பெருமை

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.   (௯௱௭௰௧ - 971)
 

ஒருவனுக்குப் பெருமை, ‘பிறரால் செய்வதற்கரியதைச் செய்வேன்’ என்னும் மனவூக்கமே; இழிவாவது, ‘அதனைச் செய்யாமலே உயிர் வாழ்வேன்’ என்று நினைப்பதாகும் (௯௱௭௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம். (௯௱௭௰௧)
—மு. வரதராசன்

ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்ல செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது கேவலமே. (௯௱௭௰௧)
—சாலமன் பாப்பையா

ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும் ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும் (௯௱௭௰௧)
—மு. கருணாநிதி

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.   (௯௱௭௰௨ - 972)
 

எல்லா மக்களுயிர்க்கும் பிறப்பியல்பு சமமானதே; தொழில் வேறுபாட்டால் பெருமை சிறுமை என்னும் சிறப்பியல்புகள் தாம் ஒரு போதும் ஒத்திருப்பதில்லை (௯௱௭௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை. (௯௱௭௰௨)
—மு. வரதராசன்

எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும். (௯௱௭௰௨)
—சாலமன் பாப்பையா

பிறப்பினால் அனைவரும் சமம் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும் (௯௱௭௰௨)
—மு. கருணாநிதி

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.   (௯௱௭௰௩ - 973)
 

செயற்கரிய செய்யாத சிறியவர் உயர்ந்த ஆசனங்களிலே வீற்றிருந்தாலும் பெரியவர் ஆகார்; அச்செயல்களைச் செய்த பெருமையினர் தரையில் நின்றாலும் சிறியவராகார் (௯௱௭௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர். (௯௱௭௰௩)
—மு. வரதராசன்

நல்ல பண்புகள் ( பெருமைகள்) இல்லாதவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு உரியவர் அல்லர்; சிறிய பதவியில் இருந்தாலும் உயர்வான பண்புகளை உடையவர் பெருமை குறைந்தவர் அல்லர். (௯௱௭௰௩)
—சாலமன் பாப்பையா

பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள் (௯௱௭௰௩)
—மு. கருணாநிதி

ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.   (௯௱௭௰௪ - 974)
 

கவராத மனத்தையுடைய மகளிர், நிறையிலே வழுவாமல் தம்மைத் தாமே காத்து ஒழுகுதலைப் போல, பெருமையும், தன்னைத்தான் காப்பவனிடமே உளதாகும் (௯௱௭௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும். (௯௱௭௰௪)
—மு. வரதராசன்

தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு. (௯௱௭௰௪)
—சாலமன் பாப்பையா

தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும் (௯௱௭௰௪)
—மு. கருணாநிதி

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.   (௯௱௭௰௫ - 975)
 

பெருமை உடையவர்கள், தாம் வறுமையான போதும், பிறரால் செய்வதற்கு அருமையான தம் செயல்களை விடாமல் செய்து முடிக்கும் வலிமை கொண்டவராவர் (௯௱௭௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர். (௯௱௭௰௫)
—மு. வரதராசன்

எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர். (௯௱௭௰௫)
—சாலமன் பாப்பையா

அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள் (௯௱௭௰௫)
—மு. கருணாநிதி

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு.   (௯௱௭௰௬ - 976)
 

‘இத்தகையவரான பெரியோரை வழிபட்டு அவரியல்பை நாமும் அடைவோம்’ என்னும் நல்ல நோக்கம், மற்றைச் சிறியார் மனத்தில் ஒரு போதும் உண்டாகாது (௯௱௭௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை. (௯௱௭௰௬)
—மு. வரதராசன்

பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது. (௯௱௭௰௬)
—சாலமன் பாப்பையா

பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை (௯௱௭௰௬)
—மு. கருணாநிதி

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.   (௯௱௭௰௭ - 977)
 

தகுதியான பெரியாரிடம் அமைந்திருக்கும் சிறப்பு, பொருந்தாத சிரியவர்களிடத்தேயும் சேருமானால், தகுதியை விட்டுத் தருக்கினிடத்தே அவரைச் செல்லச் செய்யும் (௯௱௭௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சிறப்பு நிலையும் தனக்கு பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும். (௯௱௭௰௭)
—மு. வரதராசன்

பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம். (௯௱௭௰௭)
—சாலமன் பாப்பையா

சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை (௯௱௭௰௭)
—மு. கருணாநிதி

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.   (௯௱௭௰௮ - 978)
 

பெருமை உடையவர் தருக்கியிராமல் பணிவாகவே நடந்து வருவார்கள்; மற்றைச் சிறுமை உடையவரோ எப்போது தம்மை வியந்து புனைந்து பேசி வருவார்கள் (௯௱௭௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும். (௯௱௭௰௮)
—மு. வரதராசன்

பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர். (௯௱௭௰௮)
—சாலமன் பாப்பையா

பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள் (௯௱௭௰௮)
—மு. கருணாநிதி

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.   (௯௱௭௰௯ - 979)
 

பெருமை குணம் ஆவது, காரணம் உள்ள போதும் தருக்கின்றி அமைந்திருத்தல்; சிறுமைக்குணமாவது பெருமை அற்ற போதும் தருக்கி, முடிவில் நின்றுவிடலாகும் (௯௱௭௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும். (௯௱௭௰௯)
—மு. வரதராசன்

பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லா‌மலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை. (௯௱௭௰௯)
—சாலமன் பாப்பையா

ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும் ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும் (௯௱௭௰௯)
—மு. கருணாநிதி

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.   (௯௱௮௰ - 980)
 

பெருமை உடையவர், பிறரது மானத்தைப் பேசி, அவமானத்தை மறைப்பார்கள்; சிறுமை உடையவரோ, பிறரது குணத்தை மறைத்து, குற்றத்தையே கூறுவார்கள் (௯௱௮௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும் (௯௱௮௰)
—மு. வரதராசன்

பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்‌களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர். (௯௱௮௰)
—சாலமன் பாப்பையா

பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும் பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும் (௯௱௮௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: கானடா  |  தாளம்: ஆதி
பல்லவி:
தோன்றும் குடிப் பெருமை - செய்யும்
தொழிலால் வரும் பெருமை உலகினில்

அநுபல்லவி:
ஈன்றதாய் நாட்டினில் எடுத்த தன் பிறவியில்
ஏற்ற முறவே செயல் ஆற்றும் பெரியோர்களால்

சரணம்:
செல்வமும் கல்வியும் சேர்ந்திடப் பெற்றாலும்
சிறியோர் பெரியோர்க்கிணை சேரார் எக்காலும்
நல்லவர் பெருமையை அறிகிலார் கீழோர்
நாளும் தன்னடக்கத்தால் நன்மை செய்வோர் மேலோர்

பெருமை உடையவர் ஆற்றுவர் ஆற்றின்
அருமை உடைய செயல் எனும் குறள் பாட்டின்
ஒருமை மகளிர்போல் தம்மைத்தாம் காப்பார்
ஒளி ஒருவர்க்குள்ளதாம் வெறுக்கையும் சேர்ப்பார்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22