மருந்து

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.   (௯௱௪௰௧ - 941)
 

ஒருவனுடைய உணவும் செயல்களும் அளவுக்கு மேல் கூடினாலும், குறைந்தாலும், மருத்துவ நூலோர் வாதம் முதலாக எண்ணி வகுத்த மூன்றும் நோயைச் செய்யும் (௯௱௪௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும். (௯௱௪௰௧)
—மு. வரதராசன்

மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும். (௯௱௪௰௧)
—சாலமன் பாப்பையா

வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும் (௯௱௪௰௧)
—மு. கருணாநிதி

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.   (௯௱௪௰௨ - 942)
 

முன் உண்டது செரித்ததைத் தெளிவாக அறிந்து, அதன் பின்னரே உண்பானானால், அவனுடைய உடலுக்கு ‘மருந்து’ என்னும் எதுவுமே வேண்டாம் (௯௱௪௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை. (௯௱௪௰௨)
—மு. வரதராசன்

ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை. (௯௱௪௰௨)
—சாலமன் பாப்பையா

உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை (௯௱௪௰௨)
—மு. கருணாநிதி

அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.   (௯௱௪௰௩ - 943)
 

முன்னுண்டது அற்றபின், உண்பதனையும் அளவாக உண்ண வேண்டும்; அதுவே பெறுவதற்கரியதான இந்த மானிட யாக்கையை நெடுங்காலத்திற்குக் காப்பாற்றும் வழி (௯௱௪௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும். (௯௱௪௰௩)
—மு. வரதராசன்

முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி. (௯௱௪௰௩)
—சாலமன் பாப்பையா

உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும் (௯௱௪௰௩)
—மு. கருணாநிதி

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.   (௯௱௪௰௪ - 944)
 

முன்னுண்டது அற்றதை அறிந்து, மிகவும் பசித்து, உடலிலே மாறுபாட்டைச் செய்யாத உனவுகளைத் தெரிந்தெடுத்து, உண்டு வருதல் வேண்டும் (௯௱௪௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும். (௯௱௪௰௪)
—மு. வரதராசன்

முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க. (௯௱௪௰௪)
—சாலமன் பாப்பையா

உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும் (௯௱௪௰௪)
—மு. கருணாநிதி

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.   (௯௱௪௰௫ - 945)
 

உடலுக்கு மாறுபாட்டைச் செய்யாத உணவையும், தன் மனம் விரும்பியபடி அல்லாமல் நோய் வராத அளவினாலே உண்பானானால், அவனுக்குப் பிணிகளால் துன்பமில்லை (௯௱௪௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை. (௯௱௪௰௫)
—மு. வரதராசன்

ஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை. (௯௱௪௰௫)
—சாலமன் பாப்பையா

உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை (௯௱௪௰௫)
—மு. கருணாநிதி

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.   (௯௱௪௰௬ - 946)
 

அளவுக்குச் சிறிது குறைவாகவே உண்பவனிடம் இன்பம் நீங்காமல் நிற்பது போல, அளவுக்கு மிகுதியாக உண்பவனிடம் நோயும் நிலைத்து நிற்கும் (௯௱௪௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும். (௯௱௪௰௬)
—மு. வரதராசன்

குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும். (௯௱௪௰௬)
—சாலமன் பாப்பையா

அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதம் இயற்கை (௯௱௪௰௬)
—மு. கருணாநிதி

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.   (௯௱௪௰௭ - 947)
 

பசித் தீயின் அளவாலே அல்லாமல், காலமும் அளவும் அறியாதபடி பெருமளவு உண்டானானால், அவனிடத்திலே எல்லையில்லாமல் நோய்களும் வளரும் (௯௱௪௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும். (௯௱௪௰௭)
—மு. வரதராசன்

தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும். (௯௱௪௰௭)
—சாலமன் பாப்பையா

பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும் (௯௱௪௰௭)
—மு. கருணாநிதி

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.   (௯௱௪௰௮ - 948)
 

குணங்குறிகளால் நோயைத் துணிந்து, அதன் காரணத்தையும் தெளிந்து, தீர்க்கும் வழியையும் அறிந்து, செய்வகை பிழையாமல் மருத்துவம் செய்ய வேண்டும் (௯௱௪௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும். (௯௱௪௰௮)
—மு. வரதராசன்

நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும். (௯௱௪௰௮)
—சாலமன் பாப்பையா

நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்) (௯௱௪௰௮)
—மு. கருணாநிதி

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.   (௯௱௪௰௯ - 949)
 

மருத்துவத்தைக் கற்றறிந்தவன், நோயாளியின் சக்தியையும், நோயின் தன்மையையும், காலத்தின் இயல்பையும், நன்கு கருதிப் பார்த்தே சிகிச்சை செய்ய வேண்டும் (௯௱௪௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும். (௯௱௪௰௯)
—மு. வரதராசன்

மருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும். (௯௱௪௰௯)
—சாலமன் பாப்பையா

நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும் (௯௱௪௰௯)
—மு. கருணாநிதி

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.   (௯௱௫௰ - 950)
 

பிணிக்கு மருந்தாவது, பிணியுற்றவன், அதனைத் தீர்க்கும் மருத்துவன், அவனுக்கு உதவும் மருந்துகள், அதனை இயற்றுபவன் என்னும் நான்கு பாகுபாடு உடையதாம் (௯௱௫௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது. (௯௱௫௰)
—மு. வரதராசன்

நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும். (௯௱௫௰)
—சாலமன் பாப்பையா

நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது (௯௱௫௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: இந்தோளம்  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
மருந்து நல்ல மருந்து - திரு
வள்ளுவனார் தரும் செந்தமிழ் மருந்து

அநுபல்லவி:
இருந்தொரு நூறாண்டும் வாழ்ந்திடச் செய்திடும்
இன்புற மாந்தர்கள் துன்பநோய் தீர்த்திடும்

சரணம்:
"நோய் நாடி நோய்முதல்நாடி யது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்பதுவும் பணிக்கும்
தாய்போலும் அன்பு கொண்டு தாங்கிடவும் முன்னிற்கும்
தன்னளவைத் தானறிந்தே உண்ணும்விதம் கற்பிக்கும்

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கென்னும் விதம் நண்ணின்
கூறும் வேறு மருந்ததும் வேண்டுமோ யாக்கைக்குக்
குன்றாத செல்வமதாய் அமைந்திடும் வாழ்க்கைக்கு




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22