செங்கோன்மை

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.   (௫௱௪௰௧ - 541)
 

நடுநிலைமை தவறாமல், யாரிடத்தும் இரக்கம் காட்டாமல், குற்றத்தின் கடுமையை ஆராய்ந்து, அதற்குத் தகுந்த தண்டனை விதிப்பதே அரசனுக்கு முறையாகும் (௫௱௪௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும். (௫௱௪௰௧)
—மு. வரதராசன்

குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு நூல்வழி ஆராய்ந்து, குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே நேர்மையான ஆட்சி. (௫௱௪௰௧)
—சாலமன் பாப்பையா

குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும் (௫௱௪௰௧)
—மு. கருணாநிதி

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.   (௫௱௪௰௨ - 542)
 

மழையின் செம்மையை எதிர்பார்த்து உலகத்து உயிர்கள் எல்லாம் வாழும்; மன்னவனின் செங்கோன்மையை எதிர்பார்த்துக் குடிகள் வாழ்வார்கள் (௫௱௪௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர். (௫௱௪௰௨)
—மு. வரதராசன்

உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர். (௫௱௪௰௨)
—சாலமன் பாப்பையா

உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது (௫௱௪௰௨)
—மு. கருணாநிதி

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.   (௫௱௪௰௩ - 543)
 

அந்தணரது நூல்களுக்கும், உலகில் அறம் நிலைப்பதற்கும் அடிப்படையாக நின்றது, மன்னவனது அறம் தவறாத செங்கோன்மையே ஆகும் (௫௱௪௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும். (௫௱௪௰௩)
—மு. வரதராசன்

அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே. (௫௱௪௰௩)
—சாலமன் பாப்பையா

ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும் (௫௱௪௰௩)
—மு. கருணாநிதி

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.   (௫௱௪௰௪ - 544)
 

குடிகளை அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்தும் மாநிலத்து வேந்தனின் அடிகளைத் தழுவி, இவ்வுலகத்து வாழ்வும் நிலைபெறுவதாகும் (௫௱௪௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும். (௫௱௪௰௪)
—மு. வரதராசன்

குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர். (௫௱௪௰௪)
—சாலமன் பாப்பையா

குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும் (௫௱௪௰௪)
—மு. கருணாநிதி

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.   (௫௱௪௰௫ - 545)
 

அரசனுக்குரிய இயல்போடு செங்கோல் செலுத்தும் மன்னவனின் நாட்டிலே, பருவமழையும், விளைபொருள்களும் ஒருங்கே மலிந்திருக்கும் (௫௱௪௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும். (௫௱௪௰௫)
—மு. வரதராசன்

அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும். (௫௱௪௰௫)
—சாலமன் பாப்பையா

நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும் (௫௱௪௰௫)
—மு. கருணாநிதி

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.   (௫௱௪௰௬ - 546)
 

மன்னவனுக்கு வெற்றியளிப்பது அவன் கையிலுள்ள வேல் அல்ல; அவன் செங்கோன்மை கோணாமல் இருந்தானால் அதுவே வெற்றி அளிப்பதாகும் (௫௱௪௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின். (௫௱௪௰௬)
—மு. வரதராசன்

ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும். (௫௱௪௰௬)
—சாலமன் பாப்பையா

ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான் (௫௱௪௰௬)
—மு. கருணாநிதி

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.   (௫௱௪௰௭ - 547)
 

உலகத்தாரை எல்லாம் மன்னவன் காப்பாற்றி வருவான்; முறை தவறாமல் அவன் செங்கோல் செலுத்தி வந்தால், அது அவனைக் காப்பாற்றி நிற்கும் (௫௱௪௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும். (௫௱௪௰௭)
—மு. வரதராசன்

ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும். (௫௱௪௰௭)
—சாலமன் பாப்பையா

நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும் (௫௱௪௰௭)
—மு. கருணாநிதி

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.   (௫௱௪௰௮ - 548)
 

முறையிட வருபவரது காட்சிக்கு எளியவனாய், அவர்கள் குறைகளைக் கேட்டு ஆராய்ந்து முறைசெய்யாத மன்னவன், தாழ்ந்த நிலையிலே சென்று தானே கெடுவான் (௫௱௪௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான். (௫௱௪௰௮)
—மு. வரதராசன்

நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பலவகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான். (௫௱௪௰௮)
—சாலமன் பாப்பையா

ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும் (௫௱௪௰௮)
—மு. கருணாநிதி

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.   (௫௱௪௰௯ - 549)
 

குடிகளைப் பகைவரிடமிருந்து காத்தும், அவர்களுக்கு நன்மை செய்து பேணியும், குற்றங்களை நீக்கியும் முறை செய்தால் வேந்தனுக்குக் குற்றம் இல்லை; அதுவே அவன் தொழில் (௫௱௪௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று. (௫௱௪௰௯)
—மு. வரதராசன்

அயலவர் அழிக்காமல் குடிமக்களையும் தன்னையும் காத்து, குடிகளின் குறைகளைக் களைந்து நேரிய ஆட்சி செய்வது, ஆட்சியாளருக்குக் குறை ஆகாது. அது அவர் தொழில். (௫௱௪௰௯)
—சாலமன் பாப்பையா

குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும் (௫௱௪௰௯)
—மு. கருணாநிதி

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.   (௫௱௫௰ - 550)
 

கொடிய செய்வாரைக் கொலைத் தண்டனையால் தண்டித்தும் மற்றவர்களை அருளோடு காத்தும் முறைசெய்தல், பசும் பயிரில் களையெடுப்பது போன்ற சிறந்த செயலாகும் (௫௱௫௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும். (௫௱௫௰)
—மு. வரதராசன்

கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம். (௫௱௫௰)
—சாலமன் பாப்பையா

கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும் (௫௱௫௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: கல்யாணி  |  தாளம்: ஆதி
பல்லவி:
நீதியின் திருமுகமே - செங்கோன்மை
நிலைபெற விளங்கிடுமே
நினைவுறும் மாந்தர்கள்
அனைவரும் சமமெனும்

அநுபல்லவி:
ஆதியாய் அரசாளும் உலகினிலே
ஆதரவாகவே
அறவோர்கள் சூழவே

சரணம்:
விளைவும் மழையும் ஒன்றாய்க்கூடும் தன்னாலே
வேலினும் கொலே வெற்றி அளிக்கும் முன்னாலே
வளையாமலே நாளும் வளரும் பண்பாலே
மன்னுயிர் யாவையும் தன்னுயிர் என்றிடும்
மன்னவன் முன்னவனாக வணங்கிடும்

குடி புறங் காத்தோம்பி குற்றமே கடிதல்
வடு வன்று வேந்தன் தொழில் எனும் குறளறிதல்
கொடியோர் தமை ஒறுத்தே இறை முறை புரிதல்
கொற்றம் விளங்கிட நற்றுணை நின்றிடும்
பெற்ற தன்னாட்சியைப் பேருலகேத்திடும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22