விருந்தோம்பல்

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.   (௮௰௧ - 81)
 

இவ்வுலகில் இருந்து, பொருளைப் பேணி, இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவுதலின் பொருட்டே ஆகும் (௮௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும் (௮௰௧)
—மு. வரதராசன்

வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம். (௮௰௧)
—சாலமன் பாப்பையா

இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே (௮௰௧)
—மு. கருணாநிதி

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.   (௮௰௨ - 82)
 

விருந்தாக வந்தவர் வெளியே சென்றிருக்க, தான் மட்டும் உண்ணுதல், சாவா மருந்தாகிய அமிழ்தமே என்றாலும் விரும்பத் தக்கது அன்று (௮௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று (௮௰௨)
—மு. வரதராசன்

விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்று (௮௰௨)
—சாலமன் பாப்பையா

விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல (௮௰௨)
—மு. கருணாநிதி

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.   (௮௰௩ - 83)
 

நாள்தோறும் தன்னை நாடி வரும் விருந்தினரைப் போற்றுகிறவனுடைய இல்வாழ்க்கை துன்பத்தால் பாழ்படுதல் என்றும் இல்லையாகும் (௮௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை. (௮௰௩)
—மு. வரதராசன்

நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை. (௮௰௩)
—சாலமன் பாப்பையா

விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை (௮௰௩)
—மு. கருணாநிதி

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.   (௮௰௪ - 84)
 

முகமலர்ச்சியோடு நன்முறையில் விருந்தினரைப் பேணுகிறவன் வீட்டிலே, உளமலர்ச்சியோடு திருமகள் அகலாது தங்கியிருப்பாள் (௮௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள். (௮௰௪)
—மு. வரதராசன்

இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள். (௮௰௪)
—சாலமன் பாப்பையா

மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள் (௮௰௪)
—மு. கருணாநிதி

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.   (௮௰௫ - 85)
 

விருந்தினரைப் போற்றியபின், எஞ்சியதைத் தான் உண்ணுகிறவனுடைய நிலத்தில், விதையும் விதைக்க வேண்டுமோ? (௮௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ? (௮௰௫)
—மு. வரதராசன்

விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா? (௮௰௫)
—சாலமன் பாப்பையா

விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா? (௮௰௫)
—மு. கருணாநிதி

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.   (௮௰௬ - 86)
 

செல்லும் விருந்தினரையும் போற்றி, வரும் விருந்தையும் எதிர்பார்த்திருப்பவன், வானத்துத் தேவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான் (௮௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான் (௮௰௬)
—மு. வரதராசன்

வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான். (௮௰௬)
—சாலமன் பாப்பையா

வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர் (௮௰௬)
—மு. கருணாநிதி

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.   (௮௰௭ - 87)
 

விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவினது என்று கூறத்தக்கது அன்று; அது விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினது ஆகும் (௮௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும் (௮௰௭)
—மு. வரதராசன்

விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும். (௮௰௭)
—சாலமன் பாப்பையா

விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம் (௮௰௭)
—மு. கருணாநிதி

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.   (௮௰௮ - 88)
 

பொருளை வருத்தத்தோடு காத்து, அது போய்விட்டபோது ‘தாம் பற்றில்லாதவர்’ என்பவர்கள், விருந்தைப் பேணி அந்த வேள்வியில் ஈடுபடாதவரே யாவர்! (௮௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர் (௮௰௮)
—மு. வரதராசன்

விருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர். (௮௰௮)
—சாலமன் பாப்பையா

செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள் (௮௰௮)
—மு. கருணாநிதி

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.   (௮௰௯ - 89)
 

பொருள் உடைமையுள்ளும் ‘இல்லாமை’ என்பது, விருந்தோம்பலைப் பேணாத மடமையே; அஃது அறிவற்றவரிடமே உளதாகும் (௮௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும். (௮௰௯)
—மு. வரதராசன்

செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும். (௮௰௯)
—சாலமன் பாப்பையா

விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள் (௮௰௯)
—மு. கருணாநிதி

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.   (௯௰ - 90)
 

அனிச்ச மலர் மோந்தவுடனே வாடிவிடும்; முகம் மாறுபட்டு நோக்கிய உடனே விருந்தினரும் உள்ளம் வாடி விடுவார்கள் (௯௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார். (௯௰)
—மு. வரதராசன்

தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும். (௯௰)
—சாலமன் பாப்பையா

அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர் (௯௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: வசந்தா  |  தாளம்: ஆதி
பல்லவி:
அன்புடன் தேடிவந்த அரிய விருந்தோம்பும்
பண்பிதே தமிழ்ப் பண்பாம்
பாங்கியே நீ உணர்வாய்

அநுபல்லவி:
வன்புகொள்ளாவிதமே வாழ்க்கைத் துணைநலம்சேர்
மக்களன்புடைமையில்
மருவி வரும் செல்வமாய்

சரணம்:
இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
இனிதுற வேளாண்மை செய்தற் பொருட்டே; என்னும்
விருந்து புறத்திருக்கத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் உண்ணாத பெருந்தன்மையே பெறுவோம்

வந்த விருந்தினர்கள் சிந்தை மகிழும் வண்ணம்
மலர்ந்த முகம் இன்சொல்லால் வருகை மிகவும் ஏற்று
சொந்தம் மிகப் பாராட்டி சூழவிருந்தே உண்ணைத்
தோன்றும் குறள் இன்பத்தைத் தோகை நீ காண்பாயடி




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22