நட்பு

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.   (௭௱௮௰௧ - 781)
 

நட்பைப் போல் ஒருவன் செய்து கொள்வதற்கு அருமையான செயல் எதுவுமே இல்லை; நட்பைப் போலச் செயல்களுக்கு அருமையான பாதுகாப்பும் எதுவுமில்லை (௭௱௮௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன. (௭௱௮௰௧)
—மு. வரதராசன்

சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு? (௭௱௮௰௧)
—சாலமன் பாப்பையா

நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை (௭௱௮௰௧)
—மு. கருணாநிதி

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.   (௭௱௮௰௨ - 782)
 

நல்ல தன்மையுள்ளவரோடு கொண்ட நட்பானது, வளர்பிறை போல நாளுக்குநாள் வளரும்; பேதைகளின் நட்பு, தேய்பிறைபோல நாளுக்குநாள் தேய்ந்து போகும் (௭௱௮௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன. (௭௱௮௰௨)
—மு. வரதராசன்

பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும். (௭௱௮௰௨)
—சாலமன் பாப்பையா

அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும் (௭௱௮௰௨)
—மு. கருணாநிதி

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.   (௭௱௮௰௩ - 783)
 

நல்ல பண்பு உடையவர்களின் தொடர்பானது, படிக்கப் படிக்க நூலின் நயம் மேன்மேலும் இனிமை தருவது போல், பழகப் பழக மேன்மேலும் இன்பம் தருவதாகும் (௭௱௮௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும். (௭௱௮௰௩)
—மு. வரதராசன்

படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன்பம் போல நல்ல குணமுள்ளவரோடு கொண்ட நட்பு அவரோடு பழகும் போதெல்லாம் மகிழ்ச்சி தரும். (௭௱௮௰௩)
—சாலமன் பாப்பையா

படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு (௭௱௮௰௩)
—மு. கருணாநிதி

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.   (௭௱௮௰௪ - 784)
 

நட்புச் செய்து கொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அன்று; அவர் மிகுதியாகத் தவறு செய்யும் போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும் (௭௱௮௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும். (௭௱௮௰௪)
—மு. வரதராசன்

ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்கும் ஆம். (௭௱௮௰௪)
—சாலமன் பாப்பையா

நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும் (௭௱௮௰௪)
—மு. கருணாநிதி

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.   (௭௱௮௰௫ - 785)
 

நட்புச் செய்வதற்கு ஒருவரோடு ஒருவர் கலந்து பேசிப் பழகுதல் வேண்டியதில்லை; இருவரிடமும் உள்ள ஒத்த உணர்ச்சிகளே, நட்பு என்னும் உரிமையைத் தந்துவிடும் (௭௱௮௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும். (௭௱௮௰௫)
—மு. வரதராசன்

ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும். (௭௱௮௰௫)
—சாலமன் பாப்பையா

இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது (௭௱௮௰௫)
—மு. கருணாநிதி

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.   (௭௱௮௰௬ - 786)
 

உள்ளம் கலக்காமல், முகத்தோற்றத்தில் மகிழ்ச்சி காட்டி நட்புச் செய்வது நல்ல நட்பு ஆகாது; நெஞ்சத்தின் உள்ளேயும் மகிழ்ச்சியோடு நட்பு செய்வதுதான் நல்ல நட்பு (௭௱௮௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும். (௭௱௮௰௬)
—மு. வரதராசன்

பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு. (௭௱௮௰௬)
—சாலமன் பாப்பையா

இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும் (௭௱௮௰௬)
—மு. கருணாநிதி

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.   (௭௱௮௰௭ - 787)
 

நண்பனுக்கு அழிவு வரும்போது அதை விலக்கி, அவனை நிலைபெறச் செய்து, தன்னையும் மீறிய அழிவின் போது தானும் அவனோடு துயரப்படுவதே நல்ல நட்பாகும் (௭௱௮௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும். (௭௱௮௰௭)
—மு. வரதராசன்

அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச் செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்றால் அதை அவனுடன் பகிர்வது நட்பு. (௭௱௮௰௭)
—சாலமன் பாப்பையா

நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும் (௭௱௮௰௭)
—மு. கருணாநிதி

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.   (௭௱௮௰௮ - 788)
 

ஆற்று வெள்ளத்தில் உடையை இழந்தவனது மானத்தை மறைக்க, அவன் கை உடனே உதவுவது போல, நண்பன் துன்பத்தை விரைந்து நீக்குவதுதான் நல்ல நட்பு (௭௱௮௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு. (௭௱௮௰௮)
—மு. வரதராசன்

பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு. (௭௱௮௰௮)
—சாலமன் பாப்பையா

அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நப்புக்கு இலக்கணமாகும் (௭௱௮௰௮)
—மு. கருணாநிதி

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.   (௭௱௮௰௯ - 789)
 

‘நட்பு என்பது நிலையாகத் தங்கியிருக்கும் இடம் யாது?’ என்றால், மனவேறுபாடு இல்லாமல், முடிந்த இடமெல்லாம், இணைந்து நின்று காத்து பேணும் நிலையாகும் (௭௱௮௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும். (௭௱௮௰௯)
—மு. வரதராசன்

நட்பின் அரியணை எது என்றால், எப்போதும் மாறாமல் முடிந்தபோது எல்லாம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதேயாம். (௭௱௮௰௯)
—சாலமன் பாப்பையா

மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும் (௭௱௮௰௯)
—மு. கருணாநிதி

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.   (௭௱௯௰ - 790)
 

‘இவர் எமக்கு இப்படிப்பட்டவர்’, ‘யாம் இவருக்கு இத்தன்மைவர்’ என்று, நட்பின் அளவைச் சொன்னாலும், அந்த நட்பு தன் சிறப்பை இழந்து போகும் (௭௱௯௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இவர் எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத் தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்பு சிறப்பிழந்து விடும். (௭௱௯௰)
—மு. வரதராசன்

இவர் எமக்கு இத்தனை அன்பு உடையவர்; நாமும் இவர்க்கு இப்படியே என்று ஒருவரை ஒருவர் அலங்காரமாகப் பாராட்டிச் சொன்னாலும் நட்பு அற்பமானதாகப் போய்விடும். (௭௱௯௰)
—சாலமன் பாப்பையா

நண்பர்கள் ஒருவருக்கொருவர் ``இவர் எமக்கு இத்தன்மையுடைவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்'' என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும் (௭௱௯௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: வாசஸ்பதி  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
கைபோல் வந்தே உதவி செய்திடும் நட்பு
காலமறிந்தும் கடமை புரிந்தும்

அநுபல்லவி:
கைபோலவும் கண்போலவும்
கனிந்தும் துணிந்தும் விரைந்தும் பணிந்தும்

சரணம்:
புணர்ச்சியோடும் பழக வேண்டாம்
புனைந்துரைகளும் கூற வேண்டாம்
உணர்ச்சி தான் நட்பாம் கிழமை தரும்
ஒளிதரும் பிறைமதி போலவும் வளரும்

நவில் தொறும் நூல் நயம் போலுமே
பயில் தொறும் பண்புடையார் தொடர்பாம்
புவி பெறும் குறள் நட்பதன் நிலையே
போதெல்லாம் உதவும் தீதெல்லாம் களையும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22