குறிப்பறிதல்

கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.   (௭௱௧ - 701)
 

ஒருவன் சொல்வதன் முன்பாகவே, குறிப்பால் அவன் கருத்தை அறியக் கூடியவன், வற்றாத கடலால் சூழப் பெற்றுள்ள உலகத்துக்கே அணிகலன் ஆவான் (௭௱௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்க்கு ஓர் அணிகலன் ஆவான். (௭௱௧)
—மு. வரதராசன்

ஒருவன் வாயால் சொல்லாமல் இருக்க, அவனுடைய முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவன் மனக்கருத்தை அறிந்து கொள்பவன், எப்போதும் வற்றாத கடலால் வளைக்கப்பட்ட இவ்வுலகத்தவர்க்கு ஆபரணம் போன்றவன். (௭௱௧)
—சாலமன் பாப்பையா

ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கே அணியாவான் (௭௱௧)
—மு. கருணாநிதி

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.   (௭௱௨ - 702)
 

கொஞ்சமும் ஐயப்படாத வகையிலே, பிறர் உள்ளத்திலுள்ள எண்ணங்களை உணர்ந்து கொள்ளக் கூடியவனைத் தெய்வத்தோடு சமமாகக் கொள்ளுதல் வேண்டும் (௭௱௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும். (௭௱௨)
—மு. வரதராசன்

அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும். (௭௱௨)
—சாலமன் பாப்பையா

ஒருவன் மனத்தில் உள்ளத்தைத், தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம் (௭௱௨)
—மு. கருணாநிதி

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.   (௭௱௩ - 703)
 

ஒருவரது முகக்குறிப்பினாலேயே, அவரது கருத்துக்களை உணர்கின்றவரை, உறுப்பினுள் எதனைக் கொடுத்தேனும் துணையாக்கிக் கொள்ளல் வேண்டும் (௭௱௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ள குறிப்பை உணர வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாவது துணையாக பெற்றுக்கொள்ள வேண்டும். (௭௱௩)
—மு. வரதராசன்

தான் குறிப்புச் செய்ய, அதைக் கண்டு பிறர் முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவர் மனக்கருத்தைக் கண்டு சொல்லும் திறம் மிக்கவரைத் தன்னிடம் இருக்கும் செல்வங்களுள் எதைக் கொடுத்தேனும் துணையாக வைத்துக் கொள்ள வேண்டும். (௭௱௩)
—சாலமன் பாப்பையா

ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ளவேண்டும் (௭௱௩)
—மு. கருணாநிதி

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.   (௭௱௪ - 704)
 

தாம் செய்வதற்குக் குறித்த ஒரு செயலைச் சொல்வதற்கு முன்பாகவே குறிப்பால் அறிந்து செய்பவர்களோடு, பிறர் நிலையால் ஒத்தாலும் பயனால் ஒப்பாகார் (௭௱௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் மனதில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவார். (௭௱௪)
—மு. வரதராசன்

ஒருவன் மனத்துள் நினைப்பதை அவன் சொல்லாமலேயே அறியம் ஆற்றல் உடையவரோடு அந்த ஆற்றல் இல்லாதவர் உறுப்பால் ஒத்தவர்; அறிவால் வேறுபட்டவர் ஆவார். (௭௱௪)
—சாலமன் பாப்பையா

உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர் மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள் (௭௱௪)
—மு. கருணாநிதி

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.   (௭௱௫ - 705)
 

ஒருவர் தம் கருத்தைக் குறிப்பால் காட்டிய போது, அதனை உணராமலிருந்தால், உடலுறுப்புக்களுள் கண் என்பது என்ன பயனைச் செய்வதாகுமோ? (௭௱௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக்குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புகளுள் கண்கள் என்னப் பயன்படும். (௭௱௫)
—மு. வரதராசன்

ஒருவன் குறிப்பைக் கண்ட பின்பும் அவன் மனக்கருத்தை அறியமுடியவில்லை என்றால், உறுப்புகளுள் சிறந்த கண்களால் என்ன நன்மை? (௭௱௫)
—சாலமன் பாப்பையா

ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டி விடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாத கண்கள் இருந்தும் என்ன பயன்? (௭௱௫)
—மு. கருணாநிதி

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.   (௭௱௬ - 706)
 

தன்னை அடுத்திருக்கும் ஓர் உருவத்தைத் தன்னிடத்தே காட்டும் பளிங்கைப் போல, ஒருவர் நெஞ்சம் கடுத்ததனை அவரது முகமும் தெளிவாகக் காட்டிவிடும் (௭௱௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும். (௭௱௬)
—மு. வரதராசன்

தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைக் காட்டும் பளிங்கினைப்போல் ஒருவனது மனத்தே நிகழ்வதை அவன் முகம் காட்டும். (௭௱௬)
—சாலமன் பாப்பையா

கண்ணாடி, தனக்கு உள்ளத்தைக் காட்டுவதுபோல ஒருவரது மனத்தில் உள்ளத்தில் அவரது முகம் காட்டி விடும் (௭௱௬)
—மு. கருணாநிதி

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.   (௭௱௭ - 707)
 

முகத்தைக் காட்டிலும் அறிவால் மிக்கது வேறு யாதும் உண்டோ? உள்ளம் மகிழ்ந்தாலும் சினந்தாலும், தான் முந்திக் கொண்டு அதனை வெளியே காட்டிவிடும் (௭௱௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் விருப்பம் கொண்டாலும், வெறுப்புக் கொண்டாலும் அவனுடைய முகம் முற்ப்பட்டு அதைத் தெரிவிக்கும், அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ. (௭௱௭)
—மு. வரதராசன்

ஒருவன் மனத்தால் விரும்பினாலும் வெறுத்தாலும் அதை வெளிக்காட்டுவதில் முந்தி நிற்கும் முகத்தைக் காட்டிலும் அறிவு மிக்கது வேறு உண்டோ? (௭௱௭)
—சாலமன் பாப்பையா

உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை (௭௱௭)
—மு. கருணாநிதி

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்.   (௭௱௮ - 708)
 

முகத் தோற்றத்தால் ஒருவருக்கு நேர்ந்த துயரத்தை உணர்பவரைத் துணையாக அடைந்தால், அவர் எதிரே நின்றாலே போதும், எதுவுமே சொல்ல வேண்டாம் (௭௱௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும். (௭௱௮)
—மு. வரதராசன்

தன் மனத்தைக் குறிப்பால் அறிந்து தான் எண்ணியதை அறிபவரைத் துணையாகப் பெற்றால், அவர்களின் முகத்தை அவன் பார்த்து நின்றாலே போதும். (௭௱௮)
—சாலமன் பாப்பையா

அகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமையிருப்பின், அவர் ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது (௭௱௮)
—மு. கருணாநிதி

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.   (௭௱௯ - 709)
 

கண் பார்வையால் கருத்தை வகைப்படுத்தி உணர்பவரைத் துணையாகப் பெற்றால், ஒருவரது பகைமையையும், நட்பையும் அவரது கண்களே நமக்குச் சொல்லிவிடும் (௭௱௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால்( ஒருவனுடைய மனதில் உள்ள) கையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லி விடும். (௭௱௯)
—மு. வரதராசன்

அடுத்தவர்களின் பார்வை வேறுபடுவதைக் கொண்டே அவர்தம் மனக்கருத்தை அறியும் ஆற்றல் உடையவர்க்கு, பகைமையையும் நட்பையும் அவர்கள் சொல்லவில்லை என்றாலும் அவர்தம் கண்களே சொல்லிவிடும். (௭௱௯)
—சாலமன் பாப்பையா

பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள், ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா, பகையா என்பதைக் கூறிவிடுவார்கள் (௭௱௯)
—மு. கருணாநிதி

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.   (௭௱௰ - 710)
 

நுண்ணறிவு உடையோம் என்பவர் பிறரை அளந்தறியும் அளவுகோல் யாதென ஆராயுங்காலத்து, அப் பிறரது கண் அல்லாமல் பிற உறுப்புக்கள் யாதும் இல்லை (௭௱௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல் வேறு இல்லை. (௭௱௰)
—மு. வரதராசன்

நாங்கள் நுண் அறிவை உடையவர்கள் என்று கூறிக்கொள்பவர், பிறர் மனக்கருத்தை அளந்து அறியப் பயன்படுத்தும் அளவு கருவி எது என்று ஆய்ந்து பார்த்தால் அது கண்ணே அன்றி வேறு இல்லை. (௭௱௰)
—சாலமன் பாப்பையா

நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை (௭௱௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: சாமா  |  தாளம்: ஆதி
பல்லவி:
முகமே பார்க்கும் கண்ணாடி - இதை
முதல் முதலாகவே அறிவோம் நாடி

அநுபல்லவி:
அகமே மலர்ந்தால் அழகாய்த் தெரியும்
அல்லாமல் சினந்தால் அப்பொழுதே எரியும்

சரணம்:
எண்ணும் பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும்
யாது கொடுத்தும் குறிப்புணர்வாரையே அழைக்கும்
"நுண்ணியம் என்பர் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லதில்லை பிற" என்னும் திருக்குறள் நூல்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22