கண்ணோட்டம்

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.   (௫௱௭௰௧ - 571)
 

‘கண்ணோட்டம்’ என்று சொல்லப்படுகின்ற மிகப் பெரிய அழகு இருப்பதனாலேதான் (௫௱௭௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது. (௫௱௭௰௧)
—மு. வரதராசன்

முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது. (௫௱௭௰௧)
—சாலமன் பாப்பையா

இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது (௫௱௭௰௧)
—மு. கருணாநிதி

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.   (௫௱௭௰௨ - 572)
 

உலக நடைமுறை என்பது கண்ணோட்டத்தினால் நடந்து வருவதே; ஆகவே, கண்ணோட்டம் இல்லாதவர்கள் இருப்பது உலகத்திற்கு வீண் சுமைதான் (௫௱௭௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை. (௫௱௭௰௨)
—மு. வரதராசன்

மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே. (௫௱௭௰௨)
—சாலமன் பாப்பையா

அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள் (௫௱௭௰௨)
—மு. கருணாநிதி

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.   (௫௱௭௰௩ - 573)
 

பொருளோடு பாடல் பொருந்தவில்லை என்றால் அந்த இசையினால் பயன் இல்லை; அது போலவே, கண்ணோட்டத்தோடு அமையாத கண்களாலும் பயன் இல்லை (௫௱௭௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும். (௫௱௭௰௩)
—மு. வரதராசன்

பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்? (௫௱௭௰௩)
—சாலமன் பாப்பையா

இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும் (௫௱௭௰௩)
—மு. கருணாநிதி

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.   (௫௱௭௰௪ - 574)
 

தேவையான அளவுக்குக் கண்ணோட்டம் இல்லாத கண்ணானது, முகத்திலே இருப்பதுபோலத் தோன்றுவதைத் தவிர, உடையவனுக்கு என்ன நன்மையைத் தரும்? (௫௱௭௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும். (௫௱௭௰௪)
—மு. வரதராசன்

வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு? (௫௱௭௰௪)
—சாலமன் பாப்பையா

அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப்பயனும் இல்லாதவைகளாகும் (௫௱௭௰௪)
—மு. கருணாநிதி

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.   (௫௱௭௰௫ - 575)
 

கண்ணுக்கு அழகுதரும் ஆபரணம் கண்ணோட்டமே! அந்தக் கண்ணோட்டமாகிய ஆபரணம் இல்லையானால், அது ‘புண்’ என்றே சான்றோரால் கருதப்படும் (௫௱௭௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும். (௫௱௭௰௫)
—மு. வரதராசன்

ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும். (௫௱௭௰௫)
—சாலமன் பாப்பையா

கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும் இல்லையானால் அது கண் அல்ல; புண் (௫௱௭௰௫)
—மு. கருணாநிதி

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.   (௫௱௭௰௬ - 576)
 

கண்ணோடு பொருந்தியவராக இருந்தும், கண்ணோட்டம் ஆகிய செயலைச் செய்யாதவர்கள், மண்ணோடு பொருந்தியுள்ள மரத்தைப் போன்றவர்கள் ஆவர் (௫௱௭௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கண்ணோட்டதிற்க்கு உரிய கண்ணோடுப் பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரத்தினைப் போன்றவர். (௫௱௭௰௬)
—மு. வரதராசன்

கண் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே. (௫௱௭௰௬)
—சாலமன் பாப்பையா

ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார் (௫௱௭௰௬)
—மு. கருணாநிதி

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.   (௫௱௭௰௭ - 577)
 

கண்ணோட்டம் இல்லாதவர்கள், கண்கள் இருந்தாலும் குருடர்களே; கண்ணுடையவர்கள், கண்ணோட்டம் இல்லாமல் இருத்தல் என்பது பொருத்தமில்லை (௫௱௭௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர், கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லா திருத்தலும் இல்லை. (௫௱௭௰௭)
—மு. வரதராசன்

கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை. (௫௱௭௰௭)
—சாலமன் பாப்பையா

கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள் (௫௱௭௰௭)
—மு. கருணாநிதி

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.   (௫௱௭௰௮ - 578)
 

தொழிலே கெடுதல் ஏற்படாமல், எவரிடமும் கண்ணோட்டத்துடன் நடந்து கொள்ள வல்லவர்களுக்கு, இவ்வுலகமே உரிமை உடையதாகும் (௫௱௭௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது. (௫௱௭௰௮)
—மு. வரதராசன்

தம் செயலுக்குச் சேதம் வராமல் கண்ணோட்டம் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு இந்த உலகம் சொந்தமாகும். (௫௱௭௰௮)
—சாலமன் பாப்பையா

கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும் (௫௱௭௰௮)
—மு. கருணாநிதி

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.   (௫௱௭௰௯ - 579)
 

தம்மை வருத்தும் தன்மை உடையவரிடத்திலும், கண்ணோட்டம் உடையவராக, அவரது குற்றத்தையும் பொறுத்து நடக்கும் பண்பே சிறந்ததாகும் (௫௱௭௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது. (௫௱௭௰௯)
—மு. வரதராசன்

தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது. (௫௱௭௰௯)
—சாலமன் பாப்பையா

அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும் (௫௱௭௰௯)
—மு. கருணாநிதி

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.   (௫௱௮௰ - 580)
 

விரும்பத்தகுந்த ‘கண்ணோட்டம்’ என்னும் நாகரிகத்தை விரும்பும் சான்றோர்கள், பழகியவர் நஞ்சைப் பெய்வதைக் கண்டாலும், அதனை உண்டு அமைவார்கள் (௫௱௮௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர். (௫௱௮௰)
—மு. வரதராசன்

எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புபவர், தமக்கு நெருக்கமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்தும் கண்ணோட்டம் காரணமாக அதை உண்டு அவருடன் பழகுவர். (௫௱௮௰)
—சாலமன் பாப்பையா

கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள் (௫௱௮௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: காம்போதி  |  தாளம்: ஆதி
பல்லவி:
காணும் கண்ணோட்டம் இனிதே - உலகில்
காணும் கண்ணோட்டம் இனிதே
காட்சிக் கெளிய இறைமாட்சியதன் அழகைக்

அநுபல்லவி:
பூணும் அணி பணிகள் பொன் வயிர மென்றாலும்
காணும் கண்ணோட்டத்தின் முன் கருதவும் நிகராகுமோ

சரணம்:
மண்ணோடியைந்த மரம் எனும் வசை தீரவும்
மனிதன் கண் புண்படாத வழியினைச் சாரவும்
பண்ணோடியைந்த தமிழ்ப் பண்பாடல் தேறவும்
பாங்குறும் தன் கருமம் சிதையாது
தாங்கிடும் வல்லமையும் குறையாது

ஒறுத்தாற்றும் பண்பினார்க் காணும் கண்ணோடி
பொறுத்தாற்றும் பண்பே தலையெனும் குறள்நாடி
வெறுத்திடார் நஞ்சுண்ணவும் விரும்புவார் கூடி
விளங்கிடவே உயிர்க்கருள் செயும் வாயில்
களங்கமிலாத நல்லாட்சியின் கோயில்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22