கனவுநிலை உரைத்தல்

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.   (௲௨௱௰௧ - 1211)
 

பிரிவால் வருந்திய நான் அயர்ந்து கண் உறங்கிய போது, காதலர் அனுப்பிய தூதோடும் வந்த கனவுக்கு, யான் விருந்தாக என்ன கைம்மாறு செய்யப் போகின்றேன்! (௲௨௱௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்? (௲௨௱௰௧)
—மு. வரதராசன்

என் மன வேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர் அனுப்பிய தூதை என்னிடம் கொண்டு வந்த கனவிற்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன்? (௲௨௱௰௧)
—சாலமன் பாப்பையா

வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது? (௲௨௱௰௧)
—மு. கருணாநிதி

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.   (௲௨௱௰௨ - 1212)
 

யான் விரும்பும் போது என் கண்கள் தூங்குமானால், கனவில் வந்து தோன்றும் காதலருக்கு, யான் தப்பிப் பிழைத்திருக்கும் உண்மையைச் சொல்வேன்! (௲௨௱௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன். (௲௨௱௰௨)
—மு. வரதராசன்

கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன். (௲௨௱௰௨)
—சாலமன் பாப்பையா

நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன் (௲௨௱௰௨)
—மு. கருணாநிதி

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.   (௲௨௱௰௩ - 1213)
 

நனவிலே வந்து நமக்கு அன்பு செய்யாதிருக்கின்ற காதலரை, கனவிலாவது கண்டு மகிழ்வதனால் தான், என் உயிரும் இன்னமும் போகாமல் இருக்கின்றது (௲௨௱௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது. (௲௨௱௰௩)
—மு. வரதராசன்

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது. (௲௨௱௰௩)
—சாலமன் பாப்பையா

நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது (௲௨௱௰௩)
—மு. கருணாநிதி

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.   (௲௨௱௰௪ - 1214)
 

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடிக் கொண்டு வருவதற்காகவே, அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் கனவில் வந்து நமக்குத் தோன்றுகின்றன (௲௨௱௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன. (௲௨௱௰௪)
—மு. வரதராசன்

நேரில் வந்து அன்பு செய்யாதவரை அவர் இருக்கும் இடம் போய் அவரைத் தேடிக்கொண்டு வந்து தருவதால் கனவில் எனக்கு இன்பம் உண்டாகிறது. (௲௨௱௰௪)
—சாலமன் பாப்பையா

நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது (௲௨௱௰௪)
—மு. கருணாநிதி

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.   (௲௨௱௰௫ - 1215)
 

முன்பு நனவில் கண்ட இன்பமும் அந்தப் பொழுதளவிலே இனிதாயிருந்தது; இப்பொழுது காணும் கனவும், காணும் அந்தப் பொழுதிலே நமக்கு இனிதாகவே யுள்ளது (௲௨௱௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது. (௲௨௱௰௫)
—மு. வரதராசன்

முன்பு அவரை நேரில் கண்டு அனுபவித்ததும் சரி, இப்போது கனவில் அவரைக் கண்டு அனுபவிப்பதும் இரண்டுமே எனக்கு இன்பந்தான். (௲௨௱௰௫)
—சாலமன் பாப்பையா

காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது! (௲௨௱௰௫)
—மு. கருணாநிதி

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.   (௲௨௱௰௬ - 1216)
 

நனவு என்று சொல்லப்படும் ஒன்று இல்லையானால், கனவில் வருகின்ற நம் காதலர் நம்மை விட்டு எப்போதுமே பிரியாதிருப்பார் அல்லவோ! (௲௨௱௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர். (௲௨௱௰௬)
—மு. வரதராசன்

கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார். (௲௨௱௰௬)
—சாலமன் பாப்பையா

நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே (௲௨௱௰௬)
—மு. கருணாநிதி

நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.   (௲௨௱௰௭ - 1217)
 

நனவில் வந்து நமக்கு அன்பு செய்வதற்கு நினையாத கொடுமையாளரான காதலர், கனவிலே வந்து மட்டும் நம்மை வருத்துவது தான் எதனாலோ? (௲௨௱௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்? (௲௨௱௰௭)
—மு. வரதராசன்

நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்? (௲௨௱௰௭)
—சாலமன் பாப்பையா

நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்? (௲௨௱௰௭)
—மு. கருணாநிதி

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.   (௲௨௱௰௮ - 1218)
 

தூங்கும் போது கனவிலே என் தோள்மேலராகக் காதலர் வந்திருப்பார்; விழித்து எழும் போதோ, விரைவாக என் நெஞ்சில் உள்ளவராக ஆகின்றார்! (௲௨௱௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்‌. (௲௨௱௰௮)
—மு. வரதராசன்

என் நெஞ்சில் எப்போதும் வாழும் என்னவர் நான் உறங்கும் போது என் தோளின் மேல் கிடக்கிறார். விழித்துக் கொள்ளும் போதோ வேகமாக என் நெஞ்சிற்குள் நுழைந்து கொள்கிறார். (௲௨௱௰௮)
—சாலமன் பாப்பையா

தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார் (௲௨௱௰௮)
—மு. கருணாநிதி

நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.   (௲௨௱௰௯ - 1219)
 

கனவிலே காதலரை வரக்காணாத மகளிரே, நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் குறித்து வருத்தப்பட்டு, மனம் நொந்து கொள்வார்கள் (௲௨௱௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர். (௲௨௱௰௯)
—மு. வரதராசன்

இன்னும் திருமணம் ஆகாத, ஆகிக் கணவனைப் பிரிந்து அறியாத இந்தப் பெண்கள், கனவில் காதலனைக் கண்டு அறியாதவர், ஆதலால், அவர்கள் அறிய நேரில் வந்து என்னிடம் அன்பு காட்டாத என்னவரை அன்பற்றவர் என்று ஏசுகின்றனர். (௲௨௱௰௯)
—சாலமன் பாப்பையா

கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர் (௲௨௱௰௯)
—மு. கருணாநிதி

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.   (௲௨௱௨௰ - 1220)
 

‘நனவிலே நம்மைவிட்டுப் பிரிந்து போனார்’ என்று அவரைப் பற்றி இவ்வூரார் பழித்துப் பேசுகின்றார்களே! இவர்கள் எம்போல் கனவில் தம் காதலரைக் காண்பதில்லையோ? (௲௨௱௨௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நனவில் நம்‌மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ? (௲௨௱௨௰)
—மு. வரதராசன்

என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று என்னவரை ஏசும் இவ்வூர்ப் பெண்கள், அவர் நாளும் என் கனவில் வருவதைக் கண்டு அறியாரோ? (௲௨௱௨௰)
—சாலமன் பாப்பையா

என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ? (௲௨௱௨௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: பிலகரி  |  தாளம்: ஆதி
பல்லவி:
காதலர் தூதோடு வந்த கனவினுக்கு
யாது செய்வேன்கொல் விருந்து - தோழி
யாது செய்வேன்கொல் விருந்து

அநுபல்லவி:
போதெல்லாம் நினைந்தவர் புலம்பல் உற்றேனுக்கு
பொன்னான செய்தி சொல்லும்
கண்ணாளர் கன விதுவே

சரணம்:
மஞ்சத்தில் வந்தமர்வார் மங்கை எனைத் தொடுவார்
மான் பிணைநீயே என்பார் நான் துணை வந்தேன் என்பார்
துஞ்சுங்கால் தோள் மேலராகி விழிக்குங்கால்
நெஞ்சத்த ராவார் விரைந் தென்ன மாயமடி

நனவிலே வந்து அன்பு செய்யாத காதலரைக்
கனவிலே காண்பதால்தான் என்னுயிரும் உள்ளது
கனவினால் உண்டாகும் காமம் நனவினால்
நல்காரை நாடித் தரும் என்றே குறளும் சொல்லும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22