கயமை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.   (௲௭௰௧ - 1071)
 

வடிவமைப்பால் கீழ்மக்களும் மக்களைப் போன்றிருப்பார்கள்; அவரைப் போல ஒப்புமையான ஒன்றை வேறிரண்டு சாதிக் கண் யாம் எங்கும் கண்டதில்லை (௲௭௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை. (௲௭௰௧)
—மு. வரதராசன்

கயவர் வெளித்தோற்றத்தில் மனிதரைப் போலவே இருப்பர்; விலங்கு பறவை போன்ற பிற இனங்களில் அவருக்கு ஒப்பானவரை நான் கண்டது இல்லை. (௲௭௰௧)
—சாலமன் பாப்பையா

குணத்தில் கயவராக இருப்பர் ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார் மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும் (௲௭௰௧)
—மு. கருணாநிதி

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.   (௲௭௰௨ - 1072)
 

தமக்கு உறுதியானவை இவை என்று அறிவாரை விட, அவை அறியாத கீழ்மக்கள் நன்மையுடையவர்; அவர் போல, இவர் தம் நெஞ்சத்தில் கவலையில்லாதவர் ஆதலால் (௲௭௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நன்மை அறிந்தவரை விடக் கயவரே நல்ல பேறு உடையவர், ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர். (௲௭௰௨)
—மு. வரதராசன்

நல்லது கெட்டதை அறிந்தவரைக் காட்டிலும் கயவர் செல்வம் உடையவர் ஆவர்; காரணம், கயவர் நல்லத கெட்டது என்ற கவலையே நெஞ்சில் இல்லாதவர். (௲௭௰௨)
—சாலமன் பாப்பையா

எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப்படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்! (௲௭௰௨)
—மு. கருணாநிதி

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.   (௲௭௰௩ - 1073)
 

தேவரைப் போலவே, தம்மை நியமிப்பவர் இல்லாமல், தாம் விரும்புவன செய்து ஒழுகுதலால், கயவரும் தேவரும் ஒரே தன்மையுடையவர் ஆவர் (௲௭௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர். (௲௭௰௩)
—மு. வரதராசன்

தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர். (௲௭௰௩)
—சாலமன் பாப்பையா

புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம் (௲௭௰௩)
—மு. கருணாநிதி

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.   (௲௭௰௪ - 1074)
 

கீழ்மக்கள் தம்மிலும் கீழாக நடப்பவரைக் கண்டால், அந்தக் கீழ்மையில் தாம் அவருக்கு மேம்பட்டிருப்பதைக் காட்டித் தமக்குள் இறுமாப்பு அடைவர் (௲௭௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர். (௲௭௰௪)
—மு. வரதராசன்

தனக்கும் கீழாகத் தான் விரும்பியபடி எல்லாம் வாழும் நாய் போன்றவரைக் கண்டால் அவரைக் காட்டிலும் மேலாகத் தன் நிலையைக் காட்டி கயமை, இறுமாப்புக் கொள்ளும். (௲௭௰௪)
—சாலமன் பாப்பையா

பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களைவிடத் தாம் சிறந்தவர்கள் என்ற கர்வம் கொள்வார்கள் (௲௭௰௪)
—மு. கருணாநிதி

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.   (௲௭௰௫ - 1075)
 

‘அரசரால் துன்பம் வரும்’ என்னும் அச்சமும் கீழ்மக்களது ஆசாரத்துக்குக் காரணம்; அ·து ஒழிந்தால், விரும்பப்படும் பொருள் வரும் போது, சிறிது உண்டாகும் (௲௭௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும். (௲௭௰௫)
—மு. வரதராசன்

கயவர்களிடம் நல்ஒழுக்கம் இருந்தால் ஆட்சியைப் பற்றிய பயமே காரணம் ஆகும். அதையும் மீறி அவர்கள் ஆசைப்படும் பொருள் கிடைப்பதாக இருந்தால் அதனாலும் கொஞ்சம் ஒழுக்கம் இருக்கும். (௲௭௰௫)
—சாலமன் பாப்பையா

தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள் மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள் (௲௭௰௫)
—மு. கருணாநிதி

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.   (௲௭௰௬ - 1076)
 

கேட்ட மறைவான செய்திகளைப் பிறரிடம் தாங்கிக் கொண்டு போய்ச் சொல்வதனால், கீழ்மக்கள் செய்தியறிவிக்க அறையப்படும் பறை போன்றவர்கள் ஆவர் (௲௭௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கயவர், தாம் கேட்டறிந்த மறைப்பொருளைப் பிறர்க்கு வலிய கொண்டுபோய்ச் சொல்லுவதலால், அறையப்படும் பறை போன்றவர். (௲௭௰௬)
—மு. வரதராசன்

தாம் அறிந்த ரகசியங்களைப் பிறரிடம் வலியச் சென்று சொல்லுவதால், அடிக்கப்படும் பறையைப் போன்றவர் கயவர். (௲௭௰௬)
—சாலமன் பாப்பையா

மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம் (௲௭௰௬)
—மு. கருணாநிதி

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.   (௲௭௰௭ - 1077)
 

தம் கன்னத்தை நெரிப்பதாக வளைந்த கையினர் அல்லாதவருக்கு, கீழ்மக்கள், தாமுண்டு கழுவிய ஈரக்கையைக் கூட உதறமாட்டார்கள் (௲௭௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார். (௲௭௰௭)
—மு. வரதராசன்

தாடையை உடைக்கும் முறுக்கிய கை இல்லாதவர்க்குக் கயவர், தாம் உண்டு கழுவிய ஈரக் கையைக்கூட உதறமாட்டார். (௲௭௰௭)
—சாலமன் பாப்பையா

கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கைகைக்கூட உதற மாட்டார்கள் (௲௭௰௭)
—மு. கருணாநிதி

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.   (௲௭௰௮ - 1078)
 

குறையைச் சொன்னதும் இரக்கங்கொண்டு உதவுவதற்கு மேலோர் பயன்படுவார்கள்; கரும்பைப்போல் வலியவர் நெருக்கிப் பிழிந்தால் கயவர் அவருக்குப் பயன்படுவர் (௲௭௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அணுகி குறைச் சொல்லுகின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர், கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர். (௲௭௰௮)
—மு. வரதராசன்

இல்லாதவர் சென்று தம் நிலையைச் சொன்ன அளவில், சான்றோர் இரங்கிக் கொடுப்பர்; கயவர்களோ கரும்பைப் பிழிவதுபோல் பிழிந்தால்தான் கொடுப்பர். (௲௭௰௮)
—சாலமன் பாப்பையா

குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும் (௲௭௰௮)
—மு. கருணாநிதி

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.   (௲௭௰௯ - 1079)
 

பிறர் நன்றாக உடுப்பதையும் சுவையோடு உண்பதையும் கீழ்மகன் கண்டால், அவற்றைப் பொறாமல், அவர் மேல் வடு உண்டாக்கவும் முயல்வான் (௲௭௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கீழ் மகன் பிறர் உடுப்பதையும், உண்பதையும் கண்டால் அவர் மேல் பொறாமை கொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான். (௲௭௰௯)
—மு. வரதராசன்

பிறர் நன்கு உடுத்த, உண்ணக் கண்டால், அவர்மீத குற்றம் காணும் ஆற்றலை உடையவர் கயவர். (௲௭௰௯)
—சாலமன் பாப்பையா

ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான் (௲௭௰௯)
—மு. கருணாநிதி

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.   (௲௮௰ - 1080)
 

ஒரு துன்பம் வந்துவிட்டால், அதுவே காரணமாகத் தம்மை விரைவில் பிறருக்கு விற்பதற்குக் கயவர் உரியவராவர்; அதுவன்றி வேறு எத்தொழிலுக்கும் உரியராகார் (௲௮௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கயவர், எதற்கு உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர். (௲௮௰)
—மு. வரதராசன்

தமக்கு லாபமோ நட்டமோ வரும் என்றால் தம்மைப் பிறர்க்கு அடிமை ஆக்குவர்; இதற்கு அன்றி வேறு எந்தத் தொழிலுக்குக் கயவர் உரியர் ஆவர்? (௲௮௰)
—சாலமன் பாப்பையா

ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும் (௲௮௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: காப்பி  |  தாளம்: ஆதி
பல்லவி:
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங் கண்டதில்லை இவ்வுலகினில்

அநுபல்லவி:
மிக்கவும் தேவரனையர் கயவர் என்றும்
மேலும் இதற்குப் பொருள்
கூறும் திருக்குறள் சொல்

சரணம்:
என்னதான் பாடினாலும் இரவலர்க் கொன்றீயார்
கன்னத்தில் அறைவோர்க்கே காலில் வீழ்ந்தும் தருவார்
அன்னதன் அச்சமே கீழ்களது ஆசாரம்
அடுத்தவன் வாழ்வு கண்டால் அடுக்கியே குற்றம் கூறும்

எள்ளையும் கரும்பையும் கசக்கினால் அன்றோ பயன்
இளநீரை வெட்டினால் தான் இனிதாக மாந்தும் நயன்
கொல்லப் பயன்படும் கீழ்க் குணமும் இவ்வாறல்லவோ
சொல்லப் பயன்படுவார் சான்றோர் என்றும் சொல்லவோ




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22