இறைமாட்சி

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.   (௩௱௮௰௧ - 381)
 

படை, குடி, விளைபொருள், அமைச்சர், நண்பர், அரண் என்னும் ஆறு உறுப்புக்களையும் சிறப்பாகப் பெற்றவன் அரசருள் சிங்க ஏறு ஆவான் (௩௱௮௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன். (௩௱௮௰௧)
—மு. வரதராசன்

வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது. (௩௱௮௰௧)
—சாலமன் பாப்பையா

ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும் (௩௱௮௰௧)
—மு. கருணாநிதி

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.   (௩௱௮௰௨ - 382)
 

அஞ்சாமை, எளியோர்க்குக் கொடுத்து உதவும் ஈகை, அறிவு, ஊக்கம், என்னும் நான்கும் குறைவில்லாமல் இருப்பது வேந்தருக்கு இயல்பு ஆதல் வேண்டும் (௩௱௮௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும். (௩௱௮௰௨)
—மு. வரதராசன்

அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் - இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும். (௩௱௮௰௨)
—சாலமன் பாப்பையா

துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும் (௩௱௮௰௨)
—மு. கருணாநிதி

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.   (௩௱௮௰௩ - 383)
 

நாடாளும் மன்னனுக்கு, விரைவாகச் செயலைச் செய்தலும், அதனை அறியும் அறிவும், செய்யும் துணிவும் என்னும் மூன்று திறனும் நீங்காமல் இருக்க வேண்டும் (௩௱௮௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை. (௩௱௮௰௩)
—மு. வரதராசன்

செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது. (௩௱௮௰௩)
—சாலமன் பாப்பையா

காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும் (௩௱௮௰௩)
—மு. கருணாநிதி

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.   (௩௱௮௰௪ - 384)
 

அரசநெறியிலிருந்தும் வழுவாமலும், நெறியல்லாதவைகளை நாட்டை விட்டு நீக்கியும், மறமாட்சியில் தாழ்ச்சியின்மை என்னும் மானமும் உடையவனே அரசன் (௩௱௮௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான். (௩௱௮௰௪)
—மு. வரதராசன்

தனக்குச் சொல்லப்பட்ட அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கி, வீரத்தில் தவறாமல் நின்று மானத்தைப் பெரிதாக மதிப்பதே அரசு. (௩௱௮௰௪)
—சாலமன் பாப்பையா

அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள் (௩௱௮௰௪)
—மு. கருணாநிதி

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.   (௩௱௮௰௫ - 385)
 

பொருள் வருவாய்க்கான வழிகளை உண்டாக்கலும், வரும் பொருளைச் சேமித்தலும், பாதுகாத்தலும், நாட்டின் நலத்துக்குத் தக்கபடி செலவிடுதலும் வல்லதே அரசு (௩௱௮௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன். (௩௱௮௰௫)
—மு. வரதராசன்

பொருள் வரும் வழிகளை உருவாக்குவது வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவது என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு. (௩௱௮௰௫)
—சாலமன் பாப்பையா

முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும் (௩௱௮௰௫)
—மு. கருணாநிதி

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.   (௩௱௮௰௬ - 386)
 

தன்னைக் காண வருவார்க்குக் காட்சிக்குத் தான் எளியனாயும், கடுஞ்சொல் சொல்லாதவனாயும் அரசன் விளங்கினால், அவன் நாட்டை உலகமே உயர்வாகக் கூறும் (௩௱௮௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும். (௩௱௮௰௬)
—மு. வரதராசன்

நீதி வேண்டி வருபவர் காண்பதற்கு எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், ஆளுவோனின் ஆட்சிப் பரப்பு விரிவடையும். (அவர் கட்சி வெற்றி பெறும்தொகுதிகள் கூடும்) (௩௱௮௰௬)
—சாலமன் பாப்பையா

காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும் (௩௱௮௰௬)
—மு. கருணாநிதி

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.   (௩௱௮௰௭ - 387)
 

இனிமையான சொல்லோடு, துன்புறுவார்க்கு வேண்டியதைக் கொடுத்தும் காப்பாற்றவல்ல அரசன், தன் மனத்தில் கருதியவாறே உலகமும் அமையும் (௩௱௮௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும். (௩௱௮௰௭)
—மு. வரதராசன்

இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய எல்லாவற்றையும் இவ்வுலகம் தரும். (௩௱௮௰௭)
—சாலமன் பாப்பையா

வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும் (௩௱௮௰௭)
—மு. கருணாநிதி

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.   (௩௱௮௰௮ - 388)
 

முறைமையோடு ஆட்சி செய்து மக்களைக் காப்பாற்றும் மன்னவன், அம் மக்களுக்குத் தெய்வம் என்று சொல்லப்படும் உயர்நிலையிலே வைத்து மதிக்கப்படுவான் (௩௱௮௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான். (௩௱௮௰௮)
—மு. வரதராசன்

நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும். (௩௱௮௰௮)
—சாலமன் பாப்பையா

நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான் (௩௱௮௰௮)
—மு. கருணாநிதி

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.   (௩௱௮௰௯ - 389)
 

சான்றோர்கள் கண்டித்துச் சொல்வது கேள்விக்கு வெறுப்பாயிருந்தாலும், பொறுத்து, அக்குறைகளை நீக்கும் பண்புள்ள வேந்தனின் குடைநிழலில், உலகம் தங்கும் (௩௱௮௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும். (௩௱௮௰௯)
—மு. வரதராசன்

இடித்துக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்புள்ள அரசின் குடைக் கீழ், இந்த உலகமே தங்கும். (௩௱௮௰௯)
—சாலமன் பாப்பையா

காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும் (௩௱௮௰௯)
—மு. கருணாநிதி

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.   (௩௱௯௰ - 390)
 

கொடையும், இரக்க குணமும், செங்கோன்மையும், குடி காத்தலும் என்னும் நான்கையும் சிறப்பாகப் பெற்றவன் வேந்தர்க்கு எல்லாம் ஒளிவிளக்கு ஆவான் (௩௱௯௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன். (௩௱௯௰)
—மு. வரதராசன்

தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, எதிர் கட்சியினரிடமும் இனிதாய்ப்போசுவது, நீதி விளங்கும் ஆட்சி செய்வது, மக்களைப் பாதுகாப்பது இவை நான்கையும் உடையதே அரசுகளுக்கு விளக்குப் போன்றது. (௩௱௯௰)
—சாலமன் பாப்பையா

நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும் (௩௱௯௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: வாசஸ்பதி  |  தாளம்: ஆதி
பல்லவி:
இறை மாட்சி நலம் வாழ்கவே - மக்கள்
எல்லோரும் இன்புறவே
முறை செய்து காப்பாற்றும்

அநுபல்லவி:
நிறை காட்சிக் கெளியவன் இன்சொலனாக
நேசர் இதம் கூறும்
நில வுலகம் வாழ்த்தும்

சரணம்:
நாடும் குடிப்பரப்பும் நால்வகைப் படையும்
நல்லமைச்சும் செல்வமும் நட்பும் வல்லரணும்
கூடும் நிலையுடையான் அரசருள் ஏறாம்
கோதிலா வீரமும் மானமும் மேலாம்

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்தவை
வகுத்தலும் வல்லதே அரசெனச் சேர்த்தவை
பயிற்றிடும் கல்வியுடன் துணிவு தூங்காமை
பைந்தமிழ்க் குறளறம் பரவும் செங்கோன்மை




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22