ஈகை

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.   (௨௱௨௰௧ - 221)
 

வறுமையானவர்க்கு ஒரு பொருளைத் தந்து உதவுவதே ஈகை; பிறருக்குத் தருவது எல்லாம் எதிர்ப்பயனை எதிர்பார்த்துத் தருவது ஆகும் (௨௱௨௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது. (௨௱௨௰௧)
—மு. வரதராசன்

ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே. (௨௱௨௰௧)
—சாலமன் பாப்பையா

இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும் மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும் (௨௱௨௰௧)
—மு. கருணாநிதி

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.   (௨௱௨௰௨ - 222)
 

‘நல்ல அறச்செயலுக்கே’ என்றாலும், பிறரிடம் இரந்து பெறுவது தீமையே; மேலுலகம் இல்லையானாலும் பிறருக்குக் கொடுத்து உதவுதலே நன்மையானது (௨௱௨௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது. (௨௱௨௰௨)
—மு. வரதராசன்

நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது. (௨௱௨௰௨)
—சாலமன் பாப்பையா

பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும் கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும் (௨௱௨௰௨)
—மு. கருணாநிதி

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.   (௨௱௨௰௩ - 223)
 

ஒருவன் வந்து, ‘நான் யாதும் இல்லாதவன்’ என்று தன் துன்பத்தைச் சொல்லும் முன்பாகவே, அவனுக்கு உதவும் தன்மை உயர்ந்த குடிப்பிறப்பாளனிடம் உண்டு (௨௱௨௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு. (௨௱௨௰௩)
—மு. வரதராசன்

ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு. (௨௱௨௰௩)
—சாலமன் பாப்பையா

தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும் (௨௱௨௰௩)
—மு. கருணாநிதி

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.   (௨௱௨௰௪ - 224)
 

உதவியை நாடி வந்து இரந்தவருடைய மகிழ்ச்சியான முகத்தைக் காணும் வரைக்கும், இரந்து கேட்கப்படுதலும் ஈகையாளனுக்குத் துன்பம் தருவதேயாகும் (௨௱௨௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது. (௨௱௨௰௪)
—மு. வரதராசன்

கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே. (௨௱௨௰௪)
—சாலமன் பாப்பையா

ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும் (௨௱௨௰௪)
—மு. கருணாநிதி

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.   (௨௱௨௰௫ - 225)
 

பசியைப் பொறுத்துக் கொள்பவரது ஆற்றலே சிறந்த ஆற்றலாகும்; அதுவும் அப்பசி நோயை உணவளித்து மாற்றுவாரின் ஈகைக்குப் பிற்பட்டதே ஆகும் (௨௱௨௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும். (௨௱௨௰௫)
—மு. வரதராசன்

வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும். (௨௱௨௰௫)
—சாலமன் பாப்பையா

பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும் (௨௱௨௰௫)
—மு. கருணாநிதி

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.   (௨௱௨௰௬ - 226)
 

எதுவுமே இல்லாத ஏழையரின் கொடிய பசிநோயைப் போக்க வேண்டும்; அதுதான் பொருள்பெற்றவன் தன் பொருளைச் சேமித்து வைக்கும் இடமும் ஆகும் (௨௱௨௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும். (௨௱௨௰௬)
—மு. வரதராசன்

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே. (௨௱௨௰௬)
—சாலமன் பாப்பையா

பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும் (௨௱௨௰௬)
—மு. கருணாநிதி

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.   (௨௱௨௰௭ - 227)
 

பலரோடும் பகுத்து உண்ணுகின்ற பழக்கம் உடைய கொடையாளனைப் ‘பசி’ என்கின்ற தீய நோயானது சென்று தீண்டுதல் என்பதே அருமையாகும் (௨௱௨௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை. (௨௱௨௰௭)
—மு. வரதராசன்

பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது. (௨௱௨௰௭)
—சாலமன் பாப்பையா

பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை (௨௱௨௰௭)
—மு. கருணாநிதி

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.   (௨௱௨௰௮ - 228)
 

தாம் சேர்த்துள்ள செல்வத்தைக் காப்பாற்றி வைத்துப் பின் இழந்துவிடும் கல்நெஞ்சர்கள், பிறருக்குக் கொடுத்து மகிழும் இன்பத்தை அறியமாட்டார்களோ? (௨௱௨௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ. (௨௱௨௰௮)
—மு. வரதராசன்

இல்லாதவர்க்குக் கொடுப்பதால் கொடுப்பவரும் பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். பிறர்க்குக் கொடுக்காமல் பொருளைச் சேமித்து வைத்துப் பிறகு அதை இழந்துவிடும் கொடியவர்கள் அம்மகிழ்சியை அறியார்களோ? (௨௱௨௰௮)
—சாலமன் பாப்பையா

ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈ.ட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ? (௨௱௨௰௮)
—மு. கருணாநிதி

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.   (௨௱௨௰௯ - 229)
 

தாம் முயன்று தேடி நிரப்பி வைத்துள்ளதைத் தாமே தனியாக உண்டு மகிழ்வது என்பது, வறுமையால் பிறரிடம் சென்று இரத்தலை விடத் துன்பம் தருவதாகும் (௨௱௨௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது. (௨௱௨௰௯)
—மு. வரதராசன்

பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது. (௨௱௨௰௯)
—சாலமன் பாப்பையா

பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது (௨௱௨௰௯)
—மு. கருணாநிதி

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.   (௨௱௩௰ - 230)
 

சாதலைக் காட்டிலும் துன்பமானது யாதுமே இல்லை; பிறருக்குக் கொடுத்து உதவ நினையாத கடைப்பட்டவனைப் பொறுத்தமட்டில் அப்படிச் சாதலும் இனியதே ஆகும் (௨௱௩௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும். (௨௱௩௰)
—மு. வரதராசன்

சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும். (௨௱௩௰)
—சாலமன் பாப்பையா

சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது (௨௱௩௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: அட்டாணா  |  தாளம்: ஆதி
பல்லவி:
ஈகை தரும் மெய்யின்பம் தமிழின்பம் அன்றோ
இன்பம் பெறவே உயிர்க்கிதனிலும் வேறுண்டோ

அநுபல்லவி:
ஆகையினால் என்றும் ஈகையே வேண்டும்
அற்றார் அழிபசி தீர்க்க முன் தோன்றும்

சரணம்:
ஏழை எளியவர்கள் படும் துயர்க்கிரங்கும்
இல்லையென்னாதளிக்கும் இயல்பு விளங்கும்
வாழும் முறைமை கண்டோர் மனத்துள்ளியங்கும்
வரும் பயன் குறிக்காத வண்மை துலங்கும்

"சாதலின் இன்னாததில்லை இனிதுதூ உம்
ஈதல் இயையாக்கடை" என்பதே குறளறம்
ஆதரவாம் இந்த அறிவுரை ஏற்போம்
அன்புறும் வாழ்க்கையிலே நாம் புகழ் சேர்ப்போம்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22