பொச்சாவாமை

இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.   (௫௱௩௰௧ - 531)
 

சிறப்பான உவகையாலே மகிழ்ச்சியடைந்து, அதனால் கொள்ளும் மறதியானது, அளவுகடந்து கொள்ளும் சினத்தைக் காட்டிலும் தீமை தருவதாகும் (௫௱௩௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும். (௫௱௩௰௧)
—மு. வரதராசன்

மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது. (௫௱௩௰௧)
—சாலமன் பாப்பையா

அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது (௫௱௩௰௧)
—மு. கருணாநிதி

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.   (௫௱௩௰௨ - 532)
 

நாளுக்குநாள் பெருகும் வறுமைத் துயரமானது ஒருவனது அறிவைக் கெடுத்தலைப் போல, மறதியானது, ஒருவனது புகழையும் தவறாமல் கெடுத்து விடும் (௫௱௩௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும். (௫௱௩௰௨)
—மு. வரதராசன்

நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும். (௫௱௩௰௨)
—சாலமன் பாப்பையா

நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும் (௫௱௩௰௨)
—மு. கருணாநிதி

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.   (௫௱௩௰௩ - 533)
 

மறதி உடையவர்களுக்கு புகழ் உடைமை என்பது இல்லை (௫௱௩௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும். (௫௱௩௰௩)
—மு. வரதராசன்

மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும். (௫௱௩௰௩)
—சாலமன் பாப்பையா

மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும் (௫௱௩௰௩)
—மு. கருணாநிதி

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.   (௫௱௩௰௪ - 534)
 

அச்சம் உடையவர்களுக்கு அரண்காவல் இருந்தும் பயனில்லை, அவ்வாறே மறதி உடையவர்களுக்கு நல்ல செல்வநலம் இருந்தாலும் அதனால் பயன் இல்லை (௫௱௩௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை. (௫௱௩௰௪)
—மு. வரதராசன்

மனத்துள் பயம் உள்ளவர்க்கு எத்தகைய பாதுகாப்பாலும் பயன் இல்லை. அதுபோலவே மறதி உடையவர்க்கும் பாதுகாப்பால் பயன் இல்லை. (௫௱௩௰௪)
—சாலமன் பாப்பையா

பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனுமில்லை (௫௱௩௰௪)
—மு. கருணாநிதி

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.   (௫௱௩௰௫ - 535)
 

துன்பம் வருவதற்கு முன்னதாகவே தன்னைக் காத்துக் கொள்ளாமல் மறதியாக இருந்தவன், பின்னர்த் துன்பம் வந்த போது, தன்பிழையை நினைத்து வருந்துவான் (௫௱௩௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான். (௫௱௩௰௫)
—மு. வரதராசன்

துன்பங்கள் வரும் முன்பே அவற்றைத் தடுக்காமல் மறந்திருந்தவன், பின் அவை வந்தபோது தடுக்க முடியாமல் தன் பிழையை எண்ணி வருந்துவான். (௫௱௩௰௫)
—சாலமன் பாப்பையா

முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும் (௫௱௩௰௫)
—மு. கருணாநிதி

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.   (௫௱௩௰௬ - 536)
 

மறதியில்லாத இயல்பு எவரிடத்தும் எக்காலத்தும் குறையாமல் இருந்தால், அதற்கு ஒப்பாக நன்மை தருவது வேறு எதுவும் இல்லை (௫௱௩௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை. (௫௱௩௰௬)
—மு. வரதராசன்

எவரிடத்திலேனும் எப்போதும் விடாமல் மறதி இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப் போன்ற நன்மை வேறு இல்லை. (௫௱௩௰௬)
—சாலமன் பாப்பையா

ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது (௫௱௩௰௬)
—மு. கருணாநிதி

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.   (௫௱௩௰௭ - 537)
 

மறவாமை என்னும் கருவியினாலே எதனையும் பேணிச் செய்தால், செய்வதற்கு அரியன என்று நினைத்துக் கைவிடும் செயல்களும் இல்லையாகும் (௫௱௩௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை. (௫௱௩௰௭)
—மு. வரதராசன்

மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை. (௫௱௩௰௭)
—சாலமன் பாப்பையா

மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை (௫௱௩௰௭)
—மு. கருணாநிதி

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.   (௫௱௩௰௮ - 538)
 

சான்றோர்கள் சிறந்தவையாகப் போற்றும் கடமைகளைப் போற்றிச் செய்தல் வேண்டும் (௫௱௩௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சான்றோர் புகழ்ந்து சொல்லியச் செயல்களைப் போற்றிச் செய்யவேண்டும், அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழுப் பிறப்பிலும் நன்மை இல்லை. (௫௱௩௰௮)
—மு. வரதராசன்

உயர்ந்தோர் புகழ்ந்து சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்க மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை. (௫௱௩௰௮)
—சாலமன் பாப்பையா

புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும் அப்படிச் செய்யாமல் புறக்கணிக்கப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை (௫௱௩௰௮)
—மு. கருணாநிதி

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.   (௫௱௩௰௯ - 539)
 

தாம், தம்முடைய மகிழ்ச்சியினாலே செருக்கடையும் போது, முன்னர் அப்படிப்பட்ட மகிழ்ச்சியினாலே மறதியடைந்து கெட்டழிந்தவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும் (௫௱௩௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும். (௫௱௩௰௯)
—மு. வரதராசன்

தம் மகிழ்ச்சியில் மனவலிமை பெறும்பொழுது எல்லாம் முற்காலத்தில் மகிழ்ச்சியால் மறதி கொண்டு அழிந்தவர்களை நினைவிற் கொள்க. (௫௱௩௰௯)
—சாலமன் பாப்பையா

மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும் (௫௱௩௰௯)
—மு. கருணாநிதி

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.   (௫௱௪௰ - 540)
 

தான் அடையக் கருதியதை இடைவிடாமல் மறதியின்றி நினைக்கக் கூடுமானால், ஒருவன், தான் நினைத்ததை அடைதல் என்பது எளிதாயிருக்கும் (௫௱௪௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும். (௫௱௪௰)
—மு. வரதராசன்

நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது. (௫௱௪௰)
—சாலமன் பாப்பையா

கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும் (௫௱௪௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: குந்தலவராளி  |  தாளம்: ஆதி
பல்லவி:
ஆனாலும் உமக்கிந்த மறதி ஆகாது
ஐயா வெகுளியினும் இது மிகத் தீது

அநுபல்லவி:
போனால் உயிர் வருமோ பொருளும் பயன் தருமோ
புகழும் செயல்கள் செய்ய மறப்பதுவும் தகுமோ

சரணம்:
கிளையை வளர விட்டுப் பயிரையே அழிப்பதா
கண் மண் தெரியாமலே பலரையும் பழிப்பதா
விளைவை எண்ணிப் பாராமல் வீண்காலம் கழிப்பதா
வீட்டிற்கு வேண்டியதைக் கேட்டபின் விழிப்பதா

அச்சமுடையவர்க்கே அரண் எங்குமில்லை
அறிவுக்கும் அழகுக்கும் வறுமையால் தொல்லை
பொச்சாப் புடையவர்க்கும் நன்மையே இல்லை
புரிந்து முன் காக்க வேண்டும் திருக்குறள் சொல்லை




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22