இராகம்: சிந்துபைரவி | தாளம்: கண்ட ஆதி கண்ணிகள்:தெரிந்து தெளித்தலே நன்று - நாட்டின்
தேவைக்கு யார்மிகத் தக்கவர் என்று
விரிந்துள்ள மக்களின் தொகுதி - நன்மை
வேண்டியே பொறுப்பேற்க வருவோரின் தகுதி
ஆட்டுக்குக் காவல் ஓநாயா - கிளி
அன்புக்குப் பாலூட்டப் பூனைதான் தாயா
கேட்டுக்கு வழி தேடலாமா - நம்
கிளை யென்றே மாற்றானைக் கொண்டாடலாமா
பணமே படைத்தோன் என்றாலும் - அன்றி
படித்தவன் அன்புள்ள நண்பன் நின்றாலும்
குணம் நாடிக் குற்றமும் நாடி - அவற்றுள்
மிகை நாடி மிக்க கொள்வோம் குறள் நாடி
பழிக்கஞ்சி நாணிடும் தன்மை - பொருள்
பாவையர் மயக்கிலும் வீழாத வன்மை
அழியினும் உயிருக் கஞ்சாமை - உள்ள
அறங்கூறும் வினையாளன் ஆட்சிக்கு மேன்மை
பொன்னை உரைப்பது கல்லே - மனிதன்
தன்னை உரைப்பதும் அவன் செயல் சொல்லே
முன்னை ஆராய்ந்தவ னிடமே - ஐயம்
மோதாமல் நம்பிக்கை கொள்வதும் நலமே