நெஞ்சோடு புலத்தல்

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.   (௲௨௱௯௰௧ - 1291)
 

நெஞ்சமே! அவர் நெஞ்சமானது நம்மை மறந்து அவர் விருப்பத்தையே மேற்கொள்வதைக் கண்ட பின்னரும், நீதான் எமக்குத் துணையாகாதது தான் எதனாலோ? (௲௨௱௯௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்? (௲௨௱௯௰௧)
—மு. வரதராசன்

நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல் அவரையே நினைக்கக் காரணம் என்ன? (௲௨௱௯௰௧)
—சாலமன் பாப்பையா

நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்? (௲௨௱௯௰௧)
—மு. கருணாநிதி

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.   (௲௨௱௯௰௨ - 1292)
 

என் நெஞ்சமே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்ட போதும், அவர் வெறுக்க மாட்டார் என்று நினைந்து அவரிடமே செல்கின்றாயே! அதுதான் எதனாலோ? (௲௨௱௯௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே! (௲௨௱௯௰௨)
—மு. வரதராசன்

என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் கோபப்படமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்லுகின்றாய்! (௲௨௱௯௰௨)
—சாலமன் பாப்பையா

நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே (௲௨௱௯௰௨)
—மு. கருணாநிதி

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.   (௲௨௱௯௰௩ - 1293)
 

நெஞ்சமே! நீ நின் விருப்பத்தின்படியே அவர் பின்னாகச் செல்லுதல், துன்பத்தாலே கெட்டுப் போனவருக்கு நண்பராக யாருமே இல்லை என்பதனாலோ? (௲௨௱௯௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்‌க்கு நண்பர் இல்லை என்னும் எண்ண‌மோ? (௲௨௱௯௰௩)
—மு. வரதராசன்

நெஞ்சே! நீ என்னிடம் இல்லாமல் உன் விருப்பப்படியே அவரிடம் செல்லக் காரணம், இந்த உலகத்தில் கெட்டுப் போனவர்களுக்கு நண்பர் இல்லை என்பதனாலோ? (௲௨௱௯௰௩)
—சாலமன் பாப்பையா

நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ? (௲௨௱௯௰௩)
—மு. கருணாநிதி

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.   (௲௨௱௯௰௪ - 1294)
 

நெஞ்சமே! நீதான் ஊடுதலைச் செய்து அதன் பயனையும் நுகரமாட்டாய்; இனிமேல் அத்தகைய செய்திகளைப் பற்றி நின்னோடு ஆராய்பவர் தாம் எவரோ? (௲௨௱௯௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நெஞ்‌சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்? (௲௨௱௯௰௪)
—மு. வரதராசன்

நெஞ்சே! நீ அவரைப் பார்க்கும்போது இன்பம் நுகர எண்ணுகிறாயே தவிர, அவர் தவறுகளை எண்ணி ஊடி, பிறகு உறவு கொள்ள எண்ணமாட்டாய். ஆதலால் இனி இது போன்றவற்றை உன்னோடு யார் ஆலோசனை செய்வார்? நான் செய்யமாட்டேன். (௲௨௱௯௰௪)
—சாலமன் பாப்பையா

நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை (௲௨௱௯௰௪)
—மு. கருணாநிதி

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.   (௲௨௱௯௰௫ - 1295)
 

அவரைப் பெறாத போதும் அஞ்சும்; பெற்ற போதும் பிரிவாரோ என்று அஞ்சும்; இவ்வாறு என் நெஞ்சம் நீங்காத துயரையே உடையதாகின்றது (௲௨௱௯௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது. (௲௨௱௯௰௫)
—மு. வரதராசன்

என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர் இல்லாததற்குப் பயப்படும்; அவர் வந்துவிட்டால், பிரிவாரே என்று பயப்படும். ஆகவே என் நெஞ்சம் நீங்காத துன்பத்தைப் பெற்றிருக்கிறது. (௲௨௱௯௰௫)
—சாலமன் பாப்பையா

என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும் (௲௨௱௯௰௫)
—மு. கருணாநிதி

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.   (௲௨௱௯௰௬ - 1296)
 

அவரைப் பிரிந்த நாளில், தனியே இருந்து நினைத்த போது, என் நெஞ்சம் எனக்குத் துணையாகாமல், என்னைத் தின்பது போலத் துன்பம் தருவதாக இருந்தது! (௲௨௱௯௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது. (௲௨௱௯௰௬)
—மு. வரதராசன்

காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது. (௲௨௱௯௰௬)
—சாலமன் பாப்பையா

காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது (௲௨௱௯௰௬)
—மு. கருணாநிதி

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.   (௲௨௱௯௰௭ - 1297)
 

காதலரை மறக்கவியலாத, என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்தோடு சேர்ந்து, மறக்கக் கூடாததாகிய நாணத்தையும் நான் மறந்தேனே! (௲௨௱௯௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன். (௲௨௱௯௰௭)
—மு. வரதராசன்

தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத, என் நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி, நான் நாணத்தையும் மறந்துவிட்டேன். (௲௨௱௯௰௭)
—சாலமன் பாப்பையா

அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன் (௲௨௱௯௰௭)
—மு. கருணாநிதி

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.   (௲௨௱௯௰௮ - 1298)
 

‘பிரிந்த கொடுமையாளரை இகழ்ந்தால் இழிவாகும்’ என்று நினைத்து, அவர் மேல் உயிர் போலக் காதல் கொண்ட என் நெஞ்சம், அவரது உயர் பண்புகளையே நினைக்கிறதே! (௲௨௱௯௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது. (௲௨௱௯௰௮)
—மு. வரதராசன்

உயிர்மேல் காதலை உடைய என் நெஞ்சு, நாமும் அவரை இகழ்ந்தால் பிறகு நமக்கும் இழிவுவரும் என்று எண்ணி, அவர் வரவையும் கலவியையுமே நினைத்து நின்றது. (௲௨௱௯௰௮)
—சாலமன் பாப்பையா

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் (௲௨௱௯௰௮)
—மு. கருணாநிதி

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.   (௲௨௱௯௰௯ - 1299)
 

தாம் உரியதாக அடைந்திருக்கும் நம் நெஞ்சமே தமக்குத் துணையாகாத பொழுது, ஒருவருக்குத் துன்பம் வந்த காலத்தில், வேறு எவர் தாம் துணையாவார்கள் (௲௨௱௯௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்? (௲௨௱௯௰௯)
—மு. வரதராசன்

ஒருவரது துன்பத்திற்குத் தாம் உரிமையாகப் பெற்றிருக்கும் தம் நெஞ்சமே துணையாகாதபோது, வேறு யார் துணையாவார்? (௲௨௱௯௰௯)
—சாலமன் பாப்பையா

துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்? (௲௨௱௯௰௯)
—மு. கருணாநிதி

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.   (௲௩௱ - 1300)
 

தாம் சொந்தமாக உடைய நெஞ்சமே தமக்கு உறவாகாத போது, அயலார் உறவில்லாதவராக அன்பற்று இருப்பது என்பதும் இயல்பானதே ஆகும் (௲௩௱)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும். (௲௩௱)
—மு. வரதராசன்

நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும். (௲௩௱)
—சாலமன் பாப்பையா

நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும் (௲௩௱)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: கானடா  |  தாளம்: ஆதி
பல்லவி:
அவர் நெஞ்சு அவர்க்காதல் கண்டும்
எவன் நெஞ்சே நீ எமக்காகாதது

அநுபல்லவி:
எவர் துன்பமுற்றவர்க்குத் துணை எனவோ நினைந்தாய்?
ஏனோ அன்பில்லாதவர் தம்மிடம் நீ பிணைந்தாய்

சரணம்:
நெஞ்சமே நீயே துணை வாராது எனை விடுத்தால்
நீளும் இத்துன்பத்திற்கு யாரோ துணை புரிவார்
தஞ்சம் தமரல்லார் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி என்பதும் குறள்மொழி

கண்ணோடும் காதலரைக் காணாமல் ஏங்கி நிற்பாய்
கண்டாலும் ஊடல் கொண்டு பயனும் நுகரமாட்டாய்
முன்னோடும் நெஞ்சே இனி நின்னோடும் சூழ்வார் யார்
சொன்னாலும் கேளாயோ துன்பத்திற் கிடம் நீயோ




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22