பேதைமை

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.   (௮௱௩௰௧ - 831)
 

‘பேதைமை’ என்பதன் தன்மை யாது?’ என்றால், ஒன்றைச் செய்யும் போது வரும் துன்பத்தை ஏற்றுக் கொண்டு, அதனால் வரும் ஊதியத்தை விட்டுவிடுதல் ஆகும் (௮௱௩௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும். (௮௱௩௰௧)
—மு. வரதராசன்

அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம். (௮௱௩௰௧)
—சாலமன் பாப்பையா

கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும் (௮௱௩௰௧)
—மு. கருணாநிதி

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.   (௮௱௩௰௨ - 832)
 

பேதைமை என்பவற்றுள் எல்லாம் பெரிய பேதைமையாவது, விரும்பத்தகாத ஒரு செயலைச் செய்யத் தொடங்கி, அதையும் பொருத்தமற்ற வகையில் செய்தல் ஆகும் (௮௱௩௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும். (௮௱௩௰௨)
—மு. வரதராசன்

அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும். (௮௱௩௰௨)
—சாலமன் பாப்பையா

தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது, என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும் (௮௱௩௰௨)
—மு. கருணாநிதி

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.   (௮௱௩௰௩ - 833)
 

பழிக்கு வெட்கப்படாமையும், நன்மைகளை விரும்பாதிருத்தலும், அன்பரிடம் அன்புகொள்ளாமையும், எதனையும் பேணிக் காவாமையும், பேதையரது தொழிலாகும் (௮௱௩௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள். (௮௱௩௰௩)
—மு. வரதராசன்

தீமைக்கு வெட்கப்படாதிருப்பது, விரும்ப வேண்டியவற்றை விரும்பாதிருப்பது, எவரிடத்தும் அன்பு இல்லாதிருப்பது, காக்க வேண்டிய எதையும் காவாதிருப்பது ஆகியவை அறிவற்றவரின் செயல்கள் ஆகும். (௮௱௩௰௩)
—சாலமன் பாப்பையா

வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேடவேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுக்காக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும் (௮௱௩௰௩)
—மு. கருணாநிதி

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.   (௮௱௩௰௪ - 834)
 

நூல்களை முறையாக ஓதி உணர்ந்தும், பிறருக்குச் சொல்லி வந்தும், தான் அடக்கத்தைக் கொள்ளாத பேதையிலும், பெரிய பேதையர் உலகில் எவரும் இலர் (௮௱௩௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை. (௮௱௩௰௪)
—மு. வரதராசன்

படித்தும், படித்தவற்றை உணர்ந்தும், மற்றவர்க்குச் சொல்லியும், அவற்றின்படி வாழாதவரைக் காட்டிலும் அறிவற்றவர் வேறு இல்லை. (௮௱௩௰௪)
—சாலமன் பாப்பையா

படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது (௮௱௩௰௪)
—மு. கருணாநிதி

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.   (௮௱௩௰௫ - 835)
 

இந்தப் பிறப்பில் பேதைமைச் செயல்களையே செய்துவரும் பேதை (௮௱௩௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான். (௮௱௩௰௫)
—மு. வரதராசன்

அறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான். (௮௱௩௰௫)
—சாலமன் பாப்பையா

தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக்காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும் (௮௱௩௰௫)
—மு. கருணாநிதி

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.   (௮௱௩௰௬ - 836)
 

ஒன்றின் செய்வகை அறியாத பேதை அதனைச் செய்வதற்கு முற்படுவதால், அது பொய்யாகிப் போவதுடன், அவனும் தளைபூண்கின்ற துயரத்தை அடைவான் (௮௱௩௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான். (௮௱௩௰௬)
—மு. வரதராசன்

செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான். (௮௱௩௰௬)
—சாலமன் பாப்பையா

நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர் (௮௱௩௰௬)
—மு. கருணாநிதி

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.   (௮௱௩௰௭ - 837)
 

பேதை, தன் முன்வினைப் பயனால் பெருஞ்செல்வத்தை அடைந்த காலத்தில், தொடர்பில்லாத பலரும் நன்றாக அனுபவிக்க, அவன் சுற்றத்தார் பசியால் வாடுவர் (௮௱௩௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர். (௮௱௩௰௭)
—மு. வரதராசன்

அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர். (௮௱௩௰௭)
—சாலமன் பாப்பையா

அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக் கொள்ளப் பயன்படுமேயல்லாமல் பசித்திருக்கும் பாசமுள்ள சுற்றத்தாருக்குப் பயன்படாது (௮௱௩௰௭)
—மு. கருணாநிதி

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.   (௮௱௩௰௮ - 838)
 

பேதை ஒரு பொருளைத் தனது உடைமையாகப் பெற்றால், மயங்கிய ஒருவன் மேன்மேலும் கள்ளைப் பருகியது போல நிலைமாறி வழிதவறி நடப்பான் (௮௱௩௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும். (௮௱௩௰௮)
—மு. வரதராசன்

அறிவற்றவன் தன்னிடம் ஒன்றைச் சொந்தமாகப் பெறுவது, முன்பே பிடித்துப் பிடித்தவன், கள்ளால் மயங்கியும் நிற்பது போல் ஆகும். (௮௱௩௰௮)
—சாலமன் பாப்பையா

நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால் பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும் (௮௱௩௰௮)
—மு. கருணாநிதி

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.   (௮௱௩௰௯ - 839)
 

ஒருவகையில், பேதையோடு கொள்ளும் தொடர்பும் இனிமை தருவதேயாகும்; அதுதான், அவனைப் பிரிந்த விடத்துத் துன்பம் தரும் தன்மை இல்லாததால் (௮௱௩௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும். (௮௱௩௰௯)
—மு. வரதராசன்

அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்ட நட்பு அவ்வளவு இனிமையானது! (௮௱௩௰௯)
—சாலமன் பாப்பையா

அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால் அவர்களிடமிருந்து புரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை (௮௱௩௰௯)
—மு. கருணாநிதி

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.   (௮௱௪௰ - 840)
 

சான்றோர்களின் கூட்டத்தில் ஒரு பேதை புகுதலானது, மாசுபடிந்த காலைக் கழுவாமல், தொழுகைக்குரிய பள்ளியினுள்ளே எடுத்து வைப்பது போன்றதாகும் (௮௱௪௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது. (௮௱௪௰)
—மு. வரதராசன்

சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும். (௮௱௪௰)
—சாலமன் பாப்பையா

அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது (௮௱௪௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: பந்துவராளி  |  தாளம்: ஆதி
பல்லவி:
பிறப்பில் சிறப்பில்லாத பேதைமையே - உன்னைப்
பெற்றவர் பெற்றபயன் ஏதொன்றுமே இல்லையே

அநுபல்லவி:
வரப்பில் நடக்க மாட்டாய் வழியில் குழி வெட்டுவாய்
வாழ்க்கையில் ஊதியமே வாராமலே விடுத்தாய்

சரணம்:
பித்துப் பிடித்தாய் மேலும் களித்து நிலை குலைந்தாய்
பெரும் பழிக்கும் நாணாமல் பேய் போலவே அலைந்தாய்
சத்தான உண்மை அன்பும் தழுவாமலே கைவிட்டாய்
சான்றோர் அவையுள் புகும் தகுதியுமின்றிக் கெட்டாய்

"ஏதிலார் ஆரத்தமர் பசித்தே இருப்பார்
பேதை பெரும் செல்வம் உற்றக் கடை" யாகவே
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையில் பேதையாம் நின் பிரிவே பெரிதினிதாம்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22