பழைமை

பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.   (௮௱௧ - 801)
 

‘பழமை என்னும் தொடர்பின் தன்மை யாது?’ என்றால், அது, உண்டாகிய உரிமைத் தொடர்பை எதுவும் சிதைத்து விடாமல் காத்துவரும் நல்ல நட்பு ஆகும் (௮௱௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும். (௮௱௧)
—மு. வரதராசன்

பழைமை என்று சொல்லப்படுவதன் பொருள் என்ன என்றால், நெடுங்கால நண்பர் நம்மீது உரிமை எடுத்துக் கொண்டு பிழைபட நடந்தாலும் அதைப் பொருட்படுத்தாத நட்பு எனலாம். (௮௱௧)
—சாலமன் பாப்பையா

பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான் (௮௱௧)
—மு. கருணாநிதி

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.   (௮௱௨ - 802)
 

நட்புக்கு உறுப்பாவது நெருக்கமாகப் பொருந்தும் உரிமைத் தன்மை ஆகும்; அப்படிப்பட்ட உரிமைத் தன்மைக்கு இலக்கணமாக நடத்தல் சான்றோரது கடமை (௮௱௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நட்பிற்க்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும். (௮௱௨)
—மு. வரதராசன்

நண்பர்கள் உரிமையுடன் செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு நீதியாகும். (௮௱௨)
—சாலமன் பாப்பையா

பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிற சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும் (௮௱௨)
—மு. கருணாநிதி

பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.   (௮௱௩ - 803)
 

தாம் கொண்ட நெருக்கமான உறவுத் தன்மையானது, தன் நண்பரிடத்திலும் அமைந்திராவிட்டால், அவரோடு நெடுங்காலம் பழகிய நட்பும் என்ன பயனைச் செய்யும்? (௮௱௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பழகியவர் உரிமைப்பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவேக் கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும். (௮௱௩)
—மு. வரதராசன்

தனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நண்பர் உரிமையாகச் செய்துவிட்டதைத் தானும் விரும்பிச் செய்தது போலவே காட்டவில்லை என்றால், நெடுங்காலமாகக் கொண்ட நட்பு என்ன பயனைத் தரும்? (௮௱௩)
—சாலமன் பாப்பையா

பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத்தாமே செய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்பு பயனற்றுப்போகும் (௮௱௩)
—மு. கருணாநிதி

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.   (௮௱௪ - 804)
 

தம்மோடு கொண்ட நெருக்கமான நட்புரிமை காரணமாக, ஒரு செயலைச் செய்துவிட்டாலும், அதனைத் தாமும் விரும்பினவரைப் போல் இருப்பவரே, நல்ல நண்பர்கள் (௮௱௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர். (௮௱௪)
—மு. வரதராசன்

தம் நண்பர் உரிமை எடுத்துக் கொண்டு தம்மைக் கேளாமலேயே ஒரு காரியத்தைச் செய்தால் அக்காரியத்தைத் தாம் அறிந்திருந்தாலும் நண்பரால் விரும்பிச் செய்யப்படுவது என்பதனால் அறிவுடையார் அதை ஏற்றுக் கொள்ளவே செய்வர். (௮௱௪)
—சாலமன் பாப்பையா

பழகிய நட்பின் உரிமை காரணமாக தமது நண்பர் தம்மைக் கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார் (௮௱௪)
—மு. கருணாநிதி

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.   (௮௱௫ - 805)
 

நட்பாகக் கொண்டவர் நாம் மனம் விரும்பாத ஒரு செயலைச் செய்தாரென்றால், அதனை அறியாமை என்று நினைக்கக் கூடாது; நட்புரிமை என்றே நினைக்க வேண்டும் (௮௱௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும். (௮௱௫)
—மு. வரதராசன்

நாம் வருந்தத்தக்கவற்றை நம் நண்பர் செய்வார் என்றால், அதற்கு அறியாமை மட்டுந்தானா, பெரும் உரிமையும் காரணம் என்று அறிக. (௮௱௫)
—சாலமன் பாப்பையா

வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும் (௮௱௫)
—மு. கருணாநிதி

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.   (௮௱௬ - 806)
 

அறிவுடையவர், தமது தொல்லைகளின் போது உதவியாக நின்றவரின் தொடர்பை, அவர் தொலைவான இடங்களுக்குப் போனாலும் கூடக் கைவிட மாட்டார்கள் (௮௱௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உரிமை வாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவுநேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவு கொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிட மாட்டார். (௮௱௬)
—மு. வரதராசன்

நட்பின் எல்லையைக் கடக்காமல் வரம்பிற்குள்ளேயே நின்றவர், தம்முடன் நெடுங்காலமாக நட்புக் கொண்டவரால் கெடுதிகள் என்றாலும் அவரது நட்பினை விடமாட்டார். (௮௱௬)
—சாலமன் பாப்பையா

நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள் (௮௱௬)
—மு. கருணாநிதி

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.   (௮௱௭ - 807)
 

அன்பாலே பொருந்திய நட்பை உடையவர்கள், அழிவு வரக்கூடிய ஒரு செயலைச் செய்தாலும், அவர் மீது நாம் கொண்டிருந்த அன்பு அறுந்து போகாது (௮௱௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவுதரும் செயல்களை பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர். (௮௱௭)
—மு. வரதராசன்

தம் நண்பர் தமக்கு அழிவு தருவனவற்றையே செய்தாலும் நெடுங்காலமாக நட்பை உடையவர் நண்பர்மீது தாம் கொண்ட அன்பை விட்டுவிடமாட்டார். (௮௱௭)
—சாலமன் பாப்பையா

தம்முடன் பழகியவர்கள் தமக்கே எதிராக அழிவுதரும் காரியத்தைச் செய்தாலும்கூட அன்பின் அடிப்படையில் நட்புக் கொண்டவர் அதற்காக அந்த அன்பை விலக்கிக் கொள்ள மாட்டார் (௮௱௭)
—மு. கருணாநிதி

கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.   (௮௱௮ - 808)
 

நண்பரின் குற்றங்குறைகளைப் பிறர் சொன்னாலும் கேளாத நட்புரிமை வல்லவர்களுக்கு, நண்பர் குற்றம் செய்தால், அது அந்நாளின் குறையாகவே தோன்றும் (௮௱௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும். (௮௱௮)
—மு. வரதராசன்

நண்பன் உரிமை எடுத்துச் செய்து பிழையை அடுத்தவர் எடுத்துக்காட்டியும் ஏற்றுக் கொள்ளாத நட்புரிமை உடையவர்க்கு நண்பன் பிழை செய்யும் நாள் பயனுள்ள நாளாம். (௮௱௮)
—சாலமன் பாப்பையா

நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும் (௮௱௮)
—மு. கருணாநிதி

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.   (௮௱௯ - 809)
 

கெடுதல் இல்லாத வழியோடு தொடர்ந்து பழகி வந்த நட்பினை எதனாலும் கைவிடாத பண்பினரை, உலகத்தார் எல்லாருமே நண்பராகக் கொள்ள விரும்புவார்கள் (௮௱௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும். (௮௱௯)
—மு. வரதராசன்

உரிமையை விடாது நெடுங்காலமாக வரும் நட்பினை உடையவர் கேடு செய்தாலும் அந்த நட்பை விட்டு விடாதவரை, அவரது நட்புள்ளம் குறித்து உலகம் விரும்பும். (௮௱௯)
—சாலமன் பாப்பையா

தொன்றுதொட்டு உரிமையுடன் பழகிய நட்புறவைக் கைவிடாமல் இருப்பவரை உலகம் போற்றும் (௮௱௯)
—மு. கருணாநிதி

விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.   (௮௱௰ - 810)
 

பழமையான நண்பர்களிடத்திலும், சற்றும் விலகாமல் நடந்து கொள்ளும் பண்பினர், தம் பகைவராலும் விரும்பி நட்பாக்கிக் கொள்ளப் படுவார்கள் (௮௱௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர் (௮௱௰)
—மு. வரதராசன்

பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர். (௮௱௰)
—சாலமன் பாப்பையா

பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள் (௮௱௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: பூரி கல்யாணி  |  தாளம்: ஆதி
பல்லவி:
பழைமையைக் கைவிடலாமா - நட்பின்
பழைமையைக் கைவிடலாமா
பகைவரும் பாராட்டும் பண்பதும் கெடலாமா

அநுபல்லவி:
பழைமை என்றுரைப்பதே யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடாத நட்பென ஓதும்

சரணம்:
தொழிலுக்குத் துணையாகத் தோன்றி வளர்ந்த நட்பு
துன்பத்திலும் தமக்குத் தோழமைப் பூணும் நட்பு
"அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மையவர்" என்னும் குறள் பண்பின்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22