தெரிந்து செயல் வகை

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.   (௪௱௬௰௧ - 461)
 

ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக, அதனால் முதலில் அழியக்கூடியதும், பின்னர் ஆகிவரக்கூடியதும், கிடைக்கும் மிச்சமும் கருதிய பின்னரே செய்ய வேண்டும் (௪௱௬௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும். (௪௱௬௰௧)
—மு. வரதராசன்

ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க. (௪௱௬௰௧)
—சாலமன் பாப்பையா

எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும் (௪௱௬௰௧)
—மு. கருணாநிதி

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.   (௪௱௬௰௨ - 462)
 

தொழில் தெரிந்த நண்பர்களுடன் கலந்து எதையும் ஆராய்ந்து செய்பவருக்கு, முடிவதற்கு அரிய பொருள் என்று சொல்லக் கூடியது யாதொன்றுமே இல்லை (௪௱௬௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை. (௪௱௬௰௨)
—மு. வரதராசன்

தாம் தேர்ந்துகொண்ட நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்க்குச் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை. (௪௱௬௰௨)
—சாலமன் பாப்பையா

தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை (௪௱௬௰௨)
—மு. கருணாநிதி

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.   (௪௱௬௰௩ - 463)
 

வரப்போவதாகக் கருதும் ஆக்கத்தை எண்ணி, செய்துள்ள முதலீட்டையும் இழக்கின்ற முயற்சியினை அறிவுடையவர்கள் ஒரு போதும் மேற்கொள்ள மாட்டார்கள் (௪௱௬௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார். (௪௱௬௰௩)
—மு. வரதராசன்

வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார். (௪௱௬௰௩)
—சாலமன் பாப்பையா

பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள் (௪௱௬௰௩)
—மு. கருணாநிதி

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.   (௪௱௬௰௪ - 464)
 

தமக்கு இகழ்ச்சி தருவதான ஒரு குறைபாட்டுக்கு அஞ்சுகிறவர்கள், ஊதியம் வரும் என்று தெளிவில்லாத செயலை ஒரு போதும் தொடங்க மாட்டார்கள் (௪௱௬௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார். (௪௱௬௰௪)
—மு. வரதராசன்

தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார். (௪௱௬௰௪)
—சாலமன் பாப்பையா

களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள் (௪௱௬௰௪)
—மு. கருணாநிதி

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.   (௪௱௬௰௫ - 465)
 

ஒரு செயலைப் பற்றி எல்லாவகையிலும் முற்றவும் ஆராயாமல் செய்யத் தொடங்குதல், பகைவரை நல்ல பயிருள்ள பாத்தியுள் நிலைபெறுத்துவது போன்ற செயலாகும் (௪௱௬௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும். (௪௱௬௰௫)
—மு. வரதராசன்

முறையாகத் திட்டமிடாது ஒரு செயலைத் தொடங்குவது, வளரும் நிலத்திலே எதிர் அணியினரை நிலைபெறச் செய்யும் வழியாகும். (௪௱௬௰௫)
—சாலமன் பாப்பையா

முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும் (௪௱௬௰௫)
—மு. கருணாநிதி

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்   (௪௱௬௰௬ - 466)
 

செய்யத் தகுந்தது அல்லாது ஒரு செயலைச் செய்தாலும் பொருள் கெடும்; செய்யத் தகுந்த செயலைச் செய்யாமையாலும் பொருள் கெடும் (௪௱௬௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான். (௪௱௬௰௬)
—மு. வரதராசன்

செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும். (௪௱௬௰௬)
—சாலமன் பாப்பையா

செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும் (௪௱௬௰௬)
—மு. கருணாநிதி

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.   (௪௱௬௰௭ - 467)
 

நன்றாக எண்ணிய பின்னரே ஒரு செயலைச் செய்யத் துணிய வேண்டும்; ‘துணிந்த பின்னர் எண்ணுவோம்’ என்று எதையும் நினைப்பது குற்றமாகும் (௪௱௬௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும். (௪௱௬௰௭)
—மு. வரதராசன்

ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம். (௪௱௬௰௭)
—சாலமன் பாப்பையா

நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு (௪௱௬௰௭)
—மு. கருணாநிதி

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.   (௪௱௬௰௮ - 468)
 

செய்வதற்கு உரிய வழிகளிலே முயன்று செய்யப்படாத தொழிலானது, பலர் துணை நின்று பின்னர்க் காத்தாலும் கெட்டுப் போய்விடும் (௪௱௬௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும். (௪௱௬௰௮)
—மு. வரதராசன்

ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும். (௪௱௬௰௮)
—சாலமன் பாப்பையா

எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும் (௪௱௬௰௮)
—மு. கருணாநிதி

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.   (௪௱௬௰௯ - 469)
 

அவரவரது இயல்புகளைத் தெரிந்து கொண்டு, அவரவர்க்குத் தகுந்தபடி செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் கூடக் குற்றம் உண்டாகிவிடும் (௪௱௬௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். (௪௱௬௰௯)
—மு. வரதராசன்

அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும். (௪௱௬௰௯)
—சாலமன் பாப்பையா

ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும் (௪௱௬௰௯)
—மு. கருணாநிதி

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.   (௪௱௭௰ - 470)
 

உயர்ந்தோர் இகழ்ச்சியாக நினையாத செயல்களையே ஆராய்ந்து செய்யவேண்டும்; உயர்ந்தோர் தம் தகுதியோடு பொருந்தாதவற்றை ஏற்கவே மாட்டார்கள் (௪௱௭௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும். (௪௱௭௰)
—மு. வரதராசன்

தன் தகுதிக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால் மக்கள் அதை இகழ்வர்; அதனால் மக்கள் இகழாத வழிமுறைகளை எண்ணிச் செய்ய வேண்டும். (௪௱௭௰)
—சாலமன் பாப்பையா

தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும் (௪௱௭௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: கரகரப்பிரியா  |  தாளம்: ஆதி
பல்லவி:
தெரிந்து செயல் வகையைத் தேர்ந்திடல் வேண்டும்
தெளிவு பெற்றே எதையும்
செய்திடல் வேண்டும்

அநுபல்லவி:
புரிந்து மக்களாட்சியைப் போற்றிடும் தலைமை
புதுப் புது வகையெல்லாம் சூழ்ந்திடும் நிலைமை

சரணம்:
ஆவதைவிடப் பொருள் அழிவதில் குறையவும்
அதனால் வழி பயக்கும் ஊதியம் நிறையவும்
காவலும் ஏவலும் காணவே மிகுத்தும்
கைமுதல் இழக்காத கருத்தினைப் புகுத்தும்

பரிந்திடும் தன்முயற்சிப் பண்பு கெடாமல்
பகை முளைப் பாத்தியில் வளர விடாமல்
தெரிந்த வினத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும் பொருள் யாதொன்றுமில்லை யெனுமாம் குறள்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22