பகைமாட்சி

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.   (௮௱௬௰௧ - 861)
 

தம்மை விட வலியவருக்குப் பகையாகி அவரை எதிர்த்தலைக் கைவிடல் வேண்டும்; தம்மினும் மெலியவருக்குப் பகையாவதை விடாமல் கொள்வதற்கு விரும்ப வேண்டும் (௮௱௬௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும். (௮௱௬௰௧)
—மு. வரதராசன்

பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை எதிர்ப்தைத் தவிர்த்து விடுக; மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செல்க. (௮௱௬௰௧)
—சாலமன் பாப்பையா

மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும் (௮௱௬௰௧)
—மு. கருணாநிதி

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.   (௮௱௬௰௨ - 862)
 

தன் சுற்றத்தாரிடம் அன்பில்லாதவன், வலிய துணையில்லாதவன், தானும் வலிமையற்றவன், பகைவரது வலிமையை எவ்வாறு, எதனால் போக்க முடியும்? (௮௱௬௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும். (௮௱௬௰௨)
—மு. வரதராசன்

மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலி‌மையை எப்படி அழிக்க முடியும்? (௮௱௬௰௨)
—சாலமன் பாப்பையா

உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்? (௮௱௬௰௨)
—மு. கருணாநிதி

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.   (௮௱௬௰௩ - 863)
 

அஞ்சுபவன், அறியவேண்டுவதை அறியாதவன், பிறருடன் பொருந்தாதவன், எவருக்கும் கொடுத்து உதவாதவன், பகைவருக்கு அழிப்பதற்கு எளியவனாவான் (௮௱௬௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன். (௮௱௬௰௩)
—மு. வரதராசன்

பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும் தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிக எளிது. (௮௱௬௰௩)
—சாலமன் பாப்பையா

அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான் (௮௱௬௰௩)
—மு. கருணாநிதி

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.   (௮௱௬௰௪ - 864)
 

நீங்காத சினத்தை உடையவன், நிறைவான மனவலிமை இல்லாதவன் ஆகிய ஒருவன் மீது பகைத்து வெற்றியடைதல், எக்காலத்திலும் எவர்க்கும் எளிதாகும் (௮௱௬௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன். (௮௱௬௰௪)
—மு. வரதராசன்

கோபம் குறையாத, ரகசியங்களைக் காக்கத் தெரியாத அரசைத் தோற்கடிப்பது எப்போதும், எங்கும், எவர்க்கும் எளிது. (௮௱௬௰௪)
—சாலமன் பாப்பையா

சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம் (௮௱௬௰௪)
—மு. கருணாநிதி

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.   (௮௱௬௰௫ - 865)
 

நீதி நூல்களைக் கல்லாதவன், அவை விதித்த செயல்களைச் செய்யாதவன், தனக்கு வரும் பழியைப் பாராதவன், பண்பற்றவன், ஆகியவனைப் பகைத்தலும் இனிதாகும் (௮௱௬௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனவான். (௮௱௬௰௫)
—மு. வரதராசன்

நீதி நூல்கள் ‌சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது. (௮௱௬௰௫)
—சாலமன் பாப்பையா

நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான் (௮௱௬௰௫)
—மு. கருணாநிதி

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.   (௮௱௬௰௬ - 866)
 

தன்னையும் பிறரையும் அறியாமைக்கு காரணமான சினம் கொண்டவன், மேன்மேலும் பெருகும் காமத்தான் பகைமை, பிறரால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படும் (௮௱௬௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும். (௮௱௬௰௬)
—மு. வரதராசன்

நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும். (௮௱௬௰௬)
—சாலமன் பாப்பையா

சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம் (௮௱௬௰௬)
—மு. கருணாநிதி

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.   (௮௱௬௰௭ - 867)
 

தொடங்கும்போது உடனிருந்து, பின் கேடுகளைச் செய்பவன் பகைமையை, சில பொருள்களை அழியும்படி கொடுத்தாவது உறுதியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் (௮௱௬௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும். (௮௱௬௰௭)
—மு. வரதராசன்

ஒரு செயலைத் தொடங்கி விட்டு, அதன் நலத்திற்குப் பொருந்தாதவற்றைச் செய்யும் அரசின் பகைமையைச், சிலவற்றை அழியக் கொடுத்தாவது உறுதியாகப் பெற வேண்டும். (௮௱௬௰௭)
—சாலமன் பாப்பையா

தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும் (௮௱௬௰௭)
—மு. கருணாநிதி

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து.   (௮௱௬௰௮ - 868)
 

நல்ல குணம் எதுவும் இல்லாதவனாய், குற்றங்களும் பலவாக உள்ளவன், எவ்வகைத் துணையுமே இல்லாதவன் ஆவான்; அப்படி இல்லாததே அவன் பகைவருக்குத் துணையாகும் (௮௱௬௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும். (௮௱௬௰௮)
—மு. வரதராசன்

நல்ல குணங்கள் இல்லாமல் குற்றங்கள் பலவும் உடைய அரசிற்குத் துணை இல்லாது போகும். துணை இல்லாது இருப்பதே அந்த அரசின் பகைவர்க்கு பலம். (௮௱௬௰௮)
—சாலமன் பாப்பையா

குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால், அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார் (௮௱௬௰௮)
—மு. கருணாநிதி

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.   (௮௱௬௰௯ - 869)
 

நீதியை அறிதல் இல்லாதவரும் அஞ்சுபவரும் ஆகியவரைப் பெற்றால், அவரைப் பகைத்தவர்க்கு, உயர்ந்த இன்பங்கள் எல்லாம் சென்று நீங்காமல் பொருந்தியிருக்கும் (௮௱௬௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும். (௮௱௬௰௯)
—மு. வரதராசன்

நீதியை அறியும் அறிவற்ற, எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெற்றால், அத்தகைய பகைவரைப் பெற்றவர்களை விட்டுச் சிறந்த நன்மைகள் விலக மாட்டா. (௮௱௬௰௯)
—சாலமன் பாப்பையா

அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும் (௮௱௬௰௯)
—மு. கருணாநிதி

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.   (௮௱௭௰ - 870)
 

நீதி நூலைக் கல்லாதவனோடு பகை கொண்டு அழிப்பதனால் வரும் சிறுபொருளை, எப்போதும் தான் அடைவதற்கு நினையாதவனை, வெற்றிப் புகழும் சேர்ந்திருக்காது (௮௱௭௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கல்வி கற்காதவனைப் பகைத்துக்கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம் எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது. (௮௱௭௰)
—மு. வரதராசன்

நீதி நூல்களைக் கல்லாதவனைப் பகைப்பதால் கிடைக்கும் பொருள் சிறிது எனினும், அதை விரும்பாத அரசுக்கு ஒருபோது் புகழ் சேராது. (௮௱௭௰)
—சாலமன் பாப்பையா

போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம் காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலி புரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும் (௮௱௭௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: செஞ்சுருட்டி  |  தாளம்: ஆதி
கண்ணிகள்:
வலியார் பகையை விட்டே மெலியார் பகைமேற் கொள்ள
வழியிதை யார்க்கும் சொல்லும் பகை மாட்சி
பலி கொடுக்கா திருக்கப் பார்த்து வழி நடக்கப்
பயில் வதினால் சிறக்கும் தன்னாட்சி

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான் துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு கண்டீர்
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக் கறிவீர்

நீங்கான் வெகுளி நிறைஇலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்குமே எளிதாகும்
பாங்கினில் உறைந்தே தீங்கினைப் புரிபவர்
பகையைக் கொடுத்தும் கொள்ளல் இனிதாகும்

அறிவும் குணமும் இல்லார் அஞ்சும் இயல்புடையார்
அவர் பகை கொண்டால் இன்பம் தந்திடுமே
புரியும் வழியை நோக்கிப் பொல்லாப் பழியை நீக்கி
பொருந்திடச் செய்யும் திருக்குறள் நயமே




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22