நாணுடைமை

கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.   (௲௰௧ - 1011)
 

இழிந்த செயல் காரணமாக நாணுதலே நன்மக்களது நாணம்; பிற மன மொழி மெய் ஒடுக்கங்களால் வரும் நாணம், குலமகளிரது நாணம் ஆகும் (௲௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை. (௲௰௧)
—மு. வரதராசன்

இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவதே அனைவர்க்கும் பொதுவான நாணம்; மற்றொன்று அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் ஆகும். (௲௰௧)
—சாலமன் பாப்பையா

ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு (௲௰௧)
—மு. கருணாநிதி

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.   (௲௰௨ - 1012)
 

ஊணும் உடையும் அவையொழிந்த பிறவும் உலகத்து மக்கள் உயிர்க்கு எல்லாம் பொதுவானவை (௲௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும். (௲௰௨)
—மு. வரதராசன்

உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே. (௲௰௨)
—சாலமன் பாப்பையா

உணவு, உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான தேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான் (௲௰௨)
—மு. கருணாநிதி

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.   (௲௰௩ - 1013)
 

உயிர்கள் எல்லாம் தம் இருப்பிடமான உடம்பை ஒரு போதும் விடமாட்டா; அவ்வாறே ‘நாணம்’ என்னும் குணத்தையும் ‘சால்பு’ ஒரு போதும் விட்டுவிடாது (௲௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது. (௲௰௩)
—மு. வரதராசன்

எல்லா உயிர்களும் உடம்பை இடமாகக் கொண்டுள்ளன; அதுபோல், சான்றாண்மையும், நாணம் என்னும் நல்ல குணத்தை இடமாகக் கொண்டுள்ளது. (௲௰௩)
—சாலமன் பாப்பையா

உடலுடன் இணைந்தே உயிர் இருப்பது போல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும் (௲௰௩)
—மு. கருணாநிதி

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.   (௲௰௪ - 1014)
 

நாணம் உடைமை சான்றோர்களுக்கு ஓர் ஆபரணம் ஆகும் (௲௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ. (௲௰௪)
—மு. வரதராசன்

நாணம்‌ இருப்பது சான்றோர்க்கு ஆபரணம்; அது மட்டும் இல்‌லை என்றால் அவர்கள் நடக்கும் பெருமித நடை பார்ப்பவர்க்கு நோயாம். (௲௰௪)
—சாலமன் பாப்பையா

நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும் அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும் (௲௰௪)
—மு. கருணாநிதி

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.   (௲௰௫ - 1015)
 

பிறரது பழியையும் தம்முடைய பழியையும் சமமாக மதித்து நாணுபவரை, உலகத்தார், ‘நாணத்திற்கே உறைவிடம் இவர் தாம்’ என்று சிறப்பித்துச் சொல்வார்கள் (௲௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும். (௲௰௫)
—மு. வரதராசன்

தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர். (௲௰௫)
—சாலமன் பாப்பையா

தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார் (௲௰௫)
—மு. கருணாநிதி

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.   (௲௰௬ - 1016)
 

உயர்ந்தோர், தமக்கு வேலியாக நாணத்தைக் கொள்வார்களே அல்லாமல், அகன்ற இவ்வுலகத்தைத் தமக்கு வேலியாகக் கொள்வதை விரும்ப மாட்டார்கள் (௲௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார். (௲௰௬)
—மு. வரதராசன்

பெரியவர்கள் தனக்குப் பாதுகாப்பாக நாணத்தைக் கொள்வாரே அல்லாமல், இந்தப் பெரிய உலகத்தைக் கொள்ள விரும்ப மாட்டார்கள். (௲௰௬)
—சாலமன் பாப்பையா

பரந்த இந்த உலகில் பாதுகாப்பையும்விட, நாணம் எனும் வேலியைத்தான் உயர்ந்த மனிதர்கள், தங்களின் பாதுகாப்பாகக் கொள்வார்கள் (௲௰௬)
—மு. கருணாநிதி

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.   (௲௰௭ - 1017)
 

நாணத்தையும் உயிரையும் ஒருங்கே காப்பாற்ற முடியாத போது, சான்றோர்கள் உயிரை விட்டு விடுவார்கள்; உயிரைக் காப்பதற்கு நாணத்தை விட மாட்டார்கள் (௲௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார். (௲௰௭)
—மு. வரதராசன்

நாணத்தின் சிறப்பை அறிந்து அதன் வழி நடப்பவர் நாணமா, உயிரா,என்ற நெருக்கடி வரும்போது உயிரையே விடுவர்; உயிரைக் காக்க நாணத்தை விடமாட்டார்‌. (௲௰௭)
—சாலமன் பாப்பையா

நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள் (௲௰௭)
—மு. கருணாநிதி

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.   (௲௰௮ - 1018)
 

கேட்டவரும் கண்டவரும் நாணமின்றிப் பழிக்கத் தான் நாணாதவன் ஆனால், அந் நாணானது, அவனை விட்டு அறம் நீங்கி போகத் தகுந்த குற்றத்தை உண்டாக்கிவிடும் (௲௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும். (௲௰௮)
—மு. வரதராசன்

மற்றவர் வெட்கப்படும் ஒன்றிற்கு ஒருவன் வெட்கப்படாமல் அதைச் செய்வான் என்றால், அறம் வெட்கப்படும் குற்றம் அவனிடம் இருக்கிறது. (௲௰௮)
—சாலமன் பாப்பையா

வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும் (௲௰௮)
—மு. கருணாநிதி

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.   (௲௰௯ - 1019)
 

ஒருவனது ஒழுக்கத் தவறினால், அவன் குடிப்பெருமை ஒன்றே கெட்டுவிடும்; ஒருவனிடம் நாணமில்லாத தன்மை நின்றபோது, அது அவன் நலத்தை எல்லாமே சுடும் (௲௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும். (௲௰௯)
—மு. வரதராசன்

ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும். (௲௰௯)
—சாலமன் பாப்பையா

கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு இழுக்கு நேரும் அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும் (௲௰௯)
—மு. கருணாநிதி

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.   (௲௨௰ - 1020)
 

தன் மனத்திலே நாணமில்லாத மக்களின் இயக்கம், மரப்பாவை யந்திரக் கயிற்றாலாகிய தன் இயக்கத்தால் உயிருள்ளது போல் மயக்குவது போன்றதாகும் (௲௨௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது. (௲௨௰)
—மு. வரதராசன்

மனத்துள் வெட்கம் இல்லாதவர்களின் நடமாட்டம், மரத்தால் செய்த பொம்மைக்கு உயிர் ஊட்டியிருப்பதாகக் காட்டி மயக்கியது போலாம். (௲௨௰)
—சாலமன் பாப்பையா

உயிர் இருப்பது போலக் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும் மரப்பொம்மைக்கும், மனத்தில் நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை (௲௨௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: திலங்  |  தாளம்: ஆதி
பல்லவி:
நாணுடைமை மாந்தரின் சிறப்பு
நன்மை குறிக்கும் சால்பின் பிறப்பு

அநுபல்லவி:
ஊணுடை எச்சம் பொதுவே உடல் மேவிய எவ்வுயிர்க்கும்
மாணுடையாம் நாணுடையே
மனித குலத்தின் வாழ்வை உயர்த்தும்

சரணம்:
பருவ மகளிர் உறவு முறையில் பழகிடும் நாணம் வேறு
பழுதறும் படி குடிநலம் வளர் பண்பாட்டின் நாணமிது
பிறர் பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கோர்
உறைபதி என்னும் உலகம் நிறை மதியாய் ஒளிபரவும்

மனித உயிரின்நாணிலை யெனில் மரப்பாவையைப் போன்றவராம்
மதிதரும் புவியதிலும் நாண வரம்புள்ளோரே உயர்ந்தவராம்
அணியன்றே நாணுடைமை சான்றோர்க்கும் அஃதின்றேல்
பிணியன்றோ பீடு நடை எனப்பேசும் குறளினுரை




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22