வாழ்க்கைத் துணைநலம்

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.   (௫௰௧ - 51)
 

இல்வாழ்வுக்குத் தகுந்த சிறந்த பண்பு உடையவளாகித் தன்னை மணந்தவனின் வளமைக்குத் தகுந்தபடி நடப்பவளே, சிறந்த வாழ்க்கைத் துணைவியாவாள் (௫௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள். (௫௰௧)
—மு. வரதராசன்

பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி. (௫௰௧)
—சாலமன் பாப்பையா

இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள் (௫௰௧)
—மு. கருணாநிதி

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.   (௫௰௨ - 52)
 

இல்வாழ்வுக்கான சிறப்புகள் அனைத்தும் மனைவியிடம் இல்லையானால், அந்த இல்வாழ்க்கையில் எவ்வளவு சிறப்பிருந்தாலும் அது வாழ்வு ஆகாது (௫௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை. (௫௰௨)
—மு. வரதராசன்

நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே. (௫௰௨)
—சாலமன் பாப்பையா

நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது (௫௰௨)
—மு. கருணாநிதி

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?.   (௫௰௩ - 53)
 

இல்லாள் சிறந்தவளானால் இல்லாதது என்பது என்ன? இல்லவள் சிறந்தவள் அல்லாதபோது உள்ளதுதான் என்ன? (௫௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன? (௫௰௩)
—மு. வரதராசன்

நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன? (௫௰௩)
—சாலமன் பாப்பையா

நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும் அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது (௫௰௩)
—மு. கருணாநிதி

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.   (௫௰௪ - 54)
 

கற்பு என்னும் மனவுறுதி, இல்லாளிடம் உண்டாயிருந்தால், அந்தப் பெண்ணை விடப் பெருமை மிக்கவை உலகில் யாவை உள்? ஒன்றுமில்லை (௫௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன? (௫௰௪)
—மு. வரதராசன்

கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை? (௫௰௪)
—சாலமன் பாப்பையா

கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது? (௫௰௪)
—மு. கருணாநிதி

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.   (௫௰௫ - 55)
 

தெய்வம் தொழாதவளாய்த் தன் கொழுநனையே தொழுது துயிலெழுகின்ற கற்புடையவள் ‘பெய்’ என்றால், மழையும் பெய்யும் (௫௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும். (௫௰௫)
—மு. வரதராசன்

பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும். (௫௰௫)
—சாலமன் பாப்பையா

கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள் (௫௰௫)
—மு. கருணாநிதி

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.   (௫௰௬ - 56)
 

தன் கற்பு வழுவாமல் காத்துத் தன் கணவனையும் பேணித் தகுதியமைந்த புகழையும் காத்துச் சோர்வு அடையாதவளே பெண் (௫௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண். (௫௰௬)
—மு. வரதராசன்

உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி. (௫௰௬)
—சாலமன் பாப்பையா

கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண் (௫௰௬)
—மு. கருணாநிதி

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.   (௫௰௭ - 57)
 

சிறை வைத்துக் காக்கின்ற காவல் என்ன பயனைச் செய்து விடும்? மகளிர், ‘நிறை’ என்னும் பண்பைக் காப்பதே சிறப்பானதாகும் (௫௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது. (௫௰௭)
—மு. வரதராசன்

இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது. (௫௰௭)
—சாலமன் பாப்பையா

தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும் (௫௰௭)
—மு. கருணாநிதி

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.   (௫௰௮ - 58)
 

பெண்கள் கணவரைப் போற்றித் தம் கடமைகளையும் செய்வாரானால், பெரும் சிறப்புடைய புத்தேளிர் வாழும் உலகினைப் பெறுவார்கள் (௫௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர். (௫௰௮)
—மு. வரதராசன்

பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள். (௫௰௮)
—சாலமன் பாப்பையா

நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும் (௫௰௮)
—மு. கருணாநிதி

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.   (௫௰௯ - 59)
 

புகழைக் காப்பாற்ற விரும்பும் மனைவி இல்லாதவருக்கு, இகழ்ச்சியாகப் பேசுபவர் முன்னே ஏறுபோல் நடக்கும் பெருமித நடையும் இல்லை (௫௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை. (௫௰௯)
—மு. வரதராசன்

புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை. (௫௰௯)
—சாலமன் பாப்பையா

புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள் (௫௰௯)
—மு. கருணாநிதி

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.   (௬௰ - 60)
 

மனைவியின் சிறந்த பண்பே இல்வாழ்வுக்கு மங்கலம்; நல்ல மக்கட்பேறும் உடையதாய் இருத்தல், அதற்கு நல்ல அணிகலன் ஆகும் (௬௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர். (௬௰)
—மு. வரதராசன்

ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே. (௬௰)
—சாலமன் பாப்பையா

குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது (௬௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: காம்போதி  |  தாளம்: ஆதி
பல்லவி:
பெண்ணின் பெருமையை
எண்ணி நாம் மதித்திடப்
பேசும் திருக்குறள் காண்!
பொய்யா மொழியார்
பேசும் திருக்குறள் காண்!

அநுபல்லவி:
கண்ணின் மணியாய்க் கனியின் சுவையாய்க்
கலந்துயிர் வாழ்க்கையில்
மலர்ந்து நலம் விளைக்கும்

சரணம்:
தன்னையும் காத்துத் தன் கணவனையும் காத்து
தகுதியுடைய புகழ் மிகுதியும் சேர்த்து
பொன்னைப் பொருளைவிட மென்மேலாய்ப்
போற்றும் தன் கற்பினை ஏற்றும் திண்மை மிகுந்த

நினைத்தபடி நடக்கும் ஆடவர் தம்மை
நேர்வழிப் படுத்தியே சீர்செய்யும் பெண்மை
"மனைத்தக்க மாண்புடையளாகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத்துணை" என்றே மணம் கமழும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22