தகையணங்குறுத்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.   (௲௮௰௧ - 1081)
 

இவ் வடிவம் தேவமகளோ? சிறந்த அழகு மயிலோ? அல்லது, கனவிய குழையையுடைய ஒரு மானுடப் பெண் தானோ! புரியாமல் என் நெஞ்சம் மயங்குகின்றதே! (௲௮௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே. (௲௮௰௧)
—மு. வரதராசன்

அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா? நல்லமயிலா? பெண்ணா? யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது. (௲௮௰௧)
—சாலமன் பாப்பையா

எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம் (௲௮௰௧)
—மு. கருணாநிதி

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.   (௲௮௰௨ - 1082)
 

என்னை அவள் நோக்கினாள் (௲௮௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது. (௲௮௰௨)
—மு. வரதராசன்

என் பார்வைக்கு எதிராக அவள் என்னைப் பார்ப்பது, தானே தாக்கி எவரையும் கொல்லும் ஒரு தெய்வம், தாக்குவதற்குப் படைகளையும் கூட்டி வந்ததது போல் இருக்கிறது. (௲௮௰௨)
—சாலமன் பாப்பையா

அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானெருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது (௲௮௰௨)
—மு. கருணாநிதி

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.   (௲௮௰௩ - 1083)
 

‘கூற்று’ என்பதனை இதன்முன்னர் அறியேன்; இப்போது அறிந்துவிட்டேன்; அது, அழகிய பெண்ணின் வடிவோடு பெரியவாய் அமர்த்த கண்களையும் உடையது (௲௮௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது (௲௮௰௩)
—மு. வரதராசன்

எமன் என்று நூலோர் சொல்ல முன்பு கேட்டிருக்கிறேன்; பார்த்தது இல்லை; இப்போது தெரிந்து கொண்டேன். பெண்ணிற்கே உரிய நல்ல குணங்களுடன் பெரிதாய்ப் போரிடும் கண்களையும் உடையது தான் எமன். (௲௮௰௩)
—சாலமன் பாப்பையா

கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன் அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை (௲௮௰௩)
—மு. கருணாநிதி

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.   (௲௮௰௪ - 1084)
 

தன்னைக் கண்டவரின் உயிரை உண்ணுகின்ற தோற்றத்தோடு, பெண்களில் சிறந்தவளான இந்தப் பேதைக்குக் கண்களும் அமர்த்தனவாக அமைந்து உள்ளனவே! (௲௮௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன. (௲௮௰௪)
—மு. வரதராசன்

பெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு அவற்றைப் பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம் இருப்பதால் அவள் குணத்திற்கும் அறிவிற்கும் மாறுபட்டு போர் செய்கின்றன. (௲௮௰௪)
—சாலமன் பாப்பையா

பெண்மையின் வார்ப்படமாகத் திகழுகிற இந்தப் பேதையின் கண்கள் மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே! ஏனிந்த மாறுபாடு? (௲௮௰௪)
—மு. கருணாநிதி

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.   (௲௮௰௫ - 1085)
 

இளமைப் பருவத்தவளான இவளது பார்வை, வருத்தும் கூற்றமோ! பிறழும் கண்ணோ! மருளும் பிணையோ! இம்மூன்று தன்மையையும் தன்பால் கொண்டிருக்கிறதே! (௲௮௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது. (௲௮௰௫)
—மு. வரதராசன்

என்னை துன்புறுத்துவது எமனா? என் மேனி எங்கும் படர்வதால் கண்ணா? ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா? இப்பெண்ணின் பார்வை இம்மூன்று குணங்களையும் பெற்றிருக்கிறது. (௲௮௰௫)
—சாலமன் பாப்பையா

உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே (௲௮௰௫)
—மு. கருணாநிதி

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.   (௲௮௰௬ - 1086)
 

விளைவான இவள் புருவங்கள் செம்மையாயிருந்து விலக்கினவானால், அவற்றைக் கடந்து, இவள் கண்களும் நாம் நடுங்கும் துயரைச் செய்ய மாட்டாவே! (௲௮௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா. (௲௮௰௬)
—மு. வரதராசன்

அதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும் துன்பத்தை தரமாட்டா. (௲௮௰௬)
—சாலமன் பாப்பையா

புருவங்கள் வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா (௲௮௰௬)
—மு. கருணாநிதி

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.   (௲௮௰௭ - 1087)
 

இந்த மாதின், சாயாத முலைகளின் மேலாக இடப்பட்டுள்ள துகில், அவையும் என்னைக் கொல்லாதபடி காத்தலால், மதகளிற்றின் முகபடாத்தைப் போன்றதாகும் (௲௮௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது. (௲௮௰௭)
—மு. வரதராசன்

அந்தப் பெண்ணின் சாயாத முலைமேல் இருக்கும் சேலை, கொல்லம் மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று இருக்கிறது. (௲௮௰௭)
—சாலமன் பாப்பையா

மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது (௲௮௰௭)
—மு. கருணாநிதி

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.   (௲௮௰௮ - 1088)
 

போர்க்களத்துக்கு வராதவரும், பிறருக்கு நேர்ந்ததைக் கேட்டு அஞ்சுவதற்கு ஏதுவான என் வலிமையெல்லாம், இவளின் ஒளிவீசும் நெற்றிக்கே உடைந்து போயிற்றே! (௲௮௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே. (௲௮௰௮)
—மு. வரதராசன்

களத்தில் முன்பு என்னை அறியாதவரும் அறிந்தவர் சொல்லக் கேட்டு வியக்கும் என் திறம், அவள் ஒளி பொருந்திய நெற்றியைக் கண்ட அளவில் அழிந்துவிட்டதே. (௲௮௰௮)
—சாலமன் பாப்பையா

களத்தில் பகைவரைக் கலங்கவைக்கும் என் வலிமை இதோ இந்தக் காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்கு வளைந்து கொடுத்துவிட்டதே! (௲௮௰௮)
—மு. கருணாநிதி

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.   (௲௮௰௯ - 1089)
 

மானின் பிணைபோன்ற மடநோக்கினையும், உள்ளத்தே நாணத்தையும் உடையவளான இவளுக்கு, இவையே சிறந்த அழகாக, வேறும் அணிபூட்டி அழகுபடுத்தல் ஏனோ? (௲௮௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ. (௲௮௰௯)
—மு. வரதராசன்

பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை அணிவித்திருப்பது எதற்காகவோ? (௲௮௰௯)
—சாலமன் பாப்பையா

பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக? (௲௮௰௯)
—மு. கருணாநிதி

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.   (௲௯௰ - 1090)
 

தன்னை உண்டவருக்கு மகிழ்ச்சியைச் செய்வதல்லாமல், அடப்பட்ட தவறானது, காமத்தைப் போலக் கண்டவருக்கு மகிழ்வைச் செய்யும் ஆற்றலுடையது இல்லையே! (௲௯௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே. (௲௯௰)
—மு. வரதராசன்

காய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை. (௲௯௰)
—சாலமன் பாப்பையா

மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான் (௲௯௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: கல்யாணி  |  தாளம்: ஆதி
பல்லவி:
அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ
கனங்குழை மாதர் கொல்
மாலும் என் நெஞ்சு காணும் எழில் கொஞ்சும்

அநுபல்லவி:
மணங்கமழ் சோலையில் ஆடவந்தாளோ
மான் தேடுகின்றாளோ நான் காண நின்றாளோ

சரணம்:
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இம்மூன்றும் உடைத்தெனும் திருக்குறள்
ஏற்ற கொடும்புருவம் கோடா மறைப்பின்
என்னை வருத்தும் துன்பம் இல்லையென்றே உரைப்பன்

நண்ணாரும் போர்க்களத்தில் எனைக்கண்டால் அஞ்சும் வீரம்
ஒண்ணுதற்கோ உடைந்த விந்தையைக் கேளும்
உண்டாரையே மயக்கும் கள்ளல்ல இவள் காமம்
கண்டாலும் இன்பம் தரும் காவியத் தேனூறும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22