால்தான் மக்கள் வாழ்க்கை எப்போதும் நிலைத்து இருக்கிறது. அவர்கள் மட்டும் வாழாது போவார் என்றால். மனித வாழ்க்கை மண்ணுக்குள் புகுந்து மடிந்து போகும். (௯௱௯௰௬)
—சாலமன் பாப்பையா

உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும் இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும் (௯௱௯௰௬)
—மு. கருணாநிதி

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.   (௯௱௯௰௭ - 997)
 

நன்மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர்கள், அரத்தைப் போலக் கூர்மை உடையவர் என்றாலும், ஓரறிவேயுள்ள மரத்தைப் போன்றவர்கள் ஆவர் (௯௱௯௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர். (௯௱௯௰௭)
—மு. வரதராசன்

மனிதப்பண்பு இல்லாதவர்கள் அரம் போல அறிவுக்கூர்மை படைத்தவர் என்றாலும் ஓர் அறிவு படைத்த மரத்தைப் போன்றோரே. (௯௱௯௰௭)
—சாலமன் பாப்பையா

அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார் (௯௱௯௰௭)
—மு. கருணாநிதி

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.   (௯௱௯௰௮ - 998)
 

தம்மோடும் நட்பினைச் செய்யாதவராகப் பகைமையையே செய்து நடப்பவரிடத்தும், தாம் பண்புடையவராக உதவி புரியாதிருத்தல், சான்றோருக்குக் குற்றமாகும் (௯௱௯௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நட்பு கொள்ள முடியாதவராய்த் தீயவைச் செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும். (௯௱௯௰௮)
—மு. வரதராசன்

தம்முடன் நட்புச் செய்யாமல் பகைமை கொண்டு தீமையே செய்பவர்க்கும் கூடப் பண்பற்றவராய் வாழ்வது இழுக்கே. (௯௱௯௰௮)
—சாலமன் பாப்பையா

நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்து கொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும் (௯௱௯௰௮)
—மு. கருணாநிதி

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.   (௯௱௯௰௯ - 999)
 

பண்பில்லாமையாலே ஒருவரோடு கலந்து பேசி உள்ளம் மகிழ மாட்டாதவர்களுக்கு, மிகவும் பெரிய இந்த உலகமானது பகற்பொழுதிலும் இருண்டு கிடப்பதாகும் (௯௱௯௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம். (௯௱௯௰௯)
—மு. வரதராசன்

நல்ல பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூட இருளிலே இருப்பது போலவாம். (௯௱௯௰௯)
—சாலமன் பாப்பையா

நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும் (௯௱௯௰௯)
—மு. கருணாநிதி

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.   ( - 1000)
 

பண்பில்லாதவன் முன்னை நல்வினையாலே பெற்ற பெருஞ் செல்வமானது, நல்ல ஆவின்பால் கலத்தின் குற்றத்தால் திரிதல் போல, ஒருவருக்கும் பயன்படாமல் போகும் (௲)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும். (௲)
—மு. வரதராசன்

நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம். (௲)
—சாலமன் பாப்பையா

பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும் (௲)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: கல்யாணி  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
பண்பு கொண்டு வாழ வேண்டுமே - நல்ல
பண்பு கொண்டு வாழ வேண்டுமே

அநுபல்லவி:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கின் பங்கினைக் கண்டும்

சரணம்:
அரம் போலும் கூர்மையுடையோர் ஆன போதிலும்
அழகாகவே உடலுறுப்புகள் அமைந்திருந் தாலும்
மரம் போல்வர் மக்கள் பண்பில்லாதவர் என்னும்
மாறில்லாமல் பகைவருள்ளும் மலர்ந்திட நண்ணும்

பகற் காலமும் இரவாகிடும் பாலும் நஞ்சாகும்
பண்பில்லாதார் செல்வமும் அதுபோலவே காணும்
புகழும் நயனுடையார் நன்றி புரியும் தன்மையால்
பூமி உள்ளது என்னும் உண்மையைப் புகலும் குறளதால்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22