படர்மெலிந்திரங்கல்

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.   (௲௱௬௰௧ - 1161)
 

பிரிவுத் துன்பமான இந்த நோயை, பிறர் அறியாதபடி மறைப்பேன்; ஆனால், அ·து ஊற்று நீரைப் போல மேன்மேலும் சுரந்து சுரந்து பெருகுகின்றதே (௲௱௬௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது. (௲௱௬௰௧)
—மு. வரதராசன்

என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்துவிடக்கூடாது என்று மறைக்கவே செய்தேன்; ஆனாலும் இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல மறைக்க மறைக்க என் துன்பமும் பெருகவே செய்கிறது. (௲௱௬௰௧)
—சாலமன் பாப்பையா

இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும் (௲௱௬௰௧)
—மு. கருணாநிதி

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.   (௲௱௬௰௨ - 1162)
 

காமநோயை முழுவதும் மூடி மறைக்கவும் முடியவில்லை; நோயைச் செய்த காதலருக்குத் தூது அனுப்புவதும் என் பெண்ணைக்கு நாணம் தருகின்றதே! (௲௱௬௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது. (௲௱௬௰௨)
—மு. வரதராசன்

இந்தத் துன்பத்தை என்னால் மறைக்கவும் முடியவில்லை. துன்பத்தைத் தந்த இவருக்கு (எழுத்தில் தொலைபேசியில்) இதைச் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது. (௲௱௬௰௨)
—சாலமன் பாப்பையா

காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை; இதற்குக் காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை (௲௱௬௰௨)
—மு. கருணாநிதி

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.   (௲௱௬௰௩ - 1163)
 

பிரிவுத் துயராலே நலியும் என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு, காமமும் நாணமும் இருபாலும் சம எடையாகத் தூங்குகின்றனவே? (௲௱௬௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

துன்பத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன. (௲௱௬௰௩)
—மு. வரதராசன்

காதல் துன்பத்தையும், அவரிடம் சொல்ல முடியாமல் நான்படும் வெட்கத்ததையும் தாங்க முடியாத என் உடம்பில், என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு அதன் ஒரு புறத்தில் காதல் நோயும், மறுமுனையில் வெட்கமும் தொங்குகின்றன. (௲௱௬௰௩)
—சாலமன் பாப்பையா

பிரிவைத் தாங்கமுடியாது உயிர் துடிக்கும் என் உடலானது, ஒருபுறம் காதல் நோயும் மறுபுறம் அதனை வெளியிட முடியாத நாணமும் கொண்டு காவடி போல விளங்குகிறது (௲௱௬௰௩)
—மு. கருணாநிதி

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.   (௲௱௬௰௪ - 1164)
 

காமமாகிய நோயும் கடலைப் போலப் பெருகியுள்ளது; அதைக் கடக்கும் தோணியாகிய காதலர்தாம் இப்போது நம்மோடு உடனில்லாமற் போயினர்! (௲௱௬௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான ‌தோணியோ இல்லை. (௲௱௬௰௪)
—மு. வரதராசன்

காதல் துன்பம், வெட்கம், இவ்விரண்டிலும் என்னுள் மிகுந்திருப்பது காதல் துன்பம் என்னும் கடலே; அதைக் கடக்கப் பாதுகாப்பான படகுதான் இல்லை. (௲௱௬௰௪)
—சாலமன் பாப்பையா

காதல் கடல்போலச் சூழ்ந்துகொண்டு வருத்துகிறது ஆனால் அதை நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லை (௲௱௬௰௪)
—மு. கருணாநிதி

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.   (௲௱௬௰௫ - 1165)
 

இனிமையான நட்புடைய நம்மிடையே துன்பத்தைச் செய்யும் நம் காதலர், பகையை வெல்வதற்கான வலிமை வேண்டும் போது என்னதான் செய்வாரோ? (௲௱௬௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

( இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். ( துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ? (௲௱௬௰௫)
—மு. வரதராசன்

இன்பம் தருவதற்குரிய நட்பிலேயே துன்பத்தைத் தரம் இவர், பகைமையில் என்னதான் செய்வாரோ? (௲௱௬௰௫)
—சாலமன் பாப்பையா

நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக்கூடியவர், பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ? (௲௱௬௰௫)
—மு. கருணாநிதி

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.   (௲௱௬௰௬ - 1166)
 

காம இன்பமானது அநுபவிக்கும் போது கடலளவு பெரிதாயுள்ளது; ஆனால், பிரிவுத் துன்பத்தால் வருத்தும் போது, அவ்வருத்தம் கடலை விடப் பெரிதாக உள்ளதே! (௲௱௬௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது. (௲௱௬௰௬)
—மு. வரதராசன்

காதல் மகிழ்ச்சி கடல்போலப் பெரிது; ஆனால் பிரிவினால் அது துன்பம் செய்யத் தொடங்கிவிட்டால் அத்துன்பம் கடலைக் காட்டிலும் பெரிது. (௲௱௬௰௬)
—சாலமன் பாப்பையா

காதல் இன்பம் கடல் போன்றது காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியது (௲௱௬௰௬)
—மு. கருணாநிதி

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.   (௲௱௬௰௭ - 1167)
 

காமமாகிய கடும்புனலை நீந்தி நீந்திக் கரை காணாமல் தவிக்கின்றேன்; இந்த நள்ளிரவிலும், யான் ஒருத்தியே தூங்காமல் வருந்தியபடி உள்ளேன்! (௲௱௬௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காமம் என்னும்‌ வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன். (௲௱௬௰௭)
—மு. வரதராசன்

காதல் துன்பமாகிய கடலை நீந்தியும் என்னால் கரை காண முடியவில்லை. நள்ளிரவுப் பொழுதினும் உறங்காமல் நான் தனியாகவே இருக்கிறேன். (௲௱௬௰௭)
—சாலமன் பாப்பையா

நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கிறேன்; அதனால், காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகிறேன் (௲௱௬௰௭)
—மு. கருணாநிதி

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.   (௲௱௬௰௮ - 1168)
 

இந்த இராக்காலமும், எல்லா உயிர்களையும் உறங்கச் செய்துவிட்டு, என்னையன்றி யாரையும் இந்நள்ளிரவில் தனக்குத் துணையில்லாமல் உள்ளதே! (௲௱௬௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது. (௲௱௬௰௮)
—மு. வரதராசன்

பாவம் இந்த இரவு! இது எல்லா உயிர்களையும் தூங்கச் செய்துவிட்டுத் தனியாகவே இருக்கிறது. இதற்கு என்னைத் தவிர வேறு துணை இல்லை! (௲௱௬௰௮)
—சாலமன் பாப்பையா

`இரவே! உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நீ உறங்கச் செய்துவிட்டுப் பாவம் இப்போது என்னைத்தவிர வேறு துணையில்லாமல் இருக்கிறாய்.' (௲௱௬௰௮)
—மு. கருணாநிதி

கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா.   (௲௱௬௰௯ - 1169)
 

பிரிவுத் துயராலே வருந்தும் போது மிக நீண்டது போலக் கழிகின்ற இரவுப் பொழுதானது, நம்மைப் பிரிந்து போன காதலரினும் மிகமிகக் கொடுமையானது (௲௱௬௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

( பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை. (௲௱௬௰௯)
—மு. வரதராசன்

இப்போதெல்லாம் இரவுகள் கழிவதற்கு நெடும்பொழுது ஆகிறது; என்னைப் பிரிந்து போன என் கணவரின் கொடுமையிலும் இவை மிகக் கொடுமையாக இருக்கின்றன. (௲௱௬௰௯)
—சாலமன் பாப்பையா

இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமை இருக்கிறதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளது (௲௱௬௰௯)
—மு. கருணாநிதி

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.   (௲௱௭௰ - 1170)
 

என் உள்ளத்தைப் போலவே, உடலும், அவர் இருக்கும் இடத்திற்கே இப்போதே செல்ல முடிந்ததானால், என் கண்கள் இப்படிக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்தாவே! (௲௱௭௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என்‌ கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை. (௲௱௭௰)
—மு. வரதராசன்

என் மனம் போலவே என் கண்களும் என்னவர் இருக்கும் ஊருக்குச் செல்ல முடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்தமாட்டா. (௲௱௭௰)
—சாலமன் பாப்பையா

காதலர் இருக்குமிடத்துக்கு என் நெஞ்சத்தைப் போலச் செல்ல முடியுமானால், என் கருவிழிகள், அவரைக் காண்பதற்குக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது (௲௱௭௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: குறிஞ்சி  |  தாளம்: ஆதி
பல்லவி:
மறைப்பேன் மன்யான் இஃதோ
நோயை இறைப்பவர்க்கு
ஊற்று நீர் போல மிகும்
உள்ளம் படர் மெலிந்திரங்கும்

அநுபல்லவி:
மறைக்கவும் முடியாமல் மனம் அலைமோதுதே
உரைக்கவும் காதலர் பால்
நாணம் மேலோங்குதே

சரணம்:
காதல் ஒரு புறமும் நாணம் ஒரு புறமும்
காவடித் தண்டாய் உயிர் சுமக்கும் சுமையானதே
காதல் கடலிருந்தும் காவலாம் தோணியில்லேன்
ஆதலால் பேதைநான ஆற்றும் வகையறியேன்

நள்ளிரவும் தூங்காது நான் தனியாக உள்ளேன்
நாடும் என் காதலரைக் கூடும் விதம் காண்கிலேன்
உள்ளம் போல் நானும் அவர் இடம் சேர முடியுமானால்
வெள்ளமாம் கண்ணீரில் என் கண்களும் நீந்திடுமோ




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22