கண்விதுப்பழிதல்

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.   (௲௱௭௰௧ - 1171)
 

இக்கண்கள் அவரைக் காட்டியதால் அல்லவோ நீங்காத இக் காமநோயை யாமும் பெற்றோம்; அவை, இன்று என்னிடம் காட்டச் சொல்லி அழுவது எதனாலோ? (௲௱௭௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்? (௲௱௭௰௧)
—மு. வரதராசன்

தணியாத காதல் துன்பத்தை நான் அறிந்ததே இந்தக் கண்கள் எனக்கு அவரைக் காட்டியதால்தானே? இப்போது அவரைக் காட்டு என என்னிடம் அழுவது எதற்கு? (௲௱௭௰௧)
—சாலமன் பாப்பையா

கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்? (௲௱௭௰௧)
—மு. கருணாநிதி

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.   (௲௱௭௰௨ - 1172)
 

மேல்விளைவு பற்றி ஆராயாமல், அன்று அவரை நோக்கி மகிழ்ந்த கண்கள், இன்று, என் துயரைப் பகுத்து உணராமல், தாமும் துன்பப்படுவதுதான் எதனாலோ? (௲௱௭௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்? (௲௱௭௰௨)
—மு. வரதராசன்

வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது நம்மால் வந்தது; நாம்தாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் துன்பப்படுகின்றனவே எதற்காக? (௲௱௭௰௨)
—சாலமன் பாப்பையா

விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால் தான் என அறியாமல் தவிப்பது ஏன்? (௲௱௭௰௨)
—மு. கருணாநிதி

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.   (௲௱௭௰௩ - 1173)
 

அன்று, தாமே விரைந்து பார்த்தும், இன்று தாமே அழுகின்ற கண்கள், நம்மால் அதன் அறியாமை கருதிச் சிரிக்கத் தகுந்த இயல்பினையே உடையதாகும் (௲௱௭௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது. (௲௱௭௰௩)
—மு. வரதராசன்

அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. (௲௱௭௰௩)
—சாலமன் பாப்பையா

தாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள், இன்று தாமாகவே அழுகின்றன இது நகைக்கத்தக்க ஒன்றாகும் (௲௱௭௰௩)
—மு. கருணாநிதி

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.   (௲௱௭௰௪ - 1174)
 

அன்று, யான் உய்யாத அளவு தீராத காமநோயை என்னிடம் நிறுத்திய கண்கள், இன்று, தாமும் அழுவதற்கு மாட்டாதபடி நீர்வற்றி வறண்டு விட்டனவே! (௲௱௭௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன. (௲௱௭௰௪)
—மு. வரதராசன்

மை தீட்டப்பட்ட இந்தக் கண்கள் நான் தப்பிக்கவும், வாழவும் முடியாத காதல் துன்பத்தை எனக்குத் தந்துவிட்டுத் தாமும் அழ முடியாமல் நீர் வற்றிப் போய்விட்டன. (௲௱௭௰௪)
—சாலமன் பாப்பையா

தப்பிப் பிழைக்க முடியாத, தீராத காதல் நோயை எனக்குத் தருவதற்குக் காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப் போய்விட்டன (௲௱௭௰௪)
—மு. கருணாநிதி

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.   (௲௱௭௰௫ - 1175)
 

கடலிலும் பெரிதான காமநோயை அன்று எனக்குச் செய்த இக் கண்கள், அத் தீவினையால், தாமும் உறங்காமல் இவ்விரவுப் பொழுதில் துன்பத்தை அடைகின்றன (௲௱௭௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன. (௲௱௭௰௫)
—மு. வரதராசன்

கடலைவிடப் பெரிதாகும் காதல் துன்பத்தை எனக்குத் தந்த கண்கள், தாமும் தூங்காமல், துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. (௲௱௭௰௫)
—சாலமன் பாப்பையா

கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றன (௲௱௭௰௫)
—மு. கருணாநிதி

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.   (௲௱௭௰௬ - 1176)
 

எமக்கு இத்தகைய காமநோயைச் செய்த கண்கள், தாமும் துயில் பெறாமல் இப்படி அழுகையில் ஈடுபட்டது, காண்பதற்கு மிகவும் இனியதாகும் (௲௱௭௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே! (௲௱௭௰௬)
—மு. வரதராசன்

எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது. (௲௱௭௰௬)
—சாலமன் பாப்பையா

ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே! (௲௱௭௰௬)
—மு. கருணாநிதி

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.   (௲௱௭௰௭ - 1177)
 

விரும்பி உள் நெகிழ்ந்துவிடாதே, அன்று அவரைக் கண்டு மகிழ்ந்த கண்கள், இன்று துயிலாது வருந்தி வருந்தித் தம்மிடமுள்ள நீரும் அற்றே போவதாக! (௲௱௭௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும். (௲௱௭௰௭)
—மு. வரதராசன்

விரும்பி மகிழ்ந்து விடாமல் அன்று அவரைக் கண்ட கண்களின் உள் இருக்கும் கண்ணீர் எல்லாம் இன்று வருந்தி வருந்தி வற்றிப் போகட்டும்! (௲௱௭௰௭)
—சாலமன் பாப்பையா

அன்று, இழைந்து குழைந்து ஆசையுடன் அவரைக் கண்ட கண்களே! இன்று பிரிந்து சென்றுள்ள அவரை நினைத்துக் தூங்காமலும், துளிக் கண்ணீரும் அற்றுப்போகும் நிலையிலும் துன்பப்படுங்கள் (௲௱௭௰௭)
—மு. கருணாநிதி

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.   (௲௱௭௰௮ - 1178)
 

உள்ளத்தில் விருப்பமில்லாமல், பேச்சால் அன்பு காட்டியவர் இவ்விடத்தே உள்ளனர்; அதனால் என்ன பயன்? அவரைக் காணாமல் என் கண்கள் அமைகின்றிலவே! (௲௱௭௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை. (௲௱௭௰௮)
—மு. வரதராசன்

உள்ளத்தால் என்னை விரும்பாமல் வாயால் மட்டுமே விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால், அவரைக் காண முடியாமல் என் கண்கள் தூங்காமல் இருக்கின்றன.! (௲௱௭௰௮)
—சாலமன் பாப்பையா

என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றனர்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே! (௲௱௭௰௮)
—மு. கருணாநிதி

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.   (௲௱௭௰௯ - 1179)
 

காதலர் வராத போது, அவர் வரவை எதிர்பார்த்துத் தூங்கா; வந்த போது, பிரிவஞ்சித் துயிலா; இருவழியும் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தையே அடைந்தன! (௲௱௭௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கி‌டையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன. (௲௱௭௰௯)
—மு. வரதராசன்

அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி் தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்களுக்குத் தூங்க முடியாத துன்பந்தான். (௲௱௭௰௯)
—சாலமன் பாப்பையா

இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்துவிட்டாலும் பிறகு தூங்குவதில்லை இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத் தானே இருக்க முடியும் (௲௱௭௰௯)
—மு. கருணாநிதி

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.   (௲௱௮௰ - 1180)
 

எம்மைப் போல் அறைபறையாகிய கண்களை உடையவரின், நெஞ்சில் அடக்கியுள்ள மறையை அறிதல், இவ்வூரிலே உள்ளவர்க்கு மிகவும் எளியதாகும் (௲௱௮௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று. (௲௱௮௰)
—மு. வரதராசன்

அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை அறிந்து கொள்வது இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது. (௲௱௮௰)
—சாலமன் பாப்பையா

காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது, யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்ல (௲௱௮௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: சண்முகப்பிரியா  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
கண்தாம் கலுழ்வ தெவன் கொலோ
தண்டா நோய் தாம்காட்ட யாம் கண்டது

அநுபல்லவி:
முன்னால் அவர்முகம் பார்த்ததும் முறுவல்கொண்டு சேர்த்ததுவும்
உன்னாலே நேர்ந்த தன்றோ
என்னால் ஒரு பிழையும் உண்டோ

சரணம்:
செயலாற்றும் வகையும் மறந்து சிந்தை வருந்துதே
சிந்துகின்ற கண்ணீரதும் கரைபுரண்டதே
பெயலாற்றா நீருலந்து போனதே உண்கண்
உயலாற்றா உய்வில் நோயை நிறுத்துதே என்முன்

வாராத போதும் கண்கள் வழி பார்த்திருக்கும்
வந்த போதும் பிரிவஞ்சியே துயிலாதிருக்கும்
தீராத துன்பம் இவற்றால் வருந்தும் என் கண்ணே
ஊராரும் தெரிந்து கொள்ள அறை பறை என்னே!




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22