பசப்புறு பருவரல்

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.   (௲௱௮௰௧ - 1181)
 

என்னை விரும்பிய காதலரின் பிரிவுக்கு அந்நாளிலே உடன்பட்ட யான், இப்பொழுது பசந்த என் இயல்பை யாருக்குச் சென்று எடுத்துச் சொல்வேன்! (௲௱௮௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்? (௲௱௮௰௧)
—மு. வரதராசன்

என்னை விரும்பிய என்னவர் பிரியச் சம்மதித்த நான், அவர் பிரிவைத் தாங்காமல் பசலை கொண்ட என் மேனியின் இயல்பை யாரிடம் போய்ச் சொல்வேன்? (௲௱௮௰௧)
—சாலமன் பாப்பையா

என்னைப் பிரிந்து செல்வதற்கு என் காதலர்க்கு ஒப்புதல் அளித்துவிட்டேன்; ஆனால், இப்போது பிரிவுத் துன்பத்தால் என்னுடலில் பசலை படர்வதை, யாரிடம் போய்ச் சொல்வேன்? (௲௱௮௰௧)
—மு. கருணாநிதி

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.   (௲௱௮௰௨ - 1182)
 

‘அவர் தந்தார்’ என்னும் உரிமையினாலே, இப் பசப்புத் தானும், என் உடலின் மேல் உரிமையோடு பற்றிப் படர்ந்து மேனி எங்கும் நிறைகின்றதே! (௲௱௮௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது. (௲௱௮௰௨)
—மு. வரதராசன்

இந்தப் பசலை அவர் எனக்குத் தந்தது என்னும் பெருமையினால் என் மேனி எங்கும் படருகின்றன. (௲௱௮௰௨)
—சாலமன் பாப்பையா

பிரிவு காரணமாகக் காதலர் உண்டாக்கினார் எனும் பெருமிதம் பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது! (௲௱௮௰௨)
—மு. கருணாநிதி

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.   (௲௱௮௰௩ - 1183)
 

என் அழகையும் நாணத்தையும் அவர் தம்மோடு எடுத்துக் கொண்டார்; அதற்குக் கைம்மாறாகக் காமநோயையும் பசலையையும் எனக்குத் தந்துள்ளார்! (௲௱௮௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாக ‌‌கொடுத்து விட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார். (௲௱௮௰௩)
—மு. வரதராசன்

அவர் என்னைப் பிரிகிறபோதே உள்ளத் துன்பத்தையும் பசலையையும் எனக்குக் கொடுத்துவிட்டு அவற்றுக்கு ஈடாக என் அழகையும் வெட்கத்தையம் கொண்டு போய்விட்டார். (௲௱௮௰௩)
—சாலமன் பாப்பையா

காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார் (௲௱௮௰௩)
—மு. கருணாநிதி

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.   (௲௱௮௰௪ - 1184)
 

அவரையே யான் நினைத்திருப்பேன்; அவர் திறங்களைப் பற்றியே பேசுவேன்; அவ்வாறாகவும், பசலையும் வந்து படர்ந்ததுதான் பெரிய வஞ்சனையாய் இருக்கின்றது! (௲௱௮௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ? (௲௱௮௰௪)
—மு. வரதராசன்

நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா? (௲௱௮௰௪)
—சாலமன் பாப்பையா

யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி? (௲௱௮௰௪)
—மு. கருணாநிதி

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.   (௲௱௮௰௫ - 1185)
 

அதோ பார், என் காதலர் என்னைப் பிரிந்து போகின்றார்; இதோ பார், அதற்குள்ளேயே என் உடலில் பசலையானது வந்து பற்றிப் படருகின்றது! (௲௱௮௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது. (௲௱௮௰௫)
—மு. வரதராசன்

முன்பும்கூட, அந்தப் பக்கம் என் அன்பர் போயிருப்பார்; இந்தப் பக்கம் என் மேனி பசலை கொண்டு விடும். முன்பே அப்படி என்றால் இப்போது எப்படி இருக்கும்? (௲௱௮௰௫)
—சாலமன் பாப்பையா

என்னைப் பிரிந்து காதலர் சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை; அதற்குள்ளாக என் மேனியில் படர்ந்து விட்டதே பசலை நிறம் (௲௱௮௰௫)
—மு. கருணாநிதி

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.   (௲௱௮௰௬ - 1186)
 

விளக்கின் முடிவை எதிர்பார்த்துத் தான் வரக் காத்திருக்கும் இருளைப் போல, என் தலைவனுடைய தழுவலின் முடிவைப் பசலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது (௲௱௮௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் ‌சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது. (௲௱௮௰௬)
—மு. வரதராசன்

விளக்கு மெலிவதைப் பார்த்து நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக் காத்திருந்த பசலை வரும். (௲௱௮௰௬)
—சாலமன் பாப்பையா

விளக்கின் ஒளிகுறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலன்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறது (௲௱௮௰௬)
—மு. கருணாநிதி

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.   (௲௱௮௰௭ - 1187)
 

தலைவனைத் தழுவியபடியே கிடந்தேன்; பக்கத்தில் சிறிது புரண்டேன்; அந்தப் பிரிவுக்கே பசலையும் அள்ளிக் கொள்வது போல, என் மீது மிகுதியாகப் பரவி விட்டதே (௲௱௮௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே! (௲௱௮௰௭)
—மு. வரதராசன்

முன்னொரு சமயம் நான் அவரைத் தழுவிக் கிடந்தேன்; கொஞ்சம் விலகினேன்; அவ்வளவுதான்; இந்தப் பசலை என்னை அப்படியே அள்ளிக் கொள்வது போல் வந்துவிட்டது. (௲௱௮௰௭)
—சாலமன் பாப்பையா

தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்! (௲௱௮௰௭)
—மு. கருணாநிதி

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.   (௲௱௮௰௮ - 1188)
 

‘இவள் பசந்தாள்’ என்று என்னைப் பழித்துப் பேசுவது அல்லாமல், இவளைக் காதலர் கைவிட்டுப் பிரிந்தார் என்று பேசுபவர் யாரும் இல்லையே! (௲௱௮௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இவள் பிரிவால் வருத்திப் பசலை நிறம் அடைந்தாள் என்ற பழி சொல்வதே அல்லாமல், இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார் என்று சொல்பவர் இல்லையே! (௲௱௮௰௮)
—மு. வரதராசன்

இங்கோ இவள் பசலை உற்றாள் என்று சொல்கிறார்களே தவிர, இந்தப் பெண்ணை விட்டுவிட்டு அவர் போய்விட்டாரே என்று சொல்பவர் ஒருவரும் இல்லை. (௲௱௮௰௮)
—சாலமன் பாப்பையா

இவள் உடலில் பசலை நிறம் படர்ந்தது எனப் பழித்துக் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பது தான் என்று சொல்பவர் இல்லையே (௲௱௮௰௮)
—மு. கருணாநிதி

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.   (௲௱௮௰௯ - 1189)
 

‘பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையினர் ஆவார்’ என்றால், என்னுடைய மேனியும் உள்ளபடியே பசலை நோயினை அடைவதாக! (௲௱௮௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக. (௲௱௮௰௯)
—மு. வரதராசன்

இந்தப் பிரிவிற்கு நான் சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர்தாம் நல்லவர் என்றால், என் மேனி மேலும் பசலை அடைந்து விட்டுப் போகட்டும்! (௲௱௮௰௯)
—சாலமன் பாப்பையா

பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக! (௲௱௮௰௯)
—மு. கருணாநிதி

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.   (௲௱௯௰ - 1190)
 

‘பிரிவுக்கு உடன்படச் செய்து பிரிந்து போனவர், நமக்கு அருள் செய்யாதது பற்றித் தூற்றார்’ என்றால், யான் பசந்தேன் என்று பேர்பெறுவதும் நல்லதேயாகும்! (௲௱௯௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமல் இருப்பாரானால், யான் பசலை உற்றதாக பெயர் எடுத்தல் நல்லதே. (௲௱௯௰)
—மு. வரதராசன்

என்னைச் சம்மதிக்கச் செய்து பிரிந்தவர் இன்னும் வராமல் இருப்பதை எண்ணி அவரை ஏசாமல், இவளே பசலை ஆயினாள் என்று இம்மக்கள் சொல்லுவர் என்றால் அப்படி ஓரு பெயரைப் பெறுவதும் நல்லதே. (௲௱௯௰)
—சாலமன் பாப்பையா

என்னைப் பிரிவுக்கு உடன்படுமாறு செய்த காதலரை அன்பில்லாதவர் என்று யாரும் தூற்றமாட்டார்கள் எனில், பசலை படர்ந்தவள் என நான் பெயரெடுப்பது நல்லது தான்! (௲௱௯௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: சாமா  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்ததென்
பண்பியார்க் குரைக்கோ பிற

அநுபல்லவி:
உயர்ந்த நல்ல நிலையில் உள்ளார் அவரே என்றால்
உள்ளபடி என்மேனி பசலை நிறம் பெறுக

சரணம்:
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக் கொள்வற்றே பசப்பெனவே குறளில்
சொல்லிய விளக்கற்றம் பார்க்கும் இருள் போல் கொண்கன்
மெல்லியென் முயக்கற்றம் பார்க்கும் விந்தை என்னேடி

நேயமிகும் காதலர் நீங்கிச் செல்கின்றார் அதோ
நேரிழை யென் பொன்மேனியில் பசலை நிறம் பார் இதோ
சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறாக
நோயும் பசலையுமே தந்தாரடி என் பாங்கி




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22