மெய்யுணர்தல்

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.   (௩௱௫௰௧ - 351)
 

உண்மையில் பொருளற்றவைகளைப் பொருளாகக் கருதி உணர்கின்ற மயக்கத்தினாலேயே, சிறப்பற்ற பலவகைப் பிறப்புக்களும் உண்டாகின்றன (௩௱௫௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும். (௩௱௫௰௧)
—மு. வரதராசன்

பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும். (௩௱௫௰௧)
—சாலமன் பாப்பையா

பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது (௩௱௫௰௧)
—மு. கருணாநிதி

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு   (௩௱௫௰௨ - 352)
 

மயக்கம் நீங்கிய குற்றமற்ற மெய்யறிவு உடையவர்களுக்கு அவ்வுணர்வு, இருளிலிருந்து விடுபட்டு அடைகின்றதான இன்பத்தையும் கொடுக்கும் (௩௱௫௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும். (௩௱௫௰௨)
—மு. வரதராசன்

மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும். (௩௱௫௰௨)
—சாலமன் பாப்பையா

மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும் (௩௱௫௰௨)
—மு. கருணாநிதி

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.   (௩௱௫௰௩ - 353)
 

ஐயத்திலிருந்து நீங்கித் தெளிவுபெற்ற மெய்யறிவாளருக்கு, இவ் வையகத்தினும், வானம் மிகவும் அண்மையானதும் உறுதியானதும் ஆகும் (௩௱௫௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும். (௩௱௫௰௩)
—மு. வரதராசன்

சந்தேகத்திலிருந்து விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட, விரும்பும் வான உலகம் மிக அருகில் இருப்பதாகும். (௩௱௫௰௩)
—சாலமன் பாப்பையா

ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும் (௩௱௫௰௩)
—மு. கருணாநிதி

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.   (௩௱௫௰௪ - 354)
 

மெய்யுணர்வு இல்லாதவர்களுக்கு, ஐம்புலன்களின் உணர்வுகளை எல்லாம் முறைப்படியே பெற்றுள்ள போதிலும் பயன் யாதும் இல்லை (௩௱௫௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை. (௩௱௫௰௪)
—மு. வரதராசன்

மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை. (௩௱௫௰௪)
—சாலமன் பாப்பையா

உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை (௩௱௫௰௪)
—மு. கருணாநிதி

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.   (௩௱௫௰௫ - 355)
 

எப்பொருள் எத்தகைய தன்மையோடு தோன்றினாலும் மயங்காமல், அப்பொருளின் மெய்யான இயல்பைத் தெளிவாகக் காண்பதே அறிவாகும் (௩௱௫௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு. (௩௱௫௰௫)
—மு. வரதராசன்

எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளைக் காண்பதே மெய்யுணர்தல். (௩௱௫௰௫)
—சாலமன் பாப்பையா

வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும் (௩௱௫௰௫)
—மு. கருணாநிதி

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.   (௩௱௫௰௬ - 356)
 

கற்க வேண்டிய கல்வியைக் கற்று, மெய்ப்பொருளையும் அறிந்தவர், மீண்டும் இவ்வுலகில் பிறவிகளைத் தாம் எடுத்து வராத நெறியை மேற்கொள்வார்கள் (௩௱௫௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர். (௩௱௫௰௬)
—மு. வரதராசன்

பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர். (௩௱௫௰௬)
—சாலமன் பாப்பையா

துறவற வாழ்வுக்குத் தகுதியுடையவராகச் செய்திடும் அனைத்தையும் கற்று, உண்மைப் பொருள் உணர்ந்து அதன்படி ஒழுகுபவர், மீண்டும் இல்லற வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள் (௩௱௫௰௬)
—மு. கருணாநிதி

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.   (௩௱௫௰௭ - 357)
 

என்றும் உளதான மெய்ப்பொருளை உள்ளம் ஆராய்ந்து அறிந்து விட்டதானால், மீளவும் தனக்குப் பிறப்பு உள்ளதென்று அவன் எண்ண வேண்டாம் (௩௱௫௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா. (௩௱௫௰௭)
—மு. வரதராசன்

பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் ‌திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா. (௩௱௫௰௭)
—சாலமன் பாப்பையா

உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள் (௩௱௫௰௭)
—மு. கருணாநிதி

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.   (௩௱௫௰௮ - 358)
 

பிறப்புக்குக் காரணமான அறியாமைகள் நீங்குவதற்குச் சிறப்பான துணை எனப்படும் செம்பொருளை முயன்று காண்பதே மெய்யுணர்வு ஆகும் (௩௱௫௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு. (௩௱௫௰௮)
—மு. வரதராசன்

பிறவி என்னும் அறியாமையிலிருந்து விலகப் பிறவாமை என்னும் செவ்விய பொருளைக் காண்பதே மெய்யுணர்தல். (௩௱௫௰௮)
—சாலமன் பாப்பையா

அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும் (௩௱௫௰௮)
—மு. கருணாநிதி

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.   (௩௱௫௰௯ - 359)
 

எல்லாப் பொருள்களுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து, பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்குரிய துன்பங்கள் திரும்பவும் வந்து சாரமாட்டா (௩௱௫௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா. (௩௱௫௰௯)
—மு. வரதராசன்

எல்லாப் பொருள்களுக்கும் இடமாகிய மெய்ப்பொருளை உணர்ந்து பற்றின்றி வாழ்ந்தால், பற்ற வரும் துன்பங்கள் ஒழுக்க உணர்வை அழி்த்துப் பற்ற மாட்டா. (௩௱௫௰௯)
—சாலமன் பாப்பையா

துன்பங்கள் நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால், அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ள பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும் (௩௱௫௰௯)
—மு. கருணாநிதி

காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.   (௩௱௬௰ - 360)
 

காமம், வெகுளி, மயக்கம் என்னும் இவை மூன்றின் பெயர்களைக் கூட உள்ளத்திலிருந்து அறவே நீக்கிவிட்டால், பிறவித் துன்பமும் கெடும் (௩௱௬௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும். (௩௱௬௰)
—மு. வரதராசன்

விருப்பு, வெறுப்பு, மயக்கம் என்னும் இம்மூன்றன் பெயருங்கூட உள்ளத்திற்குள் இல்லாது போனால், அவற்றால் வரும் துன்பங்களும் இல்லாமல் போகும். (௩௱௬௰)
—சாலமன் பாப்பையா

விருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும் (௩௱௬௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: நாராயணி  |  தாளம்: ஆதி
பல்லவி:
மெய்யுணர்வாய் மனமே
மேதினி மீதருள் மேவும் நிலைபெறவே

அநுபல்லவி:
ஐயமில்லாத மெய்யறிவுறும் வாழ்வில்
பொய்யிருள் நீக்கி நாம்
பொதுநலப் பணி செய்ய

சரணம்:
"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவெனும்" திருக்குறள்
துப்புறச் சொல்லும்வழி துலங்கிட வாழ்வோம்
துன்பமில்லாத பேரின்பமே சூழ்வோம்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22