ஒற்றாடல்

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.   (௫௱௮௰௧ - 581)
 

ஒற்றர்களும், புகழ் அமைந்த அறநூலும் என்னும் இந்த இரண்டு பகுதியையுமே, ஒரு மன்னன் தனக்குரிய இரு கண்களாகக் கொள்ளல் வேண்டும் (௫௱௮௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும். (௫௱௮௰௧)
—மு. வரதராசன்

ஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதிநூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக. (௫௱௮௰௧)
—சாலமன் பாப்பையா

நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும் (௫௱௮௰௧)
—மு. கருணாநிதி

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.   (௫௱௮௰௨ - 582)
 

எல்லாருக்கும் நிகழ்கின்ற எல்லாவற்றையும், எல்லாக் காலத்திலும், மிகவும் விரைவாக ஒற்றர்மூலம் அறிந்து கொள்ளுதல், வேந்தனுக்கு உரிய தொழிலாகும் (௫௱௮௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும். (௫௱௮௰௨)
—மு. வரதராசன்

பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை. (௫௱௮௰௨)
—சாலமன் பாப்பையா

நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும் (௫௱௮௰௨)
—மு. கருணாநிதி

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்   (௫௱௮௰௩ - 583)
 

பகைநாட்டு நிகழ்ச்சிகளை ஒற்றர்மூலமாகத் தெரிந்து கொண்டு, அவற்றின் பொருளையும் ஆராய்ந்து தெளியாத மன்னன், போரில் வெற்றி கொள்வதற்கு வழியே இல்லை (௫௱௮௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழி வேறு இல்லை. (௫௱௮௰௩)
—மு. வரதராசன்

எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி, நிலைத்து வெற்றி பெற வேறொரு வழியே இல்லை. (௫௱௮௰௩)
—சாலமன் பாப்பையா

நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை (௫௱௮௰௩)
—மு. கருணாநிதி

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.   (௫௱௮௰௪ - 584)
 

அரசன் செயல்களைச் செய்பவர்கள், அரசனுக்கு உரிய சுற்றத்தினர், அரசனை விரும்பாத பகைவர், என்று சொல்லப்படும் அனைவரையும் ஆராய்வதே, ஒற்றரின் கடமை (௫௱௮௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும். (௫௱௮௰௪)
—மு. வரதராசன்

அரசுப் பணியாளர், ஆளும் கட்சி, அதன் எதிர்கட்சியினர், அயலவர் என்று அனைவரின் சொல், செயல் கொண்டு அவர்தம் மனக்கருத்தை அறிபவரே ஒற்றர். (௫௱௮௰௪)
—சாலமன் பாப்பையா

ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர், வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல் பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும் (௫௱௮௰௪)
—மு. கருணாநிதி

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.   (௫௱௮௰௫ - 585)
 

சந்தேகப்படாத மாற்றுருவுடன், எவருடைய பார்வைக்கும் அஞ்சாமல், அறிந்ததைத் தன் அரசனைத் தவிரப் பிறருக்கு வெளிப்படுத்தாமலிருக்க வல்லவே ஒற்றன் (௫௱௮௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவன். (௫௱௮௰௫)
—மு. வரதராசன்

பிறர் சந்தேகப்படாத வேடத்‌தோடு சென்று, சந்தேகப்பட்டுச் சினந்தால் அஞ்சாது நின்று, சாமதானபேத தண்டம் என எந்த உபாயம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாத வல்லமை பெற்றவரே ஒற்றர். (௫௱௮௰௫)
—சாலமன் பாப்பையா

சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும் (௫௱௮௰௫)
—மு. கருணாநிதி

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.   (௫௱௮௰௬ - 586)
 

புகமுடியாத இடங்களுக்கும், துறவியர் வேடத்தோடு சென்று, அனைத்தையும் ஆராய்ந்து, எவர் யாது செய்தாலும் அதனால் சோர்வடையாதவனே ஒற்றன் (௫௱௮௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அறிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்து விடாதவரே ஒற்றர் ஆவர். (௫௱௮௰௬)
—மு. வரதராசன்

செல்ல முடியாத இடங்களுக்கும் கூடத் துறவியர் வேடத்தில் சென்று, அறிய வேண்டுவற்றை அறிந்து, அங்கே பிடிபட்டால், பிடித்தவர் எத்தகைய துன்பம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாதவரே ஒற்றர். (௫௱௮௰௬)
—சாலமன் பாப்பையா

ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர் (௫௱௮௰௬)
—மு. கருணாநிதி

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.   (௫௱௮௰௭ - 587)
 

மறைவான பேச்சுக்களையும் கேட்டு அறியக்கூடிய திறமை உள்ளவனாகி, தான் அறிந்தவற்றில் எவ்விதச் சந்தேகமும் இல்லாதவனே நல்ல ஒற்றன் (௫௱௮௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான். (௫௱௮௰௭)
—மு. வரதராசன்

ரகசியமாக நடந்த செயல்களையும் அவற்றைச் செய்தவர் வாயாலேயே கேட்டு அறியும் ஆற்றல் படைத்தவராய், கேட்டவற்றுள் எத்தகைய சந்தேகமும் இல்லாதவராய் இருப்பவரே ஒற்றர். (௫௱௮௰௭)
—சாலமன் பாப்பையா

மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும் (௫௱௮௰௭)
—மு. கருணாநிதி

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.   (௫௱௮௰௮ - 588)
 

ஓர் ஒற்றன் அறிந்து வந்து சொன்ன செய்தியையும், மற்றுமோர் ஒற்றனை ஏவி அறிந்து வருமாறு செய்து, உண்மையை ஒப்பிட்டு அறிதல் வேண்டும் (௫௱௮௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும். (௫௱௮௰௮)
—மு. வரதராசன்

ஓர் ஒற்றர் கொண்டு வந்த செய்தியை இன்னும் ஓர் ஒற்றர் தரும் செய்தியோடு சரி பார்த்துக் கொள்க. (௫௱௮௰௮)
—சாலமன் பாப்பையா

ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும் (௫௱௮௰௮)
—மு. கருணாநிதி

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.   (௫௱௮௰௯ - 589)
 

ஓர் ஒற்றன் மற்றோர் ஒற்றனை அறியாதபடி பார்த்துக் கொள்வதோடு, இப்படி மூன்று ஒற்றர் சொல்வதையும் ஒருங்கே ஆராய்ந்தே, உண்மை தெளியவேண்டும் (௫௱௮௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள வேண்டும், அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும். (௫௱௮௰௯)
—மு. வரதராசன்

ஒற்றரை இயக்கும்போது ஓர் ஒற்றரை இன்னுமோர் ஒற்றர் அறிந்துகொள்ளாதபடி இயக்குக; ஒரு காரியத்திற்கு மூவர் சொல்லும் ஒன்றுபோலவே இருந்தாலும் அதையும் ஆய்ந்து பிறகு ஏற்றுக்கொள்க. (௫௱௮௰௯)
—சாலமன் பாப்பையா

ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம் (௫௱௮௰௯)
—மு. கருணாநிதி

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.   (௫௱௯௰ - 590)
 

பிறர் அறியும்படியாக ஒற்றனுக்குச் சிறப்புக்களைச் செய்யக் கூடாது; செய்தால், மறைக்க வேண்டிய இரகசியத்தை அரசனே வெளிப்படுத்தினவன் ஆவான் (௫௱௯௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது, செய்தால் மறைபொருளைத்தானே வெளிப்படுத்தியவன் ஆவான். (௫௱௯௰)
—மு. வரதராசன்

மறைவாக நிகழ்வனவற்றைஅறிந்து சொல்லும் ஒற்றருக்குப் பரிசு தருக; மறைவாகவே தருக; ஊர் அறியத் தருவது மறைவையும் ஒற்றரையும் தானே வெளிப்படுத்தியது போல் ஆகும். (௫௱௯௰)
—சாலமன் பாப்பையா

ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும் (௫௱௯௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: பிலகரி  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
ஒற்றாடல் ஆட்சிக் கினியதே
ஓடி வரும் காற்றெனவே
தேடி வரும் பொருளதுவே

அநுபல்லவி:
ஒற்றும் உரை சான்ற நூலும்
ஒளிரும் இரு கண்களாகும்
உற்றார் கிளை நட்பாயினும்
முற்றாய்வதில் வெற்றி மேவும்

சரணம்:
ஏற்ற வினைக்கேற்ப தோற்றமும் பெற்றிடும்
இக்கட்டில்லாமலே திக்கெட்டும் சுற்றிடும்
மாற்றலர் முன்னும் கண்ணஞ்சாமல் ஒற்றிடும்
மறந்தும் தனை வெளியிடாமல்
இறந்தாலுமே நெறி கெடாமல்

மறைந்தவை கேட்க வற்றாகி அறிந்தவை
ஐயப் பாடில்லதே ஒற்றெனத் தெரிந்தவை
நிறைந்தவராய் ஒரு மூவர் சொல் புரிந்தவை
நேர் படவும் மறைமுகமே
சீர் பரவும் இறையகமே




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22