மானம்

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.   (௯௱௬௰௧ - 961)
 

மிகவும் இன்றியமையாத சிறப்புக்களை உடையவாயினும், உயர்குடியில் பிறந்தவர், தாழ்ச்சி வரும்படியான செயல்களைச் செய்யாமல் விட வேண்டும் (௯௱௬௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும். (௯௱௬௰௧)
—மு. வரதராசன்

ஒன்று இல்லாமல் எதுவும் நடைபெறாது என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும் அதைச் செய்தால் குடும்பத்திற்கு இழிவு வரும் என்றால் அந்த ஒன்றைச் செய்யாதே. (௯௱௬௰௧)
—சாலமன் பாப்பையா

கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும் (௯௱௬௰௧)
—மு. கருணாநிதி

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.   (௯௱௬௰௨ - 962)
 

தமக்குச் சிறப்பையே தருமானாலும், தம் குடியின் சிறப்புக்குப் பொருந்தாத செயல்களை, புகழும் மானமும் நிலைப்பதை விரும்புகிறவர்கள் செய்ய மாட்டார்கள் (௯௱௬௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார். (௯௱௬௰௨)
—மு. வரதராசன்

புகழுடன் தன் குடும்பப் பெருமையை நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப் பெருமைக்கு ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார். (௯௱௬௰௨)
—சாலமன் பாப்பையா

புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார் (௯௱௬௰௨)
—மு. கருணாநிதி

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.   (௯௱௬௰௩ - 963)
 

உயர் குடியிலே பிறந்தவர்களுக்கு, நிறைந்த செல்வம் உண்டானபோது, பணிவுடைமை வேண்டும்; செல்வம் சுருங்கி வறுமை உண்டாகும்போது உயர்வு வேண்டும் (௯௱௬௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும். (௯௱௬௰௩)
—மு. வரதராசன்

நல்ல குடும்பத்தில் பிறந்து மானம் காக்க எண்ணுவோர் செல்வம் நிறைந்த காலத்தில் பிறரிடம் பணிவுடனும், வறுமை வந்த காலத்தில் தாழ்ந்து விட்டுக் கொடுக்காமலும் நடந்து கொள்ள வேண்டும். (௯௱௬௰௩)
—சாலமன் பாப்பையா

உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும் (௯௱௬௰௩)
—மு. கருணாநிதி

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.   (௯௱௬௰௪ - 964)
 

நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் உயர்வான நிலையை விட்டுத் தாழ்ந்த விடத்து, தலையைவிட்டு அகன்று விழுந்த மயிரைப் போல இழிவு அடைவார்கள் (௯௱௬௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர். (௯௱௬௰௪)
—மு. வரதராசன்

நல்ல குடும்பத்தில் பிறந்தவர் மானம் காக்காமல் தம் உயர்ந்த நிலையை விட்டுவிட்டுத் தாழ்ந்தால், தலையை விட்டு விழுந்த மயிரைப் போன்றவர் ஆவார். (௯௱௬௰௪)
—சாலமன் பாப்பையா

மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார் (௯௱௬௰௪)
—மு. கருணாநிதி

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.   (௯௱௬௰௫ - 965)
 

குடிப்பிறப்பாலே குன்று போல உயர்ந்த பெருமையை அடைந்தவர்களும், குன்றியளவு தகுதியற்ற செயல்களைச் செய்தாரானால் தாழ்ச்சி அடைவார்கள் (௯௱௬௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர். (௯௱௬௰௫)
—மு. வரதராசன்

நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார். (௯௱௬௰௫)
—சாலமன் பாப்பையா

குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள் (௯௱௬௰௫)
—மு. கருணாநிதி

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.   (௯௱௬௰௬ - 966)
 

தன்னை இகழ்பவர்களின் முன்பாக மானமிழந்து நிற்கும் நிலைமை புகழையும் தராது (௯௱௬௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன. (௯௱௬௰௬)
—மு. வரதராசன்

உயிர் வாழும் பொருட்டு மானத்தை விட்டுவிட்டுத் தம்மை இகழ்பவர் பின்னே சென்று வாழும் வாழ்வு, இம்மைக்குப் புகழ் தராது. மறுமைக்கு விண்ணுலகிலும் சேர்க்காது; வேறு என்னதான் தரும் அது? (௯௱௬௰௬)
—சாலமன் பாப்பையா

இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத சொர்க்கமா கிடைக்கும்? (௯௱௬௰௬)
—மு. கருணாநிதி

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.   (௯௱௬௰௭ - 967)
 

தன்னை இகழ்பவரின் பின்னே சென்று பொருள் பெற்று, அதனால் உயிர்வாழ்தலைவிட, இறந்தவன் என்று சொல்லப் படுதலே ஒருவனுக்கு நன்மை ஆகும் (௯௱௬௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது. (௯௱௬௰௭)
—மு. வரதராசன்

இகழுபவர் பின்னே சென்று அவர் தரும் பொருளை, பதவியைப் பெற்று உயிர்வாழ்வதைக் காட்டிலும் அவன் இறந்துபோனான் என்று சொல்லப்படுவது அவனுக்கு நல்லதாம். (௯௱௬௰௭)
—சாலமன் பாப்பையா

தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல் (௯௱௬௰௭)
—மு. கருணாநிதி

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.   (௯௱௬௰௮ - 968)
 

தம் குடிக்குரிய பெருந்தன்மை அழியும் நிலையில், தான் இறந்து போகாமல், மானம்விட்டு உடம்பைக் காப்பது பிறவிப் பிணிக்கு ஏற்ற மருந்தாகுமோ? (௯௱௬௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ. (௯௱௬௰௮)
—மு. வரதராசன்

குடும்பப் பெருமைக்கான மானம் அழிய நேர்ந்தபோது இறந்து போகாமல் இந்த உடம்பைக் காத்துவாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்து ஆகுமோ? (௯௱௬௰௮)
—சாலமன் பாப்பையா

சாகாமலே இருக்க மருந்து கிடையாது அப்படி இருக்கும்போது உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும் (௯௱௬௰௮)
—மு. கருணாநிதி

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.   (௯௱௬௰௯ - 969)
 

தன் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர்கள், மானம் இழந்து உயிரைக் காக்கும் நிலைமை வந்தால், அப்போதே உயிரை விட்டுவிடுவார்கள் (௯௱௬௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர். (௯௱௬௰௯)
—மு. வரதராசன்

மயிர்எலாம் இழந்துவிட்டால் உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப் பெருமை எல்லாம் அழிய நேர்ந்தால் உயிர் வாழமாட்டார். (௯௱௬௰௯)
—சாலமன் பாப்பையா

உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள் அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள் (௯௱௬௰௯)
—மு. கருணாநிதி

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.   (௯௱௭௰ - 970)
 

தமக்கு ஓர் இழிவு வந்த போது உயிரை விட்டு விட்ட மானமுள்ளவரது புகழ்வடிவினை, எக்காலத்திலும் உலகத்தார் கைதொழுது போற்றித் துதிப்பார்கள் (௯௱௭௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள். (௯௱௭௰)
—மு. வரதராசன்

தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர். (௯௱௭௰)
—சாலமன் பாப்பையா

மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும் (௯௱௭௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: அம்சத்வனி  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
மான வாழ்வு வாழ வேண்டுமே - தன்
மான வாழ்வு வாழ வேண்டுமே

அநுபல்லவி:
ஆன குடியின் பெருமை தோன்ற
அஞ்சாமையிற் சிங்கம் போன்ற
ஆண்மை கொண்டு மேன்மை கண்டு
அல்லல் வரினும் எதிர்த்து நின்று

சரணம்:
ஒட்டார் பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்றென்னும் குறள் நெறியே
சுட்டாலும் வெண்மை தரும் சங்கெனும் நல்லினவழியே
சுருக்கத்தினில் உயர்வு வேண்டும் பெருக்கத்தினில் பணிவு வேண்டும்

தன்னிலையிற் பிரியாமல் தகைமை என்றும் குறையாமல்
தான் பசியால் வருந்திடினும் தன்மானம் அழியாமல்
மன்னுகின்ற புகழ் விளக்கம் மாசு சிறிதும் படியாமல்
மயிர் நீப்பினும் உயிர் நீத்திடும் மானமிக்க கவரி மான்போல்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22