ஒப்புரவறிதல்

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.   (௨௱௰௧ - 211)
 

மழைக்கு இவ்வுலகம் என்ன கைம்மாறு செய்யக்கூடும்? உலக நன்மையைக் கருதிச் சான்றோர் செய்யும் கடமைகளும் அவ்வாறே, கைம்மாறு விரும்பாதவைகளே! (௨௱௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை. (௨௱௰௧)
—மு. வரதராசன்

பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்? (௨௱௰௧)
—சாலமன் பாப்பையா

கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர் (௨௱௰௧)
—மு. கருணாநிதி

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.   (௨௱௰௨ - 212)
 

தன் முயற்சியினாலே ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்ந்தது என்று எண்ணல் வேண்டும் (௨௱௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும். (௨௱௰௨)
—மு. வரதராசன்

முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே. (௨௱௰௨)
—சாலமன் பாப்பையா

தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும் (௨௱௰௨)
—மு. கருணாநிதி

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.   (௨௱௰௩ - 213)
 

ஒப்புரவைப் போலப் பலருக்கும் நன்மையான வேறொரு பண்பை இவ்வுலகத்திலும், தேவர்களின் உலகத்திலும் பெறுவது அருமை ஆகும் (௨௱௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது. (௨௱௰௩)
—மு. வரதராசன்

தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம். (௨௱௰௩)
—சாலமன் பாப்பையா

பிறர்க்கு உதவிடும் பண்பாகிய ``ஒப்புரவு'' என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது (௨௱௰௩)
—மு. கருணாநிதி

ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.   (௨௱௰௪ - 214)
 

‘எவ்வுயிரும் ஒத்த தன்மையானது’ என்று அறிந்து உதவி செய்து வாழ்பவனே உயிர் வாழ்கின்றவன்; ஒப்புரவற்ற மற்றவன், செத்தவருள் வைத்துக் கருதப்படுவான் (௨௱௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான். (௨௱௰௪)
—மு. வரதராசன்

உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான். (௨௱௰௪)
—சாலமன் பாப்பையா

ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான் (௨௱௰௪)
—மு. கருணாநிதி

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.   (௨௱௰௫ - 215)
 

உலகினர் எல்லாரும் விரும்புமாறு, உதவி செய்து வாழும் பேரறிவாளனுடைய செல்வமானது, ஊருணியிலே நீர் நிரம்பினால் போலப் பலருக்கும் பயன்படுவதாகும் (௨௱௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது. (௨௱௰௫)
—மு. வரதராசன்

உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும். (௨௱௰௫)
—சாலமன் பாப்பையா

பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும் (௨௱௰௫)
—மு. கருணாநிதி

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.   (௨௱௰௬ - 216)
 

செல்வம் நல்ல பண்பு உடையவனிட்ம சென்று சேர்தலானது, ஊருக்குள்ளே பழமரம் பழுத்திருப்பது போலப் பலருக்கும் பயன் தருவதாகும் (௨௱௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது. (௨௱௰௬)
—மு. வரதராசன்

பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும். (௨௱௰௬)
—சாலமன் பாப்பையா

ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும் (௨௱௰௬)
—மு. கருணாநிதி

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.   (௨௱௰௭ - 217)
 

செல்வமானது பெருந்தகுதி உடையவனிடம் சேர்தல், பிணி தீர்க்கும் மருந்தாகிப் பயன் தரத் தவறாத மருந்துமரம் போல எப்போதும் பயன் தருவதாகும் (௨௱௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது. (௨௱௰௭)
—மு. வரதராசன்

பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும். (௨௱௰௭)
—சாலமன் பாப்பையா

பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும் (௨௱௰௭)
—மு. கருணாநிதி

இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்.   (௨௱௰௮ - 218)
 

ஒப்புரவு செய்தலாகிய கடமையை அறிந்த அறிவாளர்கள், அதற்கேற்ற பொருள்வசதி இல்லாத காலத்திலும் முடிந்தவரை உதவத் தளர மாட்டார்கள் (௨௱௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார். (௨௱௰௮)
—மு. வரதராசன்

செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள். (௨௱௰௮)
—சாலமன் பாப்பையா

தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர் (௨௱௰௮)
—மு. கருணாநிதி

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.   (௨௱௰௯ - 219)
 

ஒப்புரவாகிய நல்ல பண்பை உடையவன் பொருளற்று வறுமை உடையவனாதல், செய்யத் தகுந்த உதவிகளைச் செய்யவியலாது வருந்துதலே ஆகும் (௨௱௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும். (௨௱௰௯)
—மு. வரதராசன்

உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான். (௨௱௰௯)
—சாலமன் பாப்பையா

பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான் (௨௱௰௯)
—மு. கருணாநிதி

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.   (௨௱௨௰ - 220)
 

ஒப்புரவினாலே கேடு வரும் என்றால், அந்தக் கேடானது தன்னை விற்றாவது ஒருவன் பெறுவதற்குத் தகுந்த சிறப்பை உடையதாகும் (௨௱௨௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும். (௨௱௨௰)
—மு. வரதராசன்

இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே. (௨௱௨௰)
—சாலமன் பாப்பையா

பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும் (௨௱௨௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: சுருட்டி  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
ஊருடனே கூடிவாழ் நண்பா! - நீ
ஒப்புர வறிந்தே
எப்பொழுதும் நன்றே

அநுபல்லவி:
ஏருழவர் முதல் எண்ணும் தொழிலாளர்
யாவரும் நின் செல்வம்
ஏற்றுயர்ந்தார் என

சரணம்:
பயன் எதிர்பாராத பண்பினிலே நின்று
பழுமரம் ஊருணி பருவமழை என்று
நயம்படவே நல்லோர் நவிலும்வழி சென்று
நாடும் நின்வாழ்க்கையை அமைத்துக்கொள்வாய் நன்று

"இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சியோர்" என்றுன்னையே கொள்வர்
உடன்படவே என்றும் மற்றவர்க்குதவி செய்
ஓதும் திருக்குறள் நீதியில் கவனம் வை




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22