இன்னா செய்யாமை

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.   (௩௱௰௧ - 311)
 

சிறப்பைத் தருகின்ற பெருஞ்செல்வமே பெற்றாலும், பிறருக்குத் துன்பம் செய்யாதிருத்தலே, குற்றமற்ற அறிவாளரின் கொள்கையாகும் (௩௱௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம். (௩௱௰௧)
—மு. வரதராசன்

சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை. (௩௱௰௧)
—சாலமன் பாப்பையா

மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும் (௩௱௰௧)
—மு. கருணாநிதி

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.   (௩௱௰௨ - 312)
 

கறுவுகொண்டு ஒருவன் துன்பம் செய்தபோதும், திரும்ப அவனுக்குத் துன்பம் தருவனவற்றைச் செய்யாதிருத்தலே குற்றமற்ற அறிவாளரின் கொள்கை (௩௱௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும். (௩௱௰௨)
—மு. வரதராசன்

நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை. (௩௱௰௨)
—சாலமன் பாப்பையா

சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும் (௩௱௰௨)
—மு. கருணாநிதி

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.   (௩௱௰௩ - 313)
 

ஏதும் செய்யாத போதிலேயே தீமை செய்தவருக்கும், பதிலுக்குத் துன்பத்தைச் செய்தால், அது பின்னர் மீளாத் துயரத்தையே தரும் (௩௱௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும். (௩௱௰௩)
—மு. வரதராசன்

நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும். (௩௱௰௩)
—சாலமன் பாப்பையா

யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும் (௩௱௰௩)
—மு. கருணாநிதி

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.   (௩௱௰௪ - 314)
 

துன்பம் செய்தவரைத் தண்டித்தல், அவர் தம் செய்கையை நினைத்து வெட்கப்படும்படியாக அவருக்கு நன்மைகளைச் செய்துவிடுதல் ஆகும் (௩௱௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும். (௩௱௰௪)
—மு. வரதராசன்

நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே. (௩௱௰௪)
—சாலமன் பாப்பையா

நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான் (௩௱௰௪)
—மு. கருணாநிதி

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.   (௩௱௰௫ - 315)
 

பிறிதோர் உயிரின் துன்பத்தைத் தன் துன்பமே போலக் கொள்ளாத இடத்தில், அறிவினாலே ஆகும் பயன் தான் ஏதும் உளதாகுமோ? (௩௱௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ. (௩௱௰௫)
—மு. வரதராசன்

அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன? (௩௱௰௫)
—சாலமன் பாப்பையா

பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை (௩௱௰௫)
—மு. கருணாநிதி

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.   (௩௱௰௬ - 316)
 

துன்பம் தருவன எனத் தான் உணர்ந்த ஒரு செயலைப் பிறரிடத்தே செய்தலை ஒருவன் எப்போதும் செய்யாமல் தவிர்க்க வேண்டும் (௩௱௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும். (௩௱௰௬)
—மு. வரதராசன்

தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும். (௩௱௰௬)
—சாலமன் பாப்பையா

ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும் (௩௱௰௬)
—மு. கருணாநிதி

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.   (௩௱௰௭ - 317)
 

எவ்வளவினது ஆனாலும், எக்காலத்தில் ஆனாலும், எவருக்கும், மனத்தினாலும் பொருந்தாத துன்பங்களைச் செய்யாமலிருத்தலே சிறப்பு ஆகும் (௩௱௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது. (௩௱௰௭)
—மு. வரதராசன்

எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது. (௩௱௰௭)
—சாலமன் பாப்பையா

எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால்கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும் (௩௱௰௭)
—மு. கருணாநிதி

தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.   (௩௱௰௮ - 318)
 

தன் உயிருக்குத் துன்பமாதலைத் தான் அறிந்து வருந்தும் ஒருவன், மற்றைய உயிர்களுக்குத் துன்பத்தைச் செய்தல் என்பது, என்ன அறியாமையாலோ? (௩௱௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ. (௩௱௰௮)
—மு. வரதராசன்

அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்? (௩௱௰௮)
—சாலமன் பாப்பையா

பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா? (௩௱௰௮)
—மு. கருணாநிதி

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.   (௩௱௰௯ - 319)
 

முற்பகலில் பிறருக்குத் துன்பத்தைச் செய்தால், பிற்பகலில் தமக்குத் துன்பங்கள் தாமாகவே வந்து சேரும் என்பதை அறிதல் வேண்டும் (௩௱௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும். (௩௱௰௯)
—மு. வரதராசன்

அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும். (௩௱௰௯)
—சாலமன் பாப்பையா

பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும் (௩௱௰௯)
—மு. கருணாநிதி

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.   (௩௱௨௰ - 320)
 

துன்பம் தருவன எல்லாம் துன்பம் செய்தவரின் மேல் சென்று சேர்வன; ஆகவே, துன்பப்படாமலிருப்பதை விரும்புகிறவர் பிறருக்குத் துன்பம் செய்யாதிருப்பர் (௩௱௨௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார். (௩௱௨௰)
—மு. வரதராசன்

செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார். (௩௱௨௰)
—சாலமன் பாப்பையா

தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது (௩௱௨௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: ஆநந்தபைரவி  |  தாளம்: ஆதி
பல்லவி:
இன்னா செய்வதே நன்றல்ல
எவ்வுயிர்க்கும் இரங்கும்
எண்ணமில்லாமலே நீ

அநுபல்லவி:
பொன்னோ உன்னுயிர் மட்டும்
புல்லோ மற்றவை சொல்லாய்
பொருந்தும் உயிர்கட்கெல்லாம்
வருந்தும் நிலைமை ஒன்றே

சரணம்:
என்ன சிறப்பு செல்வம் எவ்வள விருந்தாலும்
இரக்கமிருந்தா லன்றோ சிறக்கும் நினது வாழ்வு
இன்னா செய்தோரும் நாண நன்னயமே புரிவாய்
இசைபெறும் திருக்குறள் வழியிதுவே தெளிவாய்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22