ஒழுக்கமுடைமை

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.   (௱௩௰௧ - 131)
 

ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதனால், அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகச் சான்றோரால் காக்கப்படும் (௱௩௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும். (௱௩௰௧)
—மு. வரதராசன்

ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும். (௱௩௰௧)
—சாலமன் பாப்பையா

ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது (௱௩௰௧)
—மு. கருணாநிதி

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.   (௱௩௰௨ - 132)
 

வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்க வேண்டும்; பலவும் ஆராய்ந்து கைக்கொண்டு தெளிந்தாலும், ஒழுக்கமே உயிருக்குத் துணையாகும் (௱௩௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும். (௱௩௰௨)
—மு. வரதராசன்

எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும். (௱௩௰௨)
—சாலமன் பாப்பையா

எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும் (௱௩௰௨)
—மு. கருணாநிதி

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.   (௱௩௰௩ - 133)
 

ஒழுக்கம் உடையவராக இருப்பதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மை; ஒழுக்கம் கெடுதல் இழிந்த பிறப்பின் தன்மையாகி விடும் (௱௩௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும். (௱௩௰௩)
—மு. வரதராசன்

தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும். (௱௩௰௩)
—சாலமன் பாப்பையா

ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும் ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர் (௱௩௰௩)
—மு. கருணாநிதி

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.   (௱௩௰௪ - 134)
 

கற்றதை மறந்தாலும் மீண்டும் ஓதிக் கற்றுக் கொள்ளலாம்; ஆனால், வேதமோதுவான் பிறப்பால் வந்த உயர்வு, அவன் ஒழுக்கம் குன்றினால் கெடும் (௱௩௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம். (௱௩௰௪)
—மு. வரதராசன்

பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான். (௱௩௰௪)
—சாலமன் பாப்பையா

பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான் (௱௩௰௪)
—மு. கருணாநிதி

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.   (௱௩௰௫ - 135)
 

பொறாமை உடையவனிடத்திலே ஆக்கம் அமையாதது போல, ஒழுக்கம் இல்லாதவன் வாழ்க்கையிலும் உயர்வு இல்லை! (௱௩௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும். (௱௩௰௫)
—மு. வரதராசன்

பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை. (௱௩௰௫)
—சாலமன் பாப்பையா

பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது (௱௩௰௫)
—மு. கருணாநிதி

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.   (௱௩௰௬ - 136)
 

மன வலிமை உடையவர், ஒழுக்கம் குன்றுதலால் குற்றம் நேரிடுதலை அறிந்து, ஒழுக்கத்திலிருந்து ஒரு போதுமே, பிறழ மாட்டார்கள் (௱௩௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர். (௱௩௰௬)
—மு. வரதராசன்

ஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார். (௱௩௰௬)
—சாலமன் பாப்பையா

மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள் (௱௩௰௬)
—மு. கருணாநிதி

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.   (௱௩௰௭ - 137)
 

ஒழுக்கத்தால் எல்லாரும் மேன்மை அடைவார்கள்; ஒழுக்கக் கேட்டால் அடையத் தகாத பழியை அடைவார்கள் (௱௩௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர். (௱௩௰௭)
—மு. வரதராசன்

ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர். (௱௩௰௭)
—சாலமன் பாப்பையா

நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும் (௱௩௰௭)
—மு. கருணாநிதி

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.   (௱௩௰௮ - 138)
 

நல்ல ஒழுக்கமானது இன்பமான நல்வாழ்வுக்கு வித்தாக இருக்கும்; தீய ஒழுக்கமோ எக்காலத்தும் துன்பத்தையே தரும் (௱௩௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும். (௱௩௰௮)
—மு. வரதராசன்

நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும். (௱௩௰௮)
—சாலமன் பாப்பையா

நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும் தீயொழுக்கம், தீராத துன்பம் தரும் (௱௩௰௮)
—மு. கருணாநிதி

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.   (௱௩௰௯ - 139)
 

தீய சொற்களைத் தவறியும் தம் வாயினாற் சொல்லும் குற்றம், நல்ல ஒழுக்கம் உடையவர்களுக்கு ஒரு போதும் பொருந்தாத பண்பாகும் (௱௩௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும். (௱௩௰௯)
—மு. வரதராசன்

மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது. (௱௩௰௯)
—சாலமன் பாப்பையா

தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும் (௱௩௰௯)
—மு. கருணாநிதி

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.   (௱௪௰ - 140)
 

உலகத்தாரோடு பொருந்தி ஒழுகும் தன்மையை அறியாதவர், பல நூல்களைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே ஆவர் (௱௪௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர். (௱௪௰)
—மு. வரதராசன்

முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே. (௱௪௰)
—சாலமன் பாப்பையா

உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள் (௱௪௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: சிம்மேந்திர மத்திமம்  |  தாளம்: ஆதி
பல்லவி:
ஒழுக்கமே வாழ்க்கையின் உயர்நிலையாகும்
உலகில் நன்றிக்கோர் வித்தனெக் கூறும் நல்

அநுபல்லவி:
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்" என்னும் நம் திருக்குறள்

சரணம்:
நிறைபெறும் எரிக்குக் கரையது போல
நெல்விளை வயலுக்கு வரப்பது போல
உரைதரும் மாந்தர்கள் உயரமென்மேலே
ஒழுக்கமே அரண் என உதவுவதாலே

வறுமைப் பிணிகள் நம்மை வருத்தியபோதும்
வாழ்க்கை வழியில் பல வளைவு கண்டாலும்
பொறுமையாய் ஒழுக்கத்தைப் போற்றியே வளர்ப்போம்
பொதுநலக் கருத்தின்னும் பொலிவுறச் சிறப்போம்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22