நலம் புனைந்துரைத்தல்

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.   (௲௱௰௧ - 1111)
 

அனிச்ச மலரே! நீதான் நல்ல சிறப்பை உடையாய்! நீ வாழ்க! எம்மால் விரும்பப்படுகின்றவளோ நின்னைக் காட்டிலும் மிகவும் மென்மையான தன்மையினள்! (௲௱௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள். (௲௱௰௧)
—மு. வரதராசன்

அனிச்சம் பூவே! நீ எல்லாப் பூக்களிலுமே மென்மையால் சிறந்த இயல்பை உடையை வாழ்ந்து போ! ஒன்று உனக்குத் தெரியுமா? என்னால் விரும்பப்படும் என் மனைவி உன்னைக் காட்டிலும் மென்மையானவள்! (௲௱௰௧)
—சாலமன் பாப்பையா

அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன்; ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள் என் காதலி (௲௱௰௧)
—மு. கருணாநிதி

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.   (௲௱௰௨ - 1112)
 

‘இவள் கண்களும் பலராலும் காணப்படும் இக்குவளைப் பூவைப் போன்றதாகுமோ’ என்று, இக் குவளை மலரைக் கண்டால், நெஞ்சே, நீயும் மயங்குகின்றாயே! (௲௱௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய். (௲௱௰௨)
—மு. வரதராசன்

நெஞ்சே நான் ஒருவனே காணும் என் மனைவியின் கண்கள், பலருங் காணும் பூக்களைப் போல் இருக்கும் என்று எண்ணி மலர்களைக் கண்டு மயங்குகிறாயே! (இதோ பார்) (௲௱௰௨)
—சாலமன் பாப்பையா

மலரைக்கண்டு மயங்குகின்ற நெஞ்சமே! இவளுடைய கண்ணைப் பார்; பலரும் கண்டு வியக்கும் மலராகவே திகழ்கிறது (௲௱௰௨)
—மு. கருணாநிதி

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.   (௲௱௰௩ - 1113)
 

அவளுக்கு, மேனியோ தளிர் வண்ணம்; பல்லோ முத்து; இயல்பான மணமோ நறுமணம்; மையுண்ட கண்கள் வேல் போன்றவை; தோள்களோ மூங்கில் போன்றவை! (௲௱௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன், முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண். (௲௱௰௩)
—மு. வரதராசன்

மூங்கில் போன்ற தோளை உடைய அவளுக்கு மேனி இளந்தளிர்; பல்லோ முத்து; உடல் மணமோ நறுமணம்; மையூட்டப் பெற்ற கண்களோ வேல்! (௲௱௰௩)
—சாலமன் பாப்பையா

முத்துப்பல் வரிசை, மூங்கிலனைய தோள், மாந்தளிர் மேனி, மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி; அவளே என் காதலி! (௲௱௰௩)
—மு. கருணாநிதி

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.   (௲௱௰௪ - 1114)
 

குவளை மலர்கள், இவளைக் கண்டால், ‘இம் மாணிழை கண்களுக்கு யாம் ஒப்பாக மாட்டோம்’ என்று தலையைக் கவிழ்த்து நிலத்தை நோக்குமே! (௲௱௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும். (௲௱௰௪)
—மு. வரதராசன்

குவளைப் பூக்களால் காண முடியுமானால், சிறந்த அணிகளைப் பூண்டிருக்கும் என் மனைவியின் கண்ணைப் போல தாம் இருக்கமாட்டோம் என்று எண்ணி நாணத்தால் தலைகுனிந்து நிலத்தைப் பார்க்கும். (௲௱௰௪)
—சாலமன் பாப்பையா

என் காதலியைக் குவளை மலர்கள் காண முடிந்தால், ``இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே!'' எனத் தலைகுனிந்து நிலம் நோக்கும் (௲௱௰௪)
—மு. கருணாநிதி

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.   (௲௱௰௫ - 1115)
 

தன் இடையின் நுண்மையை நினையாதவளாய், அனிச்ச மலரைக் காம்பு களையாமல் கூந்தலிலே சூடியுள்ளாளே! இவள் இடைக்கு இனி நல்ல பறைகள் ஒலிக்கமாட்டா! (௲௱௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா. (௲௱௰௫)
—மு. வரதராசன்

என் மனைவி தன் மென்மையை எண்ணாமல் அனிச்சம்பூவை அதன் காம்பின் அடிப்பகுதியைக் களையாமல் அப்படியே சூடிவிட்டாள். அதனால் நொந்து வருந்தும் இவள் இடுப்பிற்கு நல்ல மங்கல ஒலி இனி ஒலிக்காது. (௲௱௰௫)
—சாலமன் பாப்பையா

அவளுக்காக நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான் (௲௱௰௫)
—மு. கருணாநிதி

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.   (௲௱௰௬ - 1116)
 

மதிதான் யாதென்றும், இம் மடந்தையது முகந்தான் யாதென்றும் வேறுபாடு அறியாமையால், வானத்து மீன்கள் தம் நிலையில் நில்லாது கலங்கிப் போயினவே! (௲௱௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன. (௲௱௰௬)
—மு. வரதராசன்

அதோ, நிலாவிற்கும் என் மனைவியின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாது நட்சத்திரங்கள், தாம் இருந்த இடத்திலிருந்து இடம் விட்டுக் கலங்கித் திரிகின்றன! (௲௱௰௬)
—சாலமன் பாப்பையா

மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கிக் தவிக்கின்றன (௲௱௰௬)
—மு. கருணாநிதி

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.   (௲௱௰௭ - 1117)
 

அவை கலங்குவதுதாம் ஏனோ? தேய்ந்து, பின்னர் வளர்ந்து நிறைவாகும் ஒளியுள்ள மதிக்கு உள்ளது போல, இவள் முகத்திலும் களங்கம் யாதும் உண்டோ? (௲௱௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே. (௲௱௰௭)
—மு. வரதராசன்

நட்சத்திரங்கள் ஏன் கலங்க வேண்டும்? தேய்ந்து முழுமை பெறும் ஒளிமிக்க நிலாவில் இருப்பது போல என் மனைவியின் முகத்தில் மறு ஏதும் உண்டா என்ன? (௲௱௰௭)
—சாலமன் பாப்பையா

தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட, இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே! (௲௱௰௭)
—மு. கருணாநிதி

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.   (௲௱௰௮ - 1118)
 

மதியமே! இப் பெண்ணின் நல்லாளின் முகத்தைப் போல நீயும் ஒளிவிடுவதற்கு வல்லமை உடையையானால், நீயும் என்னால் காதலிக்கப்படுவாய்! நீதான் வாழ்க! (௲௱௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய். (௲௱௰௮)
—மு. வரதராசன்

நிலவே! நீ வாழ்க! என் மனைவியின் முகம்போல் நான் மகிழும்படி ஒளிவீசுவாய் என்றால் நீயும் என் காதலைப் பெறுவாய். (௲௱௰௮)
—சாலமன் பாப்பையா

முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக (௲௱௰௮)
—மு. கருணாநிதி

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.   (௲௱௰௯ - 1119)
 

மதியமே! மலர்போன்ற கண்களையுடைய இவளின் முகத்திற்கு நீயும் ஒத்திருப்பாய் ஆயின், பலரும் காணுமாறு இனி வானத்தில் தோன்றாதிருப்பாயாக! (௲௱௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே. (௲௱௰௯)
—மு. வரதராசன்

நிலவே மலர் போன்ற கண்ணை உடைய என் மனைவியின் முகம் போல ஆக நீ விரும்பினால் நான் மட்டும் காணத் தோன்று; பலரும் காணும்படி தோன்றாதே. (௲௱௰௯)
—சாலமன் பாப்பையா

நிலவே! முலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமேயானால் (அந்தப் போட்டியில் நீ தோல்வியுறாமல் இருந்திட) பலரும் காணும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல் (௲௱௰௯)
—மு. கருணாநிதி

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.   (௲௱௨௰ - 1120)
 

மிகமிக மென்மையான அனிச்ச மலர்களும், அன்னப் பறவைகளின் மெல்லிய இறகுகளும், இம் மாதின் அடிக்கு நெருஞ்சிப் பழம்போலத் துன்பத்தைச் செய்யுமே! (௲௱௨௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை. (௲௱௨௰)
—மு. வரதராசன்

உலகம் மென்மைக்குச் சொல்லும் அனிச்சம் பூவும், அன்னப் பறவையின் இளஞ்சிறகும், என் மனைவியின் பாதங்களுக்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் தரும். (௲௱௨௰)
—சாலமன் பாப்பையா

அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள்அவ்வளவு மென்மையானவை (௲௱௨௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: கரகரப்பிரியா  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
நன்னீரை வாழி அனிச்சமே!
நின்னினும் மென்னீரள் யாம் வீழ்பவள்

அநுபல்லவி:
பன்னீரோ! சந்தனமோ! பரிமளமலரோ!
பாவையிவளின் தளிர் மேனியில்
பயிலுமியல்பில் படிந்துள்ள மணம்

சரணம்:
மைதீட்டிய கண்களிரண்டும் கூர்வடிவேலோ
மதுர இதழின் முறுவல் காணின் மாதுளை முத்தோ
மெய்தீட்டிய வண்ணம் புனைந்த வேயுறு தோளோ
மெல்லிடை மணிமேகலை யொடும்
நல்லிசை பதச் சிலம்பும் ஒலிக்கும்

நிலவே நீ மாதர்முகம் போல் ஒளி தருவாயேல்
நீயும் எனது காதல் உலகில் நெடிது வாழ்கவே
பலராலும் பார்க்கும் மலரும் பருவ நிலாவும்
பாங்கியே அவள் பாங்கில் வருமோ
பண்பும்தான் பெறுமோ




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22