குடிசெயல்வகை

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.   (௲௨௰௧ - 1021)
 

‘என் குடியை உயரச் செய்வதற்கான செயல்களைச் செய்வதில் ஒருபோதும் கை ஓயமாட்டேன்’ என்னும் பெருமையைப் போல, ஒருவனுக்கு சிறந்த பெருமை தருவது வேறில்லை (௲௨௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை. (௲௨௰௧)
—மு. வரதராசன்

வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செயல் செய்யாமல் விடமாட்டேன் என மன உறுதிகொள்ளும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை வேறு இல்லை. (௲௨௰௧)
—சாலமன் பாப்பையா

உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது (௲௨௰௧)
—மு. கருணாநிதி

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.   (௲௨௰௨ - 1022)
 

‘முயற்சியும், நிறைந்த அறிவும்’ என்று சொல்லப்பட்ட இரண்டினையும் உடைய, இடைவிடாத கருமச் செயலால், ஒருவனது குடிப்பெருமை தானே உயர்வு அடையும் (௲௨௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும். (௲௨௰௨)
—மு. வரதராசன்

முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும். (௲௨௰௨)
—சாலமன் பாப்பையா

ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும் (௲௨௰௨)
—மு. கருணாநிதி

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.   (௲௨௰௩ - 1023)
 

‘என் குடியைப் புகழால் உயரச் செய்வேன்’ என்று அதற்கேற்ற செயல்களிலே ஈடுபடும் ஒருவனுக்கு, தெய்வமும் மடியை உதறிக் கொண்டு முன் வந்து உதவி நிற்கும் (௲௨௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும். (௲௨௰௩)
—மு. வரதராசன்

என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும். (௲௨௰௩)
—சாலமன் பாப்பையா

தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும் (௲௨௰௩)
—மு. கருணாநிதி

சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.   (௲௨௰௪ - 1024)
 

தம் குடியை உயர்த்துவதற்கு இடைவிடாமல் முயல்கிறவர்களுக்கு, அதன் வழிபற்றி அவர் ஆராயும் முன்பே, தெய்வ உதவியால், அது தானாகவே முடிந்துவிடும் (௲௨௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும். (௲௨௰௪)
—மு. வரதராசன்

தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும். (௲௨௰௪)
—சாலமன் பாப்பையா

தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும் (௲௨௰௪)
—மு. கருணாநிதி

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.   (௲௨௰௫ - 1025)
 

குற்றமாகிய செயல்களைச் செய்யாமல், தன் குடியை உயரச் செய்து நடக்கிறவனின் சுற்றமாக விரும்பி, உலகத்தார் எல்லாருமே சென்று அவனைச் சூழ்வார்கள் (௲௨௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர். (௲௨௰௫)
—மு. வரதராசன்

தவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்து வாழ்பவனை உயர்ந்தோர் தம் சுற்றமாக ஏற்பர். (௲௨௰௫)
—சாலமன் பாப்பையா

குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள் (௲௨௰௫)
—மு. கருணாநிதி

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.   (௲௨௰௬ - 1026)
 

‘ஒருவனுடைய நல்லாண்மை’ என்பது, தான் பிறந்த குடியினை ஆளும் தன்மையை, அவன், தன்னிடம் உளதாக ஆக்கிக் கொள்ளுதலே ஆகும் (௲௨௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும். (௲௨௰௬)
—மு. வரதராசன்

ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ. (௲௨௰௬)
—சாலமன் பாப்பையா

நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார் (௲௨௰௬)
—மு. கருணாநிதி

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்து
ஆற்றுவார் மேற்றே பொறை.   (௲௨௰௭ - 1027)
 

அமரகத்தில் வன்கண்மை உடையவரே போரைத் தாங்குவார்; அதுபோலக் குடியிற் பிறந்தவர் பலரானாலும், வல்லமை உடையவரே அதனைத் தாங்கிக் காப்பவர் (௲௨௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது. (௲௨௰௭)
—மு. வரதராசன்

போர்க்களத்திலே எதிர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத வீரர்க்கே ஆவது போல, ஒரு குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்பவரே, அவற்றின் சுமையைத் தாங்கவும் முடியும். (௲௨௰௭)
—சாலமன் பாப்பையா

போர்க்களத்தில் எதிர்ப்புகளைத் தாங்கிப் படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல் படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக் காப்பாற்றி உயர்வடையச் செய்யும் பொறுப்பும் அவர்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களுக்கே உண்டு (௲௨௰௭)
—மு. கருணாநிதி

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.   (௲௨௰௮ - 1028)
 

தம் குடியினை உயரச் செய்பவர் அதனையே கருதவேண்டும்; மற்றுக் காலத்தைப் பார்த்து, மானத்தையும் கருதினால், குடி கெடும்; ஆகவே அவருக்குக் காலநியதி இல்லை (௲௨௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும். (௲௨௰௮)
—மு. வரதராசன்

தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி, தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் அவர்க்குக் கால நேரம் என்று இல்லை. (௲௨௰௮)
—சாலமன் பாப்பையா

தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும் (௲௨௰௮)
—மு. கருணாநிதி

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.   (௲௨௰௯ - 1029)
 

தன் குடி குற்றம் அடையாமல் காக்க முயல்பவனின் உடம்பு, அம்முயற்சித் துன்பத்திற்கே ஓர் கொள்கலமோ? அ·து ஒழிந்து, அது இன்பத்திற்கும் கொள்கலம் ஆகாதோ? (௲௨௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன் குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ. (௲௨௰௯)
—மு. வரதராசன்

தன்னால், விலங்குளால், பருவ மாற்றங்களால் துன்பப்படும் வீட்டையும், நாட்டையும் அத்துன்பங்களில் இருந்து காக்க முயல்பவனின் உடம்பு, துன்பத்திற்கு மட்டுமே கொள்கலமோ? இன்பத்திற்கும் இல்லையோ? (௲௨௰௯)
—சாலமன் பாப்பையா

தன்னைச் சார்ந்துள்ள குடிகளுக்குத் துன்பம் வராமல் தடுத்துத் தொடர்ந்து அக்குடிகளைக் காப்பாற்ற முயலுகிற ஒருவன், துன்பத்தைத் தாங்கி கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான் (௲௨௰௯)
—மு. கருணாநிதி

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.   (௲௩௰ - 1030)
 

துன்பம் வரும்போது, அதனைத் தாங்கிக் காக்கவல்ல நல்ல ஆண்மகன் பிறவாத குடியானது, துன்பமாகிய நவியம்புகுந்ததனால் வீழ்கின்ற மரம்போலத் தானும் வீழ்ந்து படும் (௲௩௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

துன்பம் வந்த போது உடனிருந்து தாங்க வல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடாரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும். (௲௩௰)
—மு. வரதராசன்

துன்பம் வரும் போது முட்டுக் கொடுத்துத் தாங்கும் நல்ல பிள்ளைகள் இல்லாத வீடும், நாடும் துன்பமாகிய கோடாரி அடிப்பகுதியை வெட்டச் சாயும் மரம் போல் விழுந்து விடும். (௲௩௰)
—சாலமன் பாப்பையா

வரும் துன்பத்தை எதிர் நின்று தாங்கக் கூடிய ஆற்றலுடையவர் இல்லாத குடியை அத்துன்பம், வென்று வீழ்த்திவிடும் (௲௩௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: சுத்தசாவேரி  |  தாளம்: ஆதி
பல்லவி:
குடி செயல்வகை காணுவோம் - நாமே
குடி செயல்வகை காணுவோம்

அநுபல்லவி:
குடி செய்வல் என்னும் ஒருவர்க்குத் தெய்வம்
மடிதற்றுத் தான் முந்துறும் என்றே குறள் சொல்லும்

சரணம்:
அமரகத்தில் அஞ்சாத வீரரைப் போலவே
ஆற்றுவார்க்கே குடும்பப் பொறுப்புண்டாம் சாலவே
அமையும் நல்லாண்மை யிதே இல்லாண்மையாய்ப் பிறக்கும்
ஆளும் தன்னாட்சியிலோர் அங்கம் என்றும் சிறக்கும்

மழை வெயில் பனி யென்றும் காலத்தைப் பாராமல்
மானமும் கருதாமல் மனச் சோம்பல் கொள்ளாமல்
உழைப்பதினால் நமது குடும்பநிலை உயரும்
உலகமெல்லாம் சுற்றமாய்ச் சூழும் நலம் வளரும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22