நிறையழிதல்

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.   (௲௨௱௫௰௧ - 1251)
 

‘நாணம்’ என்னும் தாழ்பொருந்திய ‘நிறை’ என்னும் கதவினைக் காமம் ஆகிய கோடறியானது உடைத்துத் தகர்த்து விடுகின்றது (௲௨௱௫௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய கோடாலி உடைத்து விடுகிறதே. (௲௨௱௫௰௧)
—மு. வரதராசன்

நாணம் என்னும் தாழ்பாளைக் கோத்திருக்கும் நிறை எனப்படும் கதவைக் காதல் விருப்பமாகிய கோடரி பிளக்கின்றதே! (௲௨௱௫௰௧)
—சாலமன் பாப்பையா

காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மன அடக்கம் என்கிற கதவையே உடைத்தெறிந்து விடுகின்றது (௲௨௱௫௰௧)
—மு. கருணாநிதி

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.   (௲௨௱௫௰௨ - 1252)
 

காமம் என்று சொல்லப்படும் ஒன்று கொஞ்சமேனும் கண்ணோட்டமே இல்லாதது; அ·து என் நெஞ்சத்தை இரவிலும் ஏவல் செய்து ஆள்கின்றது (௲௨௱௫௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது. (௲௨௱௫௰௨)
—மு. வரதராசன்

எல்லாரும் வேலையின்றி உறங்கும் நடுச்சாமத்திலும் என் நெஞ்சத்தைத் தண்டித்து வேலை வாங்குவதால் காதல் என்று சொல்லப்படும் ஒன்று இரக்கமற்றதாக இருக்கிறது. (௲௨௱௫௰௨)
—சாலமன் பாப்பையா

காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில் அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது (௲௨௱௫௰௨)
—மு. கருணாநிதி

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.   (௲௨௱௫௰௩ - 1253)
 

யான் காமநோயை என்னுள்ளேயே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவோ, என் குறிப்பின்படி மறையாமல், தும்மல் போலத் தானே புறத்து வெளிப்பட்டு விடும் (௲௨௱௫௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யான் காமத்தை என்னுள்‌ளே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல் போல் தானே வெளிப்பட்டு விடுகிறது. (௲௨௱௫௰௩)
—மு. வரதராசன்

என் காதல் ஆசையை நான் மறைக்கவே எண்ணுவேன்; ஆனால், அது எனக்கும் தெரியாமல் தும்மலைப் போல் வெளிப்பட்டு விடுகிறது. (௲௨௱௫௰௩)
—சாலமன் பாப்பையா

எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் கட்டுப்படாமல் தும்மல் நம்மையும் மீறி வெளிப்படுகிறதல்லவா; அதைப் போன்றதுதான் காதல் உணர்ச்சியும்; என்னதான் மறைத்தாலும் காட்டிக் கொடுத்துவிடும் (௲௨௱௫௰௩)
—மு. கருணாநிதி

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.   (௲௨௱௫௰௪ - 1254)
 

இதுவரையில் நிறையோடு இருப்பதாகவே நினைத்திருந்தேன்; ஆனால், என் காமம், என்னுள் மறைந்திருந்த எல்லையைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றதே! (௲௨௱௫௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது. (௲௨௱௫௰௪)
—மு. வரதராசன்

இன்றுவரை நான் என்னை மன அடக்கம் உடையவள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றோ என் காதல் ஆசை, மறைத்தலைக் கடந்து ஊரவர் அறிய வெளிப்பட்டுவிட்டது. (௲௨௱௫௰௪)
—சாலமன் பாப்பையா

மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே (௲௨௱௫௰௪)
—மு. கருணாநிதி

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.   (௲௨௱௫௰௫ - 1255)
 

தம்மை வெறுத்தவர் பின்னே அவர் அன்பை வேண்டிச் செல்லாத பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் ஒரு தன்மையே அன்று (௲௨௱௫௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அனறு. (௲௨௱௫௰௫)
—மு. வரதராசன்

தன்னைப் பிரிந்து சென்றவர் பின்னே செல்லாது, தானும் அவரை விட்டுப் பிரிந்து நிற்கும் மன அடக்கத்தைக் காதல் நோயை அறியாதவர் பெற முடியும். அறிந்தவரால் பெற முடியாது. (௲௨௱௫௰௫)
—சாலமன் பாப்பையா

தம்மைப் பிரிந்து சென்ற காதலரைப் பகையாகக் கருதி அவரைத் தொடர்ந்து மன அடக்கம், காதல் நோயுற்றவர்க்கு இருப்பதில்லை (௲௨௱௫௰௫)
—மு. கருணாநிதி

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.   (௲௨௱௫௰௬ - 1256)
 

வெறுத்துக் கைவிட்ட காதலரின் பின் செல்லுதலை விரும்பிய நிலையிலே இருப்பதனால், என்னை அடைந்த இக் காமநோயானது எத்தன்மை உடையதோ! (௲௨௱௫௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வெறுத்து நீங்கிய காதலரின் பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்த காமநோய் எத்தன்மையானது? அந்‌தோ! (௲௨௱௫௰௬)
—மு. வரதராசன்

என்னைப் பிரிந்து சென்றவர் பின்னே நான் போய்ச் சேர வேண்டும் என்று என்னைப் பிடித்த இந்தக் காதல் நோய் தூண்டுவதால் இது மிகமிகக் கொடியது. (௲௨௱௫௰௬)
—சாலமன் பாப்பையா

வெறுத்துப் பிரிந்ததையும் பொறுத்துக் கொண்டு அவர் பின்னே செல்லும் நிலையை என் நெஞ்சுக்கு ஏற்படுத்திய காதல் நோயின் தன்மைதான் என்னே (௲௨௱௫௰௬)
—மு. கருணாநிதி

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.   (௲௨௱௫௰௭ - 1257)
 

நாம் விரும்பிய காதலரும், காமத்தால் நமக்கு வேண்டியவற்றைச் செய்தாரானால், நாமும் ‘நாணம்’ என்று குறிக்கப்படும் ஒன்றையும் அறியாதேயே இருப்போம் (௲௨௱௫௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம். (௲௨௱௫௰௭)
—மு. வரதராசன்

என்னால் விரும்பப்பட்டவர் காதல் ஆசையில் நான் விரும்பியதையே செய்தபோது, நாணம் என்று சொல்லப்படும் ஒன்றை அறியாமலேயே இருந்தேன். (௲௨௱௫௰௭)
—சாலமன் பாப்பையா

நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை (௲௨௱௫௰௭)
—மு. கருணாநிதி

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.   (௲௨௱௫௰௮ - 1258)
 

பல மாயங்களையும் அறிந்த கள்வனாகிய காதலனின் பணிவான சொற்கள் அல்லவோ, அன்று, தம் பெண்மை என்னும் அரணை உடைக்கும் படையாய் இருந்தன (௲௨௱௫௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலரடைய பணிவுடைய மொழி அன்றோ? (௲௨௱௫௰௮)
—மு. வரதராசன்

என் மன அடக்கமாகிய கோட்டையை அழிக்கும் ஆயுதம், பல பொய்த் தொழிலும் வல்ல இந்த மனத்திருடனின் பணிவான சொற்கள் அன்றோ! (௲௨௱௫௰௮)
—சாலமன் பாப்பையா

நம்முடைய பெண்மை எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வராம் காதலரின் பணிவான பாகுமொழியன்றோ? (௲௨௱௫௰௮)
—மு. கருணாநிதி

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.   (௲௨௱௫௰௯ - 1259)
 

ஊடுவேன் என்று நினைத்துச் சென்றேன்; ஆனால், என் நெஞ்சம் என்னை மறந்து அவரோடு சென்று கலந்து விடுவதைக் கண்டு, அவரைத் தழுவினேன் (௲௨௱௫௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன். (௲௨௱௫௰௯)
—மு. வரதராசன்

அவர் வந்தபோது ஊடல் கொள்ளலாம் என்று எண்ணி, அவர்முன் நில்லாது அப்பால் போனேன்; நான் போன போதும், என் நெஞ்சம் அடக்கம் இல்லாமல் அவரோடு கலக்கத் தொடங்குவதைக் கண்டு இனி அது முடியாது என்று அவரைத் தழுவினேன். (௲௨௱௫௰௯)
—சாலமன் பாப்பையா

ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன் (௲௨௱௫௰௯)
—மு. கருணாநிதி

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.   (௲௨௱௬௰ - 1260)
 

தீயிலே கொழுப்பை இட்டாற் போல உருகும் நெஞ்சை உடையவரான மகளிருக்கு, ‘இசைந்து ஊடி நிற்போம்’ என்று, ஊடும் தன்மைதான் உண்டாகுமோ! (௲௨௱௬௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கொழுப்பைத் தீயில் இட்டால் போன்ற உருகும் நெஞ்சுடைய என்னைப் போன்றவர்க்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும் தன்மை உண்டோ? (௲௨௱௬௰)
—மு. வரதராசன்

கொழுப்பைத் தீயிலே போட்டால் அது உருகுவது போலத் தம் காதலரைக் கண்டால் மன அடக்கம் இன்றி உருகும் நெஞ்சினையுடைய பெண்களுக்கு, அவர் கூடவும், நாம் ஊடவும் பின்பு ஏதும் தெரியாத நிலையிலேயே நிற்போம் என்ற நிலை உண்டாகுமோ? (௲௨௱௬௰)
—சாலமன் பாப்பையா

நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா? (௲௨௱௬௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: கமாஸ்  |  தாளம்: ஆதி
பல்லவி:
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத் தாழ் வீழ்த்த கதவு - பாங்கி

அநுபல்லவி:
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத் தாழ் வீழ்த்த கதவு - பாங்கி

சரணம்:
நம்மையும் அறியாமல் தும்மல் போல் தோன்றிவிடும்
நாலுபேர் தெரியவே அம்பலமாக்கப் பெறும்
தம்மை மதியார் பின்னேதாம் செல்லாத் தன்மை உண்டா
தழலிடை வெண்ணெய் அன்றோ தலைவனும் வரக் கண்டால்

முன்னால்நான் ஊடுவேன்காண் என்றுதான் எண்ணிச் சென்றேன்
தன்னால் என் நெஞ்சம் முந்த நானும் தழுவிக் கொண்டேன்
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோ நம்
பெண்மை உடைக்கும் படை என்பதும் குறளுரை




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22