நடுவு நிலைமை

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.   (௱௰௧ - 111)
 

ஒவ்வொரு பகுதிதோறும் முறையோடு பொருந்தி நடைபெறுமானால், ‘தகுதி’ என்று கூறப்படும் நடுவுநிலைமையும் நல்லதே ஆகும் (௱௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும். (௱௰௧)
—மு. வரதராசன்

பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும். (௱௰௧)
—சாலமன் பாப்பையா

பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும் (௱௰௧)
—மு. கருணாநிதி

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.   (௱௰௨ - 112)
 

செம்மை உடையவனின் பொருள் வளமையானது இடையிலே அழிந்து போகாமல், அவன் வழியினர்க்கும் உறுதியாக நன்மை தரும் (௱௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும். (௱௰௨)
—மு. வரதராசன்

நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும் (௱௰௨)
—சாலமன் பாப்பையா

நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும் (௱௰௨)
—மு. கருணாநிதி

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.   (௱௰௩ - 113)
 

நன்மையே தருவது என்றாலும், நடுவுநிலைமை தவறுதலால் வருகின்ற வளத்தை, அப்போதே உள்ளத்திலிருந்து போக்கி விட வேண்டும் (௱௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும். (௱௰௩)
—மு. வரதராசன்

நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக. (௱௰௩)
—சாலமன் பாப்பையா

நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் (௱௰௩)
—மு. கருணாநிதி

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.   (௱௰௪ - 114)
 

ஒருவர் தகுதியாளர், மற்றவர் தகுதியற்றவர் என்று உரைப்பது எல்லாம், அவரவரது எஞ்சி நிற்கும் புகழும் பழியும் என்பனவற்றால் காணப்படும் (௱௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும். (௱௰௪)
—மு. வரதராசன்

இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம். (௱௰௪)
—சாலமன் பாப்பையா

ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும் (௱௰௪)
—மு. கருணாநிதி

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.   (௱௰௫ - 115)
 

பொருள் கேடும், பொருள் பெருக்கமும் வாழ்வில் இல்லாதன அல்ல; நெஞ்சத்தில் என்றும் நடுவுநிலைமை கோணாதிருப்பதே சான்றோர்க்கு அழகாகும் (௱௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும். (௱௰௫)
—மு. வரதராசன்

தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும். (௱௰௫)
—சாலமன் பாப்பையா

ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும் (௱௰௫)
—மு. கருணாநிதி

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.   (௱௰௬ - 116)
 

தன் நெஞ்சமானது நடுவுநிலைமையிலிருந்து விலகி, தவறு செய்பவன், ‘யான் இதனால் கெடுவேன்’ என்பதனையும் அறிந்து கொள்வானாக! (௱௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும். (௱௰௬)
—மு. வரதராசன்

தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி. (௱௰௬)
—சாலமன் பாப்பையா

நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும் (௱௰௬)
—மு. கருணாநிதி

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.   (௱௰௭ - 117)
 

நடுவுநிலைமையோடு நன்மையான செயல்களிலே நிலைத்திருப்பவனின் தாழ்ச்சியையும் கேடு என்று உலகம் ஒரு போதும் கொள்ளாது (௱௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு. (௱௰௭)
—மு. வரதராசன்

நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார். (௱௰௭)
—சாலமன் பாப்பையா

நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது (௱௰௭)
—மு. கருணாநிதி

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.   (௱௰௮ - 118)
 

தன்னைச் சமனாகச் செய்து கொண்டு, பொருளைச் சீர்தூக்கிக் காட்டும் துலாக்கோல் போல அமைந்து, ஒரு பக்கம் சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகாகும் (௱௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும். (௱௰௮)
—மு. வரதராசன்

முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம். (௱௰௮)
—சாலமன் பாப்பையா

ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும் (௱௰௮)
—மு. கருணாநிதி

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.   (௱௰௯ - 119)
 

உள்ளத்திலே கோணுதலற்ற பண்பை முடிவாகப் பெற்றிருந்தால், சொற்களில் கோணுதல் இல்லாதிருத்தலும் செப்பமாக உணரப்படும் (௱௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம். (௱௰௯)
—மு. வரதராசன்

மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி. (௱௰௯)
—சாலமன் பாப்பையா

நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும் அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை (௱௰௯)
—மு. கருணாநிதி

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.   (௱௨௰ - 120)
 

பிறர் பொருளையும் தமதேபோலக் கருதிக் கொண்டு ஒழுகுதல், வாணிகத்தைச் செய்வார்க்குரிய நல்ல வாணிக மரபாகும் (௱௨௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும். (௱௨௰)
—மு. வரதராசன்

பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும். (௱௨௰)
—சாலமன் பாப்பையா

பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும் (௱௨௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: உமாபரணம்  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
நடு நிலைமை தவறி நடக்காதே
நண்பர் சுற்றமென்றே உன்
நாவை வளைக்காதே

அநுபல்லவி:
அடுபகைவர் எனினும் அன்புடையோர் எனினும்
அறிவுறும் தகுதியால்
சரி சமமாய்க் கருதும்

சரணம்:
மனத்தை ஒளித்துவைத்து மன்றோரம் சொல்பவர்
வாய்மைக்கிடம் தராமல் வழக்கழிவு செய்பவர்
தனத்தை முன் கொட்டினாலும் சாய்ந்துவிடாதே
தன்னலப் பித்துக்கொண்டே தவிறி விழாதே

"செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்புடைத்து" எனும் வள்ளுவம்
ஒப்பும் நின் வாழ்விதனால் உயர்நிலை காணும்
ஓதும் நல்லடக்குமும் ஒழுக்கமும் பூணும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22