வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.   (௨௱௯௰௧ - 291)
 

‘வாய்மை’ என்று சொல்லப்படுவது யாது என்றால், அது பிறருக்குத் தீமை இல்லாதபடி யாதொரு சொல்லையும் எப்போதும் சொல்லுதல் ஆகும் (௨௱௯௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும். (௨௱௯௰௧)
—மு. வரதராசன்

உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும். (௨௱௯௰௧)
—சாலமன் பாப்பையா

பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும் (௨௱௯௰௧)
—மு. கருணாநிதி

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.   (௨௱௯௰௨ - 292)
 

குற்றமே இல்லாத நன்மையைத் தருவது என்றால், பொய்யான சொற்களும் கூட வாய்மையின் இடத்தில் வைத்துச் சிறப்பாகக் கருதத் தகுந்தவை ஆகும் (௨௱௯௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும். (௨௱௯௰௨)
—மு. வரதராசன்

குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம். (௨௱௯௰௨)
—சாலமன் பாப்பையா

குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும் (௨௱௯௰௨)
—மு. கருணாநிதி

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.   (௨௱௯௰௩ - 293)
 

ஒருவன், தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைப் பற்றிப் பொய்த்துப் பேசாதிருப்பானாக; அப்படி பொய்த்த பின்னர், அவன் நெஞ்சமே அவனைச் சுடும் (௨௱௯௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும். (௨௱௯௰௩)
—மு. வரதராசன்

பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும். (௨௱௯௰௩)
—சாலமன் பாப்பையா

மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும் (௨௱௯௰௩)
—மு. கருணாநிதி

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.   (௨௱௯௰௪ - 294)
 

உள்ளத்தால் பொய்யாது நடந்து வருவானாயின், அவன் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் இருப்பவன் ஆகும் சிறந்த உயர்வைப் பெறுவான் (௨௱௯௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான். (௨௱௯௰௪)
—மு. வரதராசன்

உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான். (௨௱௯௰௪)
—சாலமன் பாப்பையா

மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள் (௨௱௯௰௪)
—மு. கருணாநிதி

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.   (௨௱௯௰௫ - 295)
 

மனத்தோடு பொருந்திய வாய்மையையே ஒருவன் சொல்லி வருவானானால், அவன் தவத்தோடு தானமும் செய்பவரினும் மிகவும் சிறந்தவன் ஆவான் (௨௱௯௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன். (௨௱௯௰௫)
—மு. வரதராசன்

உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான். (௨௱௯௰௫)
—சாலமன் பாப்பையா

உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள் (௨௱௯௰௫)
—மு. கருணாநிதி

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.   (௨௱௯௰௬ - 296)
 

பொய்யாமை போலப் புகழ் தருவது ஏதும் இல்லை; அதில் தளராமல் உறுதியாயிருப்பது ஒருவனுக்கு எல்லா அறத்தின் சிறப்பையும் தரும் (௨௱௯௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும். (௨௱௯௰௬)
—மு. வரதராசன்

பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும். (௨௱௯௰௬)
—சாலமன் பாப்பையா

பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும் (௨௱௯௰௬)
—மு. கருணாநிதி

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.   (௨௱௯௰௭ - 297)
 

பொய்யாமை என்னும் அறத்தையே பொய்யாகாது தொடர்ந்து செய்து வந்தால், பிற அறச்செயல்கள் ஏதும் செய்யாத போதிலும் கூட, அது நன்மையைத் தரும் (௨௱௯௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும். (௨௱௯௰௭)
—மு. வரதராசன்

பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும். (௨௱௯௰௭)
—சாலமன் பாப்பையா

செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும் (௨௱௯௰௭)
—மு. கருணாநிதி

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.   (௨௱௯௰௮ - 298)
 

புறவுடலின் தூய்மை நீராலே ஏற்படும்; உள்ளத்தின் தூய்மையானது, ஒருவன் வாய் திறந்து சொல்லும் அவனது வாய்மையாலே அடையப்படும் (௨௱௯௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும். (௨௱௯௰௮)
—மு. வரதராசன்

உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும். (௨௱௯௰௮)
—சாலமன் பாப்பையா

நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும் (௨௱௯௰௮)
—மு. கருணாநிதி

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.   (௨௱௯௰௯ - 299)
 

புறவிருளைப் போக்கும் எல்லா விளக்கும் சிறந்த விளக்கு ஆகாது; சான்றோர்க்குப் பொய்யாமையாகிய விளக்கே அவற்றினும் சிறந்த விளக்காகத் தோன்றும் (௨௱௯௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும். (௨௱௯௰௯)
—மு. வரதராசன்

உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும். (௨௱௯௰௯)
—சாலமன் பாப்பையா

புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும் (௨௱௯௰௯)
—மு. கருணாநிதி

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.   (௩௱ - 300)
 

யாம் மெய்ப்பொருளாக அறிந்தவற்றுள் எல்லாம், வாய்மையினும் எத்தன்மையாலும் சிறப்பான பொருள் இந்த உலகத்திலே வேறு எதுவும் இல்லை (௩௱)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை. (௩௱)
—மு. வரதராசன்

சிறந்தவை என்று நான் கண்டு அறிந்த நூல்களுள் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு ஒன்றும் இல்லை. (௩௱)
—சாலமன் பாப்பையா

வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும் (௩௱)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: காமவர்த்தினி  |  தாளம்: ஆதி
பல்லவி:
வாய்மையைக் காப்பதே மாண்புடைமை - நம்
வண்டமிழ்க் குறள் சொல்லும்
இதன் அருமை பெருமை

அநுபல்லவி:
தூய்மையாய் உள்ளத்தைத் துலக்கிடும் வாய்மை
தோன்றும் நல்வாழ்க்கையிலே
சொல்லும் செயலுமாக

சரணம்:
பட்டம் பதவி பொருள் கிட்டும் என்றாலும்
பைம்பொன்னணி இழையார் பக்கம் வந்தாலும்
சுட்டுக்கொல்லும் துப்பாக்கி முன்பு நின்றாலும்
துன்பத்திற்கஞ்சாமலே துணிவும் கனிவும் கொள்ளும்

"பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்றென" முழங்குவோம்
பொய்யாமை யன்னதொர் புகழ்ச்செல்வம் உண்டோ
பொருந்தும் அறங்களெல்லாம் தருவதும் ஈதன்றோ




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22