அவர்வயின் விதும்பல்

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.   (௲௨௱௬௰௧ - 1261)
 

அவர் வருவாரென வழியையே பார்த்துக் கண்களில் ஒளியும் கெட்டன; அவர் பிரிந்த நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டு விரல்களும் தேய்ந்து போயின (௲௨௱௬௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன. (௲௨௱௬௰௧)
—மு. வரதராசன்

அவர் என்னைப் பிரிந்து போன நாள்களைச் சுவரில் குறித்துத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன; அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளி இழந்து, நுண்ணியவற்றைக் காணும் திறனில் குறைந்து விட்டன. (௲௨௱௬௰௧)
—சாலமன் பாப்பையா

வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன (௲௨௱௬௰௧)
—மு. கருணாநிதி

இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.   (௲௨௱௬௰௨ - 1262)
 

தோழி! அவரைப் பிரிந்து வருந்திருக்கும் இன்றைக்கும், அவரை மறந்தால், என் தோள்கள் அழகுகெட்டு மெலியும்; என் தோள் அணிகளும் கழலும்படி நேர்ந்துவிடும் (௲௨௱௬௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தோழி! காதலரின் பிரிவால்துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்து விட்டால், அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும். (௲௨௱௬௰௨)
—மு. வரதராசன்

ஒளிரும் நகை அணிந்தவனே! என் காதலரை நான் இன்று மறந்தால் என்னைவிட்டு அழகு மிகுதியும் நீங்க, என் தோளும் வளையல்களை இழக்கும். (௲௨௱௬௰௨)
—சாலமன் பாப்பையா

காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி (௲௨௱௬௰௨)
—மு. கருணாநிதி

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.   (௲௨௱௬௰௩ - 1263)
 

வெற்றியை விரும்பி, ஊக்கமே துணையாக, வேற்று நாட்டிற்குச் சென்றுள்ள காதலர் திரும்பி வருதலைக் காண்பதற்கு விரும்பியே, இன்னும் உயிரோடுள்ளேன் (௲௨௱௬௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேன். (௲௨௱௬௰௩)
—மு. வரதராசன்

என்னுடன் இன்பம் நுகர்வதை விரும்பாமல், நான் துணையாவதையும் வெறுத்துத் தன் ஊக்கத்தையே துணையாக எண்ணி, வெற்றி பெறுவதையே விரும்பி என்னைப் பிரிந்தவர், அவற்றை இகழ்ந்து என்னிடம் திரும்ப வருவதை நான் விரும்புவதால் இவ்வளவு காலமும் இருக்கிறேன். (௲௨௱௬௰௩)
—சாலமன் பாப்பையா

ஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன் (௲௨௱௬௰௩)
—மு. கருணாநிதி

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.   (௲௨௱௬௰௪ - 1264)
 

முன்னர்க் கூடியிருந்த காம இன்பத்தையும் மறந்து, பிரிந்து போனவரின் வரவை நினைத்து, என் நெஞ்சம் மரக்கிளை தோறும் ஏறி ஏறிப் பார்க்கின்றதே! (௲௨௱௬௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகை‌யைநினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது. (௲௨௱௬௰௪)
—மு. வரதராசன்

என்னைப் பிரிந்து போனவர் மிகுந்த காதலுடன் என்னிடம் வருவதை எண்ணி, என் நெஞ்சு வருத்தத்தை விட்டுவிட்டு மகிழ்ச்சியில் கிளை பரப்பி மேலே வளர்கிறது. (௲௨௱௬௰௪)
—சாலமன் பாப்பையா

காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது (௲௨௱௬௰௪)
—மு. கருணாநிதி

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.   (௲௨௱௬௰௫ - 1265)
 

என் காதலனைக் கண்ணாரக் காண்பேனாக; அவ்வாறு கண்ட பின் என் மெல்லிய தோள்களில் உண்டாகியுள்ள பசலைநோயும் தானாகவே நீங்கிப் போய்விடும் (௲௨௱௬௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும். (௲௨௱௬௰௫)
—மு. வரதராசன்

என் கண்கள் முழுக்க என் கணவரை நான் காண்பேனாகுக; அவரைக் கண்டபின் என் மெல்லிய தோளின் வாடிய நிறம் தானாக நீங்கும். (௲௨௱௬௰௫)
—சாலமன் பாப்பையா

கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும் (௲௨௱௬௰௫)
—மு. கருணாநிதி

வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.   (௲௨௱௬௰௬ - 1266)
 

என் காதலன் ஒரு நாள் மட்டும் என்னிடம் வருவானாக; வந்தால், என் துன்ப நோய் எல்லாம் தீரும்படியாக, அவனோடு, இன்பத்தை நானும் பருகுவேன் (௲௨௱௬௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன். (௲௨௱௬௰௬)
—மு. வரதராசன்

என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்ப நோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன். (௲௨௱௬௰௬)
—சாலமன் பாப்பையா

என்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும் வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன் (௲௨௱௬௰௬)
—மு. கருணாநிதி

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.   (௲௨௱௬௰௭ - 1267)
 

என் கண் போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது தழுவிக் கொள்வேனோ? அல்லது ஆவலோடு கலந்து இன்புறுவேனோ? என்ன செய்வேன்? (௲௨௱௬௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ? (௲௨௱௬௰௭)
—மு. வரதராசன்

கண்போல் சிறந்த என் துணைவர் வந்தால் அவர் நெடுநாள் பிரிந்திருந்ததற்காக ஊடுவேனா? அவர் பிரிவைத் தாங்க முடியாமல் அவரைத் தழுவுவேனா? அல்லது இரண்டு செயல்களையும் கலந்து செய்வேனா? (௲௨௱௬௰௭)
—சாலமன் பாப்பையா

கண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல், கொள்வேனோ? அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ? அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த இன்பத்தை நினைக்கும்போது (௲௨௱௬௰௭)
—மு. கருணாநிதி

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.   (௲௨௱௬௰௮ - 1268)
 

வேந்தன் இவ் வினையிலே தானும் கலந்து வெற்றி அடைவானாக; யானும், என் மனைக்கண் சென்று சேர்ந்து, மாலைப் பொழுதில், அவளோடு விருந்தை அனுபவிப்பேன் (௲௨௱௬௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அனறு வரும் மாலைப் பொழுதிற்கு விருந்து செய்வோம். (௲௨௱௬௰௮)
—மு. வரதராசன்

அரசு போர் செய்து வெற்றி பெறட்டும்; நானும் மனைவியோடு கூடி மாலைப்பொழுதில் விருந்து உண்பேனாகுக. (௲௨௱௬௰௮)
—சாலமன் பாப்பையா

தலைவன், தான் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெறுவானாக; அவன் வெண்றால் என் மனைவியுடன் எனக்கு மாலைப்பொழுதில் இன்ப விருந்துதான் (௲௨௱௬௰௮)
—மு. கருணாநிதி

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.   (௲௨௱௬௰௯ - 1269)
 

தொலைவிடத்துக்குப் போய் பிரிந்து சென்ற காதலர் வரும் நாளை மனத்தில் வைத்து ஏங்கும் மகளிருக்கு, ஒரு நாள் தானும் ஏழுநாள் போல் நெடியதாகக் கழியும் (௲௨௱௬௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல ( நெடிதாக) கழியும். (௲௨௱௬௰௯)
—மு. வரதராசன்

தொலைதூரம் சென்று தன் கணவன் வரும் நாளை எண்ணி வருந்தும் பெண்களுக்கு ஒருநாள் பலநாள் போல நெடிதாகத் தோன்றும். (௲௨௱௬௰௯)
—சாலமன் பாப்பையா

நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும் (௲௨௱௬௰௯)
—மு. கருணாநிதி

பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.   (௲௨௱௭௰ - 1270)
 

பிரிவுத் துயரம் தாங்காமல் உள்ளம் உடைந்து அழிந்து போய்விட்டால், அவரைப் பெறுவதனால் என்ன? பெற்றால் தான் என்ன? அவரோடு பொருந்தினால் தான் என்ன? (௲௨௱௭௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப்‌ பெறுவதனால் என்ன? பெற்றக்கால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும் என்ன? (௲௨௱௭௰)
—மு. வரதராசன்

என் பிரிவைத் தாங்காமல் உள்ளம் உடைய, அவளுக்கு ஒன்று ஆகிவிட்டால் அதன் பிறகு அவள் என்னைப் பெறுவதால் ஆவது என்ன? பெற்றால்தான் என்ன? உடம்போடு கலந்தால்தான் என்ன? ஒரு பயனும் இல்லை. (௲௨௱௭௰)
—சாலமன் பாப்பையா

துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போயிவிடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடவதினாலோ, என்ன பயன்? (௲௨௱௭௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: சாரமதி  |  தாளம்: ஆதி
பல்லவி:
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர் சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல் ஆனதே

அநுபல்லவி:
நாளெத்தனை அவர் வயின் விதும்பல்
நன்மை காணுமோ உண்மை தோணுமோ

சரணம்:
வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாய்
வெளிநாடு சென்றார் விரைந்தே வருவார்
பற்றியே கண்ணாரப் பருகினா லன்றோ
பசலை நோயும் நீங்கும் பாவை உயிர் தாங்கும்

மரமேறியேனும் வழி பார்த்திருக்கும்
பறவை போல உள்ளம் பறக்கும் துடிக்கும்
ஒருநாள் நெடுநாள் போலவே கழியும்
வருநாளில் காதல் இன்பத் தேன் பொழியும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22