காதல் சிறப்புரைத்தல்

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.   (௲௱௨௰௧ - 1121)
 

பணிவோடு பேசுகின்ற இவளது, வெண்மையான பற்களிடையே ஊறிவந்த நீரானது, பாலோடு தேனும் கலந்தாற் போல மிகுந்த சுவையினை உடையதாகும்! (௲௱௨௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும். (௲௱௨௰௧)
—மு. வரதராசன்

என்னிடம் மெல்லிதாகப் பேசும் என் மனைவியின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீர், பாலோடு தேனைக் கலந்த கலவை போலும்! (௲௱௨௰௧)
—சாலமன் பாப்பையா

இனியமொழி பேசுகினற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும் (௲௱௨௰௧)
—மு. கருணாநிதி

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.   (௲௱௨௰௨ - 1122)
 

இம் மடந்தைக்கும் எமக்கும் இடையிலுள்ள நட்பினது நெருக்கம், உடம்போடு உயிருக்கும் இடையேயுள்ள நட்பினது நெருக்கம் போன்றது ஆகும் (௲௱௨௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை. (௲௱௨௰௨)
—மு. வரதராசன்

என் மனைவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு, உடம்பிற்கும் உயிருக்கும் இடையே எத்தகைய உறவோ அத்தகையது. (௲௱௨௰௨)
—சாலமன் பாப்பையா

உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை; அத்தகையதுதான் எமது உறவு (௲௱௨௰௨)
—மு. கருணாநிதி

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.   (௲௱௨௰௩ - 1123)
 

கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீயும் போய் விடுவாயாக! யாம் விரும்புகின்ற அழகிய நுதலை உடையாளுக்கு இருப்பதற்கான இடம் வேறு இல்லை (௲௱௨௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே. (௲௱௨௰௩)
—மு. வரதராசன்

என் கருமணிக்குள் இருக்கும் பாவையே! நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு என் கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை. (௲௱௨௰௩)
—சாலமன் பாப்பையா

நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு! (௲௱௨௰௩)
—மு. கருணாநிதி

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.   (௲௱௨௰௪ - 1124)
 

இந்த ஆயிழையாள் என்னுடன் இருக்கும் போது, என் உயிருக்கு வாழ்வைத் தருகின்றாள்; நீங்கும் போதோ அவ்வுயிருக்குச் சாதலையே தருகின்றாள்! (௲௱௨௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள். (௲௱௨௰௪)
—மு. வரதராசன்

என் மனைவி, நான் அவளுடன் கூடும்போது உயிருக்கு உடம்பு போன்றிருக்கிறாள். அவளைப் பிரியும்போது உயிர் உடம்பை விட்டுப் பிரிவது போன்றிருக்கிறாள். (௲௱௨௰௪)
—சாலமன் பாப்பையா

ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்ட ஆயிழை என்னோடு கூடும்போது, உயிர் உடலோடு கூடுவது போலவும், அவள் என்னைவிட்டு நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகிறேன் (௲௱௨௰௪)
—மு. கருணாநிதி

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.   (௲௱௨௰௫ - 1125)
 

ஒள்ளியவாய் அமர்ந்த கண்களை உடையவளின் குணங்களை மறப்பதற்கே அறியேன்; அதனால், யான் அதை எப்போதாயினும் நினைப்பதும் செய்வேனோ! (௲௱௨௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

போர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே. (௲௱௨௰௫)
—மு. வரதராசன்

ஒளியுடன் கூடிய கண்களை உடைய என் மனைவியின் குணங்களை நான் மறந்தால் அல்லவா அவளை நினைப்பதற்கு? மறப்பதும் இல்லை. அதனால் நினைப்பதும் இல்லை. (௲௱௨௰௫)
—சாலமன் பாப்பையா

ஒளி கொண்டிருக்கும் விழிகளையுடைய காதலியின் பண்புகளை நினைப்பதேயில்லை; காரணம் அவற்றை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு (௲௱௨௰௫)
—மு. கருணாநிதி

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர்.   (௲௱௨௰௬ - 1126)
 

எம் காதலுக்கு உரியவர் எம் கண்களிலிருந்து ஒரு போதுமே நீங்கார்; எம் கண்களை இமைத்தாலும் வருந்தார்; அவ்வளவு நுண்ணியவர் அவர் (௲௱௨௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர். (௲௱௨௰௬)
—மு. வரதராசன்

என் அன்பர் என் கண்ணை விட்டுப் போகமாட்டிடார்; ஒருவேளை நான் அறியாமல் இமைத்தால் வருந்தவும் மாட்டார். பிறர் அறிய முடியாத நுட்பத் தன்மையர் அவர். (௲௱௨௰௬)
—சாலமன் பாப்பையா

காதலர், கண்ணுக்குள்ளிருந்து எங்கும் போக மாட்டார்; கண்ணை மூடி இமைத்தாலும் வருந்த மாட்டார்; காரணம், அவர் அவ்வளவு நுட்பமானவர் (௲௱௨௰௬)
—மு. கருணாநிதி

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.   (௲௱௨௰௭ - 1127)
 

காதலுக்கு உரியவரான அவர் என் கண்ணிலேயே உள்ளனர்; ஆதலினாலே, அவர் மறைவாரோ என்று நினைத்து, என் கண்களுக்கு நான் மையும் எழுத மாட்டேன் (௲௱௨௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம். (௲௱௨௰௭)
—மு. வரதராசன்

என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன். (௲௱௨௰௭)
—சாலமன் பாப்பையா

காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன் (௲௱௨௰௭)
—மு. கருணாநிதி

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.   (௲௱௨௰௮ - 1128)
 

காதலர் என் நெஞ்சத்தில் நிறைந்திருக்கின்றார்; அதனால், அவருக்குச் சூடு உண்டாவதை நினைத்து, யாம் சூடாக எதனையும் உண்பதற்கும் அஞ்சுவோம்! (௲௱௨௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம். (௲௱௨௰௮)
—மு. வரதராசன்

என்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால் அது அவரைச் சுட்டுவிடும் என்று எண்ணி உண்ணப் பயப்படுகிறேன். (௲௱௨௰௮)
—சாலமன் பாப்பையா

சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள் (௲௱௨௰௮)
—மு. கருணாநிதி

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்.   (௲௱௨௰௯ - 1129)
 

‘இமைப்பின் அவர் மறைவார்’ என்று, கண்களை மூடாமலே துயிலொழித்துக் கிடப்போம்; அவ்வளவிற்கே, இவ்வூர் அவரை அன்பற்றவர் என்கின்றதே! (௲௱௨௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர். (௲௱௨௰௯)
—மு. வரதராசன்

என் கண்கள் இமைத்தால் உள்ளிருக்கும் என்னவர் மறைவதை அறிந்து நான் கண்களை இமைப்பதில்லை. இதை விளங்கிக் கொள்ளாத உறவினர் அவரை அன்பற்றவர் என்கின்றனர். (௲௱௨௰௯)
—சாலமன் பாப்பையா

கண்ணுக்குள் இருக்கும் காதலர் மறைவார் என அறிந்து கண்ணை இமைக்காமல் இருக்கின்றேன்; அதற்கே இந்த ஊர் தூக்கமில்லாத துன்பத்தை எனக்குத் தந்த அன்பில்லதாவர் என்று அவரைக் கூறும் (௲௱௨௰௯)
—மு. கருணாநிதி

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்.   (௲௱௩௰ - 1130)
 

எம் உள்ளத்துள்ளே அவர் உவப்போடு உள்ளார்; இருந்தும், ‘பிரிந்து போய்விட்டார்; அதனால் அன்பில்லாதவர்’ என்று இவ்வூர் அவர் மேல் பழி கூறுகின்றதே! (௲௱௩௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர். (௲௱௩௰)
—மு. வரதராசன்

என்னவர் எப்போதும் என் நெஞ்சிற்குள்ளேயே மகிழ்ந்து இருக்கிறார். இதை அறியாத உறவினர் அவருக்கு அத்தனை அன்பு இல்லை என்கின்றனர். (௲௱௩௰)
—சாலமன் பாப்பையா

காதலர், எப்போதும் உள்ளதோடு உள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உணராத ஊர்மக்கள் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறு (௲௱௩௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: இந்துஸ்தான்பியாக்  |  தாளம்: ஆதி
பல்லவி:
பாலோடு தேன் கலந்தற்றே
பணிமொழி வாலெயிறு ஊறிய நீர் எனக்கு

அநுபல்லவி:
வேலோடு வேலாக மின்னிப் பொருதும் கண்ணாள்
மேலானதாம் காதல் சிறப்புரை தரும் பெண்ணாள்

சரணம்:
இறக்கவும் அவளே இருக்கவும் அவளே
என்னுயிர் என்கண் என்பதும் அவளே
மறக்க முடியாத மாதர்குல மாணிக்கம்
மனக் கோயிலில் நிறைவாள்
மணக் கோலமே விழைவாள்

சூடான பால் எனினும் பருகிட அஞ்சுவாள்
சுடுமோ தன் நெஞ்சத்தாரை என்றுமே கொஞ்சுவாள்
மூடாள் கண்ணிமையும் தேடாள் எழுதும் மையும
முறையாகும் என் வரைவு - நிறைவாக நோன்பும் கொள்வாள்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22