காலம் அறிதல்

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.   (௪௱௮௰௧ - 481)
 

தன்னை விட வலிமையான கூகையைப் பகல் நேரத்தில் காக்கை போரிட்டு வென்றுவிடும்; அவ்வாறே பகைவரை வெல்லும் வேந்தர்க்கு தகுந்த காலம் வேண்டும் (௪௱௮௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும். (௪௱௮௰௧)
—மு. வரதராசன்

தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம். (௪௱௮௰௧)
—சாலமன் பாப்பையா

பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கைவென்று விடும் எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் (௪௱௮௰௧)
—மு. கருணாநிதி

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.   (௪௱௮௰௨ - 482)
 

காலத்தோடு பொருந்த முயற்சிகளைச் செய்து வருதல், செல்வத்தைத் தம்மை விட்டுப் போகாமல் பிணித்து வைக்கும் கயிறு ஆகும் (௪௱௮௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும். (௪௱௮௰௨)
—மு. வரதராசன்

காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும். (௪௱௮௰௨)
—சாலமன் பாப்பையா

காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும் (௪௱௮௰௨)
—மு. கருணாநிதி

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.   (௪௱௮௰௩ - 483)
 

ஏற்ற கருவிகளோடு, தகுதியான காலத்தையும் அறிந்து செயலைச் செய்தால், செய்வதற்கு அரிய செயல் என்பதும் உண்டோ? (௪௱௮௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ. (௪௱௮௰௩)
—மு. வரதராசன்

செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா? (௪௱௮௰௩)
—சாலமன் பாப்பையா

தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை (௪௱௮௰௩)
—மு. கருணாநிதி

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.   (௪௱௮௰௪ - 484)
 

தகுதியான காலத்தை ஆராய்ந்து, ஏற்ற இடத்திலேயும் செய்தால், உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும் (௪௱௮௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும். (௪௱௮௰௪)
—மு. வரதராசன்

ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும். (௪௱௮௰௪)
—சாலமன் பாப்பையா

உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும் (௪௱௮௰௪)
—மு. கருணாநிதி

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.   (௪௱௮௰௫ - 485)
 

உலகை வெற்றி கொள்ளக் கருதுகின்றவர்கள், அதற்கு ஏற்ற காலத்தை எதிர்பார்த்து, அதுவரையும் மனந்தளராமல் காத்திருப்பார்கள் (௪௱௮௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர். (௪௱௮௰௫)
—மு. வரதராசன்

பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர். (௪௱௮௰௫)
—சாலமன் பாப்பையா

கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள் (௪௱௮௰௫)
—மு. கருணாநிதி

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.   (௪௱௮௰௬ - 486)
 

ஊக்கம் உடையவன் ஒருவன் பகைவர் மேல் போருக்குச் செல்லாமல் ஒடுங்கியிருப்பது, போரிடும் ஆட்டுக்கடா பகையைத் தாக்குவதற்குப் பின் வாங்கும் தன்மையது (௪௱௮௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது. (௪௱௮௰௬)
—மு. வரதராசன்

ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும். (௪௱௮௰௬)
—சாலமன் பாப்பையா

கொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும் (௪௱௮௰௬)
—மு. கருணாநிதி

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.   (௪௱௮௰௭ - 487)
 

அறிவுடையவர், பகைவர் கெடுதல் செய்ய அந்தக்கணமே தன் சினத்தை வெளியே காட்டார்கள்; தகுந்த காலத்தை எதிர்பார்த்து உள்ளத்தில் மட்டுமே சினம் கொள்வார்கள் (௪௱௮௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார். (௪௱௮௰௭)
—மு. வரதராசன்

தம்பகைவர் அடாது செய்தால் அவர் அறியத் தம் பகைமையை அறிவுடையவர், விரைந்து வெளியே காட்டமாட்டார், ஆனால், ஏற்ற காலம் நோக்கிச் சினத்தை மனத்திற்குள் வைத்திருப்பர். (௪௱௮௰௭)
—சாலமன் பாப்பையா

பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல் (௪௱௮௰௭)
—மு. கருணாநிதி

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.   (௪௱௮௰௮ - 488)
 

தமக்குச் சாதகமான காலம் வரும் வரையிலும் பகைவரைக் கண்டால் பணிந்து போக, அவர்கட்கு முடிவுகாலம் வரும்போது அவர்கள் தலை கீழே விழும் (௪௱௮௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும். (௪௱௮௰௮)
—மு. வரதராசன்

பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர். (௪௱௮௰௮)
—சாலமன் பாப்பையா

பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும் (௪௱௮௰௮)
—மு. கருணாநிதி

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.   (௪௱௮௰௯ - 489)
 

கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்த்த போது, அப்போதே, நாம் செய்வதற்கு அரியவான செயல்களைச் செய்து வெற்றி பெற வேண்டும் (௪௱௮௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும். (௪௱௮௰௯)
—மு. வரதராசன்

அடைவதற்கு அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க. (௪௱௮௰௯)
—சாலமன் பாப்பையா

கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும் (௪௱௮௰௯)
—மு. கருணாநிதி

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.   (௪௱௯௰ - 490)
 

காலத்தை எதிர்பார்க்க வேண்டிய பருவத்தில், கொக்கைப் போல இருந்து; காலம் வாய்த்த போதில் கொக்கு மீனைக் குத்தினாற் போலத் தவறாமல் செய்து முடிக்க வேண்டும் (௪௱௯௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும். (௪௱௯௰)
—மு. வரதராசன்

ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி. (௪௱௯௰)
—சாலமன் பாப்பையா

காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும் காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும் (௪௱௯௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: ஸ்ரீ ரஞ்சனி  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
காலம் அறிதல் மிகவும் நல்லது - பயன்
காண வல்லது

அநுபல்லவி:
மூலப் பொருளை யறிந்து கொள்ள
முன்னேறியே பகையை வெல்ல

சரணம்:
"கொக் கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்" தெனவே குறள்
பக்கத் துணையாகும் பருவத்தில் சேர்க்கும்
பாங்குறும் செல்வத்தைக் கட்டியே காக்கும்

கால வெள்ளம் தன்னைக் கண்டும் கலங்காது
கல்லணையாய் நெஞ்சம் தேக்கிடும் போது
ஞாலம் கருதினும் வந்து கை கூடும்
நாளும் தன்னாட்சியை நல்லவர் நாடும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22