தீ நட்பு

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.   (௮௱௰௧ - 811)
 

நம்மை அள்ளிப் பருகுவர்போல அன்பு காட்டினாலும், நல்ல பண்பில்லாத தீயோரது நட்பானது, நாளுக்குநாள் பெருகுவதை விடக் குறைந்து போவதே இனியது (௮௱௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது. (௮௱௰௧)
—மு. வரதராசன்

உயிரால் உருகுவார்போல் நடிக்கும், உள்ளத்துள் நல்ல பண்பு இல்லாதவரின் நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது. (௮௱௰௧)
—சாலமன் பாப்பையா

நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது (௮௱௰௧)
—மு. கருணாநிதி

உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.   (௮௱௰௨ - 812)
 

செல்வம் உண்டானால் நட்புச் செய்தும், அது போனால் விலகியும் போகின்ற, ஒத்த தன்மையில்லாத தீயோரின் நட்பினைப் பெற்றாலும், இழந்தாலும் ஒன்றுதான். (௮௱௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தமக்கு பயன் உள்ள போது நட்பு செய்து பயன் இல்லாத போது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன பயன், இழந்தாலும் என்ன பயன். (௮௱௰௨)
—மு. வரதராசன்

தமக்குப் பயனிருந்தால் நட்புக் கொண்டும், பயன் இல்லை என்றால் நட்பை விலக்கியும் வாழ்வதில் தமக்கு இணை இல்லாதவராய் இருப்பாரின் நட்பைப் பெற்றென்ன இழந்தென்ன? (௮௱௰௨)
—சாலமன் பாப்பையா

தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்துவிட்டு பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு, இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன? (௮௱௰௨)
—மு. கருணாநிதி

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.   (௮௱௰௩ - 813)
 

தாம் அடைவதையே சீர்தூக்கிப் பார்த்திருக்கும் நட்பும், தாம் பெறுவதைக் கொள்ளும் விலைமகளிரும், நம் பொருளைக் களவாடும் கள்வரும், ஒரே தன்மையினரே! (௮௱௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர். (௮௱௰௩)
—மு. வரதராசன்

இவரிடம் நட்புக் கொள்வதால் தமக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணிப் பார்ப்பவரின் நட்பும், தமக்குத் தரும் கூலியை ஏற்றுக் கொள்ளும் பாலியல் தொழிலாளரும் திருடர்களும் ஒருவருக்கொருவர் சமமானவர்களே. (௮௱௰௩)
—சாலமன் பாப்பையா

பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும் ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள் (௮௱௰௩)
—மு. கருணாநிதி

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.   (௮௱௰௪ - 814)
 

போர்க்களத்தின் இடையில் நண்பரை விட்டுவிட்டுத் தாம் ஓடிப்போய்விடும், கல்லாத விலங்கு போன்றவரின் நட்பை விடத் தனிமையே மிகவும் சிறந்தது (௮௱௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

போர் வந்த போது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவை விட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது. (௮௱௰௪)
—மு. வரதராசன்

போர்க்களத்தே நம்மை வீழ்த்திவிட்டுப் போய்விடும் கல்வியற்ற குதிரையைப் போன்றவரின் நட்பைக் காட்டிலும் தனிமையாக இருப்பதே முதன்மையானது. (௮௱௰௪)
—சாலமன் பாப்பையா

போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும் (௮௱௰௪)
—மு. கருணாநிதி

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.   (௮௱௰௫ - 815)
 

நமக்குத் துன்பம் வந்த போது உதவி செய்து காப்பாற்றுவதற்கு வராத சிறுமையாளரது புன்மையான நட்பை அடைதலைவிட, அடையாததே நன்மையாகும் (௮௱௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும். (௮௱௰௫)
—மு. வரதராசன்

நாம் பல வகையில் உதவி செய்தாலும் நமக்குப் பாதுகாப்பாக இராத அற்பர்களின் நட்பு, இருப்பதிலும் இல்லாதிருப்பதே நல்லது. (௮௱௰௫)
—சாலமன் பாப்பையா

கீழ்மக்களின் நட்பு, பாதுகாப்பாக அமையாத தீயதன்மை கொண்டது என்பதனால், அவர்களுடன் நட்பு ஏற்படுவதைவிட, ஏற்படாமல் இருப்பதே நலம் (௮௱௰௫)
—மு. கருணாநிதி

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.   (௮௱௰௬ - 816)
 

பேதையாளனது மிகவும் செறிவான நட்பைக் காட்டிலும் அறிவுடையவர்களின் தொடர்பு இல்லாமல் இருப்பது, ஒருவனுக்கு கோடி நன்மை தருவதாக விளங்கும் (௮௱௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும். (௮௱௰௬)
—மு. வரதராசன்

அறிவற்றவனின் மிக நெருக்கமான நட்பைக் காட்டிலும் அறிவுடையார்களின் பகை, கோடி நன்மையாம். (௮௱௰௬)
—சாலமன் பாப்பையா

அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும் (௮௱௰௬)
—மு. கருணாநிதி

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.   (௮௱௰௭ - 817)
 

வெற்றுரை பேசிச் சிரித்து மகிழ்வதற்கு மட்டுமே பயன்படும் தீயோரின் நட்பைக் காட்டிலும், பகைவராலே, பத்துக் கோடிக்கும் மேலான நன்மை நமக்குக் கிடைக்கும் (௮௱௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும். (௮௱௰௭)
—மு. வரதராசன்

சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாம். (௮௱௰௭)
—சாலமன் பாப்பையா

சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும் (௮௱௰௭)
—மு. கருணாநிதி

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.   (௮௱௰௮ - 818)
 

நம்மாலே செய்து முடிக்கக் கூடிய செயலையும் செய்யவிடாமல், வீண்பொழுது போக்குபவரது நட்பு உறவை, அவரோடு பேசுவதைக் கைவிட்டு, நீக்கிவிட வேண்டும் (௮௱௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முடியும் செயலையும் முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும். (௮௱௰௮)
—மு. வரதராசன்

தம்மால் செய்யக்கூடிய உதவியையும் செய்ய முடியாதவர் போல் நடித்துச் செய்யாமல் விடுபவரின் நட்பை அவரிடம் சொல்லாமலேயே விட்டுவிடுக. (௮௱௰௮)
—சாலமன் பாப்பையா

நிறைவேற்றக் கூடிய செயலை, நிறைவேற்ற முடியாமல் கெடுப்பவரின் உறவை, அவருக்குத் தெரியாமலேயே மெல்ல மெல்ல விட்டு விட வேண்டும் (௮௱௰௮)
—மு. கருணாநிதி

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.   (௮௱௰௯ - 819)
 

தம் செயல்கள் வேறாகவும், தம் பேச்சுக்கள் வேறாகவும் நடப்பவரின் தொடர்பானது, நனவில் மட்டுமே அல்லாமல், கனவிலும் கூடத் துன்பமானதாகும் (௮௱௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும். (௮௱௰௯)
—மு. வரதராசன்

சொல் ஒன்று, செயல் வேறாக இருப்பவரின் நட்பு கனவிலும் கூடத் துன்பமானதாகும். (௮௱௰௯)
—சாலமன் பாப்பையா

சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பு கனவிலேகூடத் துன்பத்தைத்தான் கொடுக்கும் (௮௱௰௯)
—மு. கருணாநிதி

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.   (௮௱௨௰ - 820)
 

வீட்டிலுள்ள போது நட்புரிமை பேசிவிட்டு, பொதுமன்றிலே பழித்துப் பேசுபவரின் தொடர்பு, எந்தச் சிறிய அளவுக்கேனும், நம்மை அடையாதபடி காத்தல் வேண்டும் (௮௱௨௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும். (௮௱௨௰)
—மு. வரதராசன்

நம் வீட்டுக்குள் வந்து நட்புக் கொண்டாடிப் பலர் இருக்கும் சபையில் நம்மைப் பழிப்பவரின் தொடர்பைச் சிறிதளவும் சேரவிட வேண்டா. (௮௱௨௰)
—சாலமன் பாப்பையா

தனியாகச் சிந்திக்கும் போத இனிமையாகப் பழகிவிட்டுப் பொது மன்றத்தில் பழித்துப் பேசுபவரின் நட்பு தம்மை அணுகாமல் விலக்கிக் கொள்ளப்படவேண்டும் (௮௱௨௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: மாண்டு  |  தாளம்: ஆதி
பல்லவி:
ஈரமில்லாதவரின் தீ நட்பு
இருந்தென்ன போ யென்ன
அவரால் பெறும் சிறப்பு

அநுபல்லவி:
ஓரத்தில் காத்திருக்கும் நீர்ப் பரவைக் கூட்டம்
உள்ளவை தீர்ந்த பின்னே எடுக்குமே ஓட்டம்

சரணம்:
படுகளத்தில் விட்டோடும் குதிரையைப் போலும்
பகட்டும் விலைமகளிர் கள்வரைப் போலும்
கெடுமிடத்தில் தவிக்க விடுமிவர்கள் உறவே
கிளைக்க விடாமல் செய்யவேண்டும் வேர் அறவே

பொய் நகை வகையாரின் நட்பினும் பகையே
புரிந்திடும் நன்மை பத்துக் கோடியாம் தொகையே
செய்தே மஞ்சாராச் சிறியவர் புன் கேண்மை
எய்தலின் எய்தாமை நன்றெனும் குறள் மேன்மை




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22