வெருவந்த செய்யாமை

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.   (௫௱௬௰௧ - 561)
 

ஒருவனுடைய குற்றத்தைத் தகுந்த வழிகளாலே ஆராய்ந்து, மீளவும் அதைச் செய்யாதபடி, குற்றத்திற்குத் தகுந்தபடி தண்டிப்பதே வேந்தன் கடமையாகும் (௫௱௬௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான். (௫௱௬௰௧)
—மு. வரதராசன்

தவறு செய்வோரைக் கண்டு, நடுநிலையில் நின்று ஆய்ந்து, அத்தவற்றை அவர் திரும்பவும் செய்யாமல் இருக்கத் தவற்றுக்கு ஏற்பத் தண்டிப்பதே ஆட்சி. (௫௱௬௰௧)
—சாலமன் பாப்பையா

நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும் (௫௱௬௰௧)
—மு. கருணாநிதி

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.   (௫௱௬௰௨ - 562)
 

நெடுங்காலம் ஆக்கம் நீங்காமல் இருத்தலை விரும்புகிறவர்கள், குற்றஞ் செய்தவரைத் தண்டிக்கும் போது; கடுமையைக் காட்டினாலும் அளவோடு தண்டிப்பாராக (௫௱௬௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும். (௫௱௬௰௨)
—மு. வரதராசன்

நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது கடுமையாகத் தண்டிப்பவர்போல தொடங்கி வரம்பு கடவாமல் செய்க. (௫௱௬௰௨)
—சாலமன் பாப்பையா

குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும் (௫௱௬௰௨)
—மு. கருணாநிதி

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.   (௫௱௬௰௩ - 563)
 

குடிகள் அச்சம் அடையும் செயல்களைச் செய்கின்ற கொடுங்கோல் அரசன், மிகவும் விரைவாகவே கெட்டுப் போய் அழிவை அடைவான் (௫௱௬௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான். (௫௱௬௰௩)
—மு. வரதராசன்

குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி. (௫௱௬௰௩)
—சாலமன் பாப்பையா

குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும் (௫௱௬௰௩)
—மு. கருணாநிதி

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.   (௫௱௬௰௪ - 564)
 

‘எம் அரசன் கடுமையானவன்’ என்று மக்கள் சொல்லும் பழிச்சொல்லுக்கு ஆளாகிய வேந்தன், தன் ஆயுளும் விரைவில் கெட்டுப் போக, அழிவை அடைவான் (௫௱௬௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான். (௫௱௬௰௪)
—மு. வரதராசன்

நம்மை ஆளுவோர் மிகவும் கொடியவர் என்று குடிமக்களால் சொல்லப்படும் கொடுஞ் சொல்லைப் பெற்ற ஆட்சி அதன் ஆட்சிக் காலம் குறைந்து விரைவி்ல் அழியும். (௫௱௬௰௪)
—சாலமன் பாப்பையா

கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும் (௫௱௬௰௪)
—மு. கருணாநிதி

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.   (௫௱௬௰௫ - 565)
 

எளிதாகக் காணமுடியாத தன்மையும், கடுமையான முகங்காட்டும் இயல்பும் உள்ளவனின் பெருஞ்செல்வம், பேயால் கவனித்துக் காக்கும் புதையல் போன்றதாகும் (௫௱௬௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது. (௫௱௬௰௫)
—மு. வரதராசன்

தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம். (௫௱௬௰௫)
—சாலமன் பாப்பையா

யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும் (௫௱௬௰௫)
—மு. கருணாநிதி

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.   (௫௱௬௰௬ - 566)
 

கடுமையான பேச்சும், இரக்கமற்ற தன்மையும் உடையவனானால், அவ்வரசனது பெருஞ்செல்வமும் நீடித்திருக்காமல் தேய்ந்து அப்போதே கெடும் (௫௱௬௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும். (௫௱௬௰௬)
—மு. வரதராசன்

சுடுசொல்லையும், முகதாட்சண்யம் இன்மையும் உடைய அரசின் பெருஞ்செல்வம், பெருகாமல் உடனே அழியும். (௫௱௬௰௬)
—சாலமன் பாப்பையா

கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும் (௫௱௬௰௬)
—மு. கருணாநிதி

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.   (௫௱௬௰௭ - 567)
 

கடுமையான சொல்லும், முறை கடந்த தண்டனையும், அவ்வரசனுடைய பகைவரை வெல்லும் வலிமையைத் தேய்த்து அழிக்கும் அரமாகும் (௫௱௬௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும். (௫௱௬௰௭)
—மு. வரதராசன்

கடுமையான சொற்களும், வரம்பு மீறிய தண்டனையும் அரசின் பகையை வெல்லுதற்கு ஏற்ற ஆயுதத்தைத் தேய்த்துக் குறைக்கும் அரம் ஆகும். (௫௱௬௰௭)
—சாலமன் பாப்பையா

கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும் (௫௱௬௰௭)
—மு. கருணாநிதி

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.   (௫௱௬௰௮ - 568)
 

அமைச்சர் முதலானவரோடு கலந்து ஆராய்ந்து செய்யாமல், தன் சினத்தின் வழியிலேயே சென்று பிறரைச் சீறுவானானால், அவனுடைய செல்வம் சுருங்கும் (௫௱௬௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும். (௫௱௬௰௮)
—மு. வரதராசன்

தன் உடன் அமைச்சர்களுடன் கலந்து பேசிச் செயற்படாத அரசு, தன்னைச் சினவழி நடத்தித் தவறு வரும்போது அமைச்சர்களைச் சினந்தால், அரசின் செல்வம் நாளும் குறையும். (௫௱௬௰௮)
—சாலமன் பாப்பையா

கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும் (௫௱௬௰௮)
—மு. கருணாநிதி

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.   (௫௱௬௰௯ - 569)
 

போர் வருவதற்கு முன்பாகவே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாத வேந்தன், அது வந்த காலத்தில், பாதுகாப்பு இல்லாமல் அஞ்சியவனாக, அழிந்து போவான் (௫௱௬௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான். (௫௱௬௰௯)
—மு. வரதராசன்

நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும். (௫௱௬௰௯)
—சாலமன் பாப்பையா

முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும் (௫௱௬௰௯)
—மு. கருணாநிதி

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.   (௫௱௭௰ - 570)
 

கொடுங்கோல் ஆட்சியானது மூடர்களையே தனக்குத் துணையாக்கிக் கொள்ளும்; அந்த ஆட்சியை அல்லாமல் பூமிக்குப் பாரம் என்பது வேறு யாதும் இல்லை (௫௱௭௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை. (௫௱௭௰)
—மு. வரதராசன்

மக்கள் அஞ்சும்படி தண்டனை தரும் ஆட்சி, நீதி நூல்களைக் கல்லாதவரின் துணையுடன் நிற்கும் நாட்டிற்கு அக்கூட்டத்தாரைவிடப் பெரிய சுமை வேறு இல்லை. (௫௱௭௰)
—சாலமன் பாப்பையா

கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்கு பக்கபலமாக்கிக் கொள்ளும் அதைப்போல பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை (௫௱௭௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: சாரங்கா  |  தாளம்: ஆதி
பல்லவி:
அம்பை விட்டு பால் கறப்பதா?
ஆகா தென்றாலும்
அஞ்சிட வெங்கோல் பிடிப்பதா?

அநுபல்லவி:
அம்பெதற்குக் கன்றை விட்டால்
பால் கெடுக்கும் தானே
அச்ச மின்றி மக்கள் வாழ
அன்பு செய்வீர் கோனே

சரணம்:
மண் குதிரையை நம்பி ஆற்றினில் இறங்கும்
மதிகெட்ட சேவகரால் எதுதான் துலங்கும்?
கண்கெட்ட பின்னரோ கதிரவன் வணக்கம்
கருதும் வெம்போர் வருமுன் காப்பதே இணக்கம்

தான் செய்த குற்றத்திற்குப் பிறரையே கடிந்தும்
தன்மையிலாக் கொடிய பேயெனத் திரிந்தும்
கோன் வெருவந்த செய்யின்குடிகள் உளம் துடிக்கும்
குமுறும் எரிமலையாய் ஒரு நாளது வெடிக்கும்

கடுஞ்சொல்லன் கண்ணிலனாயின் நெடுஞ் செல்வம்
நீடின்றி யாங்கே கெடும் என்றே குறளும் சொல்லும்
படும் துன்பம் நீக்கும் முறைபார்த்தே மெல்ல எறிக
பண்புறும் கண்ணோட்டத்தின் பாங்கினையும் பெறுக




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22