நினைந்தவர் புலம்பல்

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.   (௲௨௱௧ - 1201)
 

நினைத்தாலும் தீராத பெருமகிழ்ச்சியை எமக்குச் செய்வதனால், உண்டால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளினும் காமமே உலகத்தில் இனிமை தருவதாகும் (௲௨௱௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும். (௲௨௱௧)
—மு. வரதராசன்

முன்பு என் மனைவியுடன் கூடி அனுபவித்த இன்பத்தைப் பிரிந்திருக்கும் போது நினைத்தாலும் அது நீங்காத பெரு மகிழ்ச்சியைத் தருவதால் குடித்தால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளைக் காட்டிலும் காதல் இன்பமானது. (௲௨௱௧)
—சாலமன் பாப்பையா

உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும் (௲௨௱௧)
—மு. கருணாநிதி

எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.   (௲௨௱௨ - 1202)
 

யாம் விரும்புகின்ற காதலரை நினைத்தாலும், பிரிவுத் துன்பம் இல்லாமல் போகின்றது; அதனால், காமமும் எவ்வளவானாலும் ஒருவகையில் இனிமையானதே! (௲௨௱௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும். (௲௨௱௨)
—மு. வரதராசன்

நாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் என்ன ஆனாலும் சரி, காதல் இனியதுதான். (௲௨௱௨)
—சாலமன் பாப்பையா

விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும் (௲௨௱௨)
—மு. கருணாநிதி

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.   (௲௨௱௩ - 1203)
 

தும்மல் எழுவது போலத் தோன்றி எழாமல் அடங்குகின்றதே! அதனால், நம் காதலர் நினைப்பவர் போலிருந்தவர் நம்மை மறந்து நினையாமற் போயினாரோ! (௲௨௱௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ? (௲௨௱௩)
—மு. வரதராசன்

எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல் விடுவாரோ? (௲௨௱௩)
—சாலமன் பாப்பையா

வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ? (௲௨௱௩)
—மு. கருணாநிதி

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.   (௲௨௱௪ - 1204)
 

எம் நெஞ்சில் காதலராகிய அவர் எப்போதுமே உள்ளனர்; அது போலவே, அவருடைய நெஞ்சில், நாமும் நீங்காமல் எப்போதும் இருக்கின்றோமோ? (௲௨௱௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ? (௲௨௱௪)
—மு. வரதராசன்

என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா? (௲௨௱௪)
—சாலமன் பாப்பையா

என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா? (௲௨௱௪)
—மு. கருணாநிதி

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.   (௲௨௱௫ - 1205)
 

தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாமல் காவல் செய்து கொண்ட நம் காதலர், நம் உள்ளத்தில் தாம் ஓயாமல் வருவதைப் பற்றி வெட்கப்பட மாட்டாரோ? (௲௨௱௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ? (௲௨௱௫)
—மு. வரதராசன்

தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ? (௲௨௱௫)
—சாலமன் பாப்பையா

அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும் (௲௨௱௫)
—மு. கருணாநிதி

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.   (௲௨௱௬ - 1206)
 

காதலரோடு இன்பமாயிருந்த அந்த நாட்களின் நினைவால் தான் நான் உயிரோடிருக்கிறேன்; வேறு எதனால் நான் அவரைப் பிரிந்தும் உயிர் வாழ்கின்றேன்? (௲௨௱௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்? (௲௨௱௬)
—மு. வரதராசன்

அவரோடு கூடி வாழ்ந்த நாள்களின் நினைவுகளை நினைப்பதால்தான் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன். இல்லை என்றால், வேறு எதனால் வாழ்வேன்? (௲௨௱௬)
—சாலமன் பாப்பையா

நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்? (௲௨௱௬)
—மு. கருணாநிதி

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.   (௲௨௱௭ - 1207)
 

அவரை மறந்தால் என்ன ஆவேனோ? அதனால், அவரை மறப்பதற்கும் அறியேன்; மறக்க நினைத்தால், அந்த நினைவும் என் உள்ளத்தைச் சுடுகின்றதே! (௲௨௱௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ? (௲௨௱௭)
—மு. வரதராசன்

அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது எப்படி? (௲௨௱௭)
—சாலமன் பாப்பையா

மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ? (௲௨௱௭)
—மு. கருணாநிதி

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.   (௲௨௱௮ - 1208)
 

காதலரை எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அவர் என்மேல் சினந்து கொள்ளவே மாட்டார்; நம் காதலர் நமக்குச் செய்யும் சிறந்த உதவியே அதுதான்! (௲௨௱௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ! (௲௨௱௮)
—மு. வரதராசன்

அவரை நான் எப்படி எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது அன்றோ! (௲௨௱௮)
—சாலமன் பாப்பையா

எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா? (௲௨௱௮)
—மு. கருணாநிதி

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.   (௲௨௱௯ - 1209)
 

‘நாம் இருவரும் வேறானவர் அல்லேம்’ என்று சொல்லும் அவர், இப்போது அன்பில்லாமல் இருப்பதை மிகவும் நினைந்து, என் இனிய உயிரும் அழிகின்றதே (௲௨௱௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது. (௲௨௱௯)
—மு. வரதராசன்

நம் உயிர் வேறு அல்ல; ஒன்றே என்று முன்பு சொன்ன அவரின் இப்போதைய கருணையற்ற தன்மையை அதிகம் எண்ணி, என் உயிர் போய்க்கொண்டே இருக்கிறது. (௲௨௱௯)
—சாலமன் பாப்பையா

``நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர்'' எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது (௲௨௱௯)
—மு. கருணாநிதி

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.   (௲௨௱௰ - 1210)
 

மதியமே! என் உள்ளத்தில் பிரியாதிருந்து, என்னைப் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காண்பதற்காக, நீயும் வானத்தில் மறையாமல் இருப்பாயாக! (௲௨௱௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக! (௲௨௱௰)
—மு. வரதராசன்

திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக! (௲௨௱௰)
—சாலமன் பாப்பையா

நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக (௲௨௱௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: புன்னாகவராளி  |  தாளம்: ஆதி
தலைவன்:
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது - நண்பா
கள்ளினும் காமம் இனிது

அள்ளி அணைத்தாள் இன்பம் அழகு மயிலாள் இன்பம்
அத்தனையும் நினைப்பில் ஆழப்பதிந்த இன்பம்

தலைவி:
கள்ளினும் காமம் இனிது - தோழி
காணாத நாளும் கொடிது

உள்ளத்தில் உள்ளவர்பால் நானும் உள்ளேனோ
உயிரும் உடலும் ஆனோம் என்ற சொல் வீணோ

கொஞ்சும் கிளியே என்றார் குயிலே மயிலே என்றார்
குலவியே எனை அணைந்தார்
கூடிய நாளை எண்ணின் வாடிய என்னுள்ளமும்
குளிர்ந்து மெய் சிலிர்க்குதடி
அஞ்சல் என்று சொன்னவர்தான் நெஞ்சில் இடம் கொண்டவர்தான்
ஆனாலும் எனைப் பிரிந்தார்
அன்னவரைக் கண்ணெதிரில் காணும் வரை தண்மதியே
அகலா திருக்க நீ வாழியவே

இருவரும்:
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது

தலைவி:
நினைத்தவர் போன்று நினையார் கொல் தும்மல்
சினப்பது போன்று கெடும்

தலைவன்:
நீரினுள் மூழ்கினும் நீலக் குன்றெறினும்
நேரிழை பிரிவு சுடும்

தலைவி:
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தும்
காதலர் செய்யும் சிறப்பு

தலைவன்:
இன்னலை நீக்கும் அந்தக் கன்னலை எண்ணும்தொறும்
என்னுள்ள மெல்லாம் இனிப்பு




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22