கொல்லாமை

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.   (௩௱௨௰௧ - 321)
 

அறச்செயல் என்பது யாதென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே; கொல்லும் செயல் பிற தீவினைகளை எல்லாம் கொண்டு வரும் (௩௱௨௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும். (௩௱௨௰௧)
—மு. வரதராசன்

அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும். (௩௱௨௰௧)
—சாலமன் பாப்பையா

எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும் கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும் (௩௱௨௰௧)
—மு. கருணாநிதி

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.   (௩௱௨௰௨ - 322)
 

உள்ள உணவையும் பலரோடும் பங்கிட்டுத் தான் உண்ணும் இயல்பினை மேற்கொள்ளுதல், அறநூலோர் தொகுத்துக் கூறிய அறங்களுள் எல்லாம் மிகச் சிறந்தது! (௩௱௨௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும். (௩௱௨௰௨)
—மு. வரதராசன்

இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும். (௩௱௨௰௨)
—சாலமன் பாப்பையா

இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை (௩௱௨௰௨)
—மு. கருணாநிதி

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.   (௩௱௨௰௩ - 323)
 

ஒப்பற்ற நல்லறம் என்பது எந்த உயிரையும் கொல்லாமல் இருத்தலே ஆகும்; அதற்கு அடுத்ததாக நல்லறம் என்று கருதப்படுவது பொய்யாமை ஆகும் (௩௱௨௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது. (௩௱௨௰௩)
—மு. வரதராசன்

உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை. (௩௱௨௰௩)
—சாலமன் பாப்பையா

அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன (௩௱௨௰௩)
—மு. கருணாநிதி

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.   (௩௱௨௰௪ - 324)
 

நல்ல ஒழுக்கம் எனப்படுவது யாதென்றால், எந்தவொரு உயிரையும் கொலை செய்யாமலிருத்தல் என்பதைக் கருதும் வாழ்க்கை நெறியே ஆகும் (௩௱௨௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும். (௩௱௨௰௪)
—மு. வரதராசன்

நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான். (௩௱௨௰௪)
—சாலமன் பாப்பையா

எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும் (௩௱௨௰௪)
—மு. கருணாநிதி

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.   (௩௱௨௰௫ - 325)
 

வாழ்வின் நிலையாமை கண்டு பற்றுவிட்டவருள் எல்லாம், கொலைப் பாவத்திற்குப் பயந்து, கொல்லாமை நெறியைப் போற்றுபவரே சிறந்தவர்கள் (௩௱௨௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன். (௩௱௨௰௫)
—மு. வரதராசன்

வாழ்க்கை நிலைக்கு அஞ்சி மனத் துறவு கொண்டவருள் எல்லாம் கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவன் உயர்ந்தவன் ஆவான். (௩௱௨௰௫)
—சாலமன் பாப்பையா

உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும்விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார் (௩௱௨௰௫)
—மு. கருணாநிதி

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.   (௩௱௨௰௬ - 326)
 

கொல்லாமை ஆகிய அறத்தையே மேற்கொண்டு நடக்கிறவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைத் தின்னும் கூற்றமும் ஒரு போதும் செல்லாது (௩௱௨௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான். (௩௱௨௰௬)
—மு. வரதராசன்

கொலை செய்யாமல் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று குறுக்கிடாது. (௩௱௨௰௬)
—சாலமன் பாப்பையா

கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும் (௩௱௨௰௬)
—மு. கருணாநிதி

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.   (௩௱௨௰௭ - 327)
 

தன்னுடைய உயிரையே விட்டுவிட நேர்வதானாலும் கூட, தான் மற்றொன்றினது இனிய உயிரைப் போக்கும் பாவச் செயலை எவரும் செய்யக் கூடாது (௩௱௨௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது. (௩௱௨௰௭)
—மு. வரதராசன்

தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா. (௩௱௨௰௭)
—சாலமன் பாப்பையா

தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது (௩௱௨௰௭)
—மு. கருணாநிதி

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.   (௩௱௨௰௮ - 328)
 

கொலை செய்வதனாலே நன்மையாக வந்து சேரும் ஆக்கம் பெரிதானாலும், சான்றோருக்குக் கொன்று வரும் ஆக்கம் இழிவானதே யாகும் (௩௱௨௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும். (௩௱௨௰௮)
—மு. வரதராசன்

வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர். (௩௱௨௰௮)
—சாலமன் பாப்பையா

பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள் (௩௱௨௰௮)
—மு. கருணாநிதி

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.   (௩௱௨௰௯ - 329)
 

கொலையையே செய்தொழிலாக உடைய மக்கள், அதன் இழிவான தன்மையைத் தெரிந்தவரிடத்தில் தாழ்ந்த செயலினராகவே தோன்றுவர் (௩௱௨௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர். (௩௱௨௰௯)
—மு. வரதராசன்

கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார். (௩௱௨௰௯)
—சாலமன் பாப்பையா

பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும் (௩௱௨௰௯)
—மு. கருணாநிதி

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.   (௩௱௩௰ - 330)
 

நோய் மிகுந்த உடலோடு உயிரும் போகாமல் வருந்தித் துன்புறுகின்ற வாழ்வை உடையவர், பிற உயிர்களை அவற்றின் உடலிலிருந்து போக்கியவரேயாவர் (௩௱௩௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர். (௩௱௩௰)
—மு. வரதராசன்

நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர். (௩௱௩௰)
—சாலமன் பாப்பையா

வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர் (௩௱௩௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: சகானா  |  தாளம்: ஆதி
பல்லவி:
கொலை செய்யும் எண்ணமோ கொண்டீர் நீர் ஐயா
கூடுமோ இது சொல்வீர் நல் வாழ்க்கையில்

அநுபல்லவி:
மலையெனவோ உமது வாழ்நாளை மதித்தீர்
மற்ற உயிரைக் கொல்லும்
குற்றமேனோ அடுத்தீர்

சரணம்:
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" என்று மேலோர்
வகுத்த நல்லாறெனப்படுவதேன் மறந்தீர்
வாழ்ந்திடும் உயிர்களை வதைக்கவோ பிறந்தீர்

தன்னுயிர் நீப்பினும் உயிர்க்கொலை தகுமா
தாழ்விலங்காவதில் உமக்குச் சம்மதமா
மன்னுயிர் ஓம்பும் நல்லறம் விளங்கிடுமா
வண்டமிழ்க் குறள்வரி உன் கண்ணிற்படுமா




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22