பொழுதுகண்டு இரங்கல்

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.   (௲௨௱௨௰௧ - 1221)
 

பொழுதே! நீ மாலைக் காலமே அல்லை; காதலரோடு கூடியிருந்து, பிறகு பிரிவால் கலங்கியிருக்கும் மகளிரின் உயிரையுண்ணும் முடிவு காலமே ஆவாய்! (௲௨௱௨௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்! (௲௨௱௨௰௧)
—மு. வரதராசன்

பொழுதே! நீ வாழ்க! முன்பெல்லாம் வருவாயே அந்த மாலையா நீ என்றால் இல்லை; திருமணம் செய்து கொண்ட பெண்களின் உயிரை வாங்கும் பொழுது நீ. (௲௨௱௨௰௧)
—சாலமன் பாப்பையா

நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து! (௲௨௱௨௰௧)
—மு. கருணாநிதி

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.   (௲௨௱௨௰௨ - 1222)
 

மயங்கிய மாலைப்பொழுதே! எம்மைப்போலவே நீயும் துன்பமுற்றுத் தோன்றுகிறாயே! நின் துணையும் என் காதலரைப் போலவே இரக்கம் இல்லாததோ! (௲௨௱௨௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மயங்கிய மாலைப்‌பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்‌றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ? (௲௨௱௨௰௨)
—மு. வரதராசன்

பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ? (௲௨௱௨௰௨)
—சாலமன் பாப்பையா

மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ? (௲௨௱௨௰௨)
—மு. கருணாநிதி

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.   (௲௨௱௨௰௩ - 1223)
 

பனி தோன்றிப் பசந்துவந்த மாலைக் காலமானது, எனக்கு வருத்தம் தோன்றி மென்மேலும் வளரும்படியாகவே இப்போது வருகின்றது போலும்! (௲௨௱௨௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது. (௲௨௱௨௰௩)
—மு. வரதராசன்

அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது எனக்குச் சாவு வரும்படி தோன்றி, அதற்கான துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது. (௲௨௱௨௰௩)
—சாலமன் பாப்பையா

பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது (௲௨௱௨௰௩)
—மு. கருணாநிதி

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.   (௲௨௱௨௰௪ - 1224)
 

காதலர் அருகே இல்லாத போது, கொலை செய்யும் இடத்திலே ஆறலைப்பார் வருவதைப் போல, இம் மாலையும் என் உயிரைக் கொல்வதற்காகவே வருகின்றதே! (௲௨௱௨௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது. (௲௨௱௨௰௪)
—மு. வரதராசன்

அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது. (௲௨௱௨௰௪)
—சாலமன் பாப்பையா

காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது (௲௨௱௨௰௪)
—மு. கருணாநிதி

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.   (௲௨௱௨௰௫ - 1225)
 

காலைப் பொழுதுக்கு யான் செய்த நன்மைதான் யாது? என்னை இப்படிப் பெரிதும் வருத்துகின்ற மாலைப் பொழுதுக்கு யான் செய்த தீமையும் யாதோ? (௲௨௱௨௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன? (௲௨௱௨௰௫)
—மு. வரதராசன்

காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்கு நான் செய்த தீமை என்ன? (௲௨௱௨௰௫)
—சாலமன் பாப்பையா

மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் ``காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன?'' என்று புலம்புகிறது (௲௨௱௨௰௫)
—மு. கருணாநிதி

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.   (௲௨௱௨௰௬ - 1226)
 

மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்யும் என்பதை, காதலர் என்னை விட்டுப் பிரியாமல் கூடியிருந்த அந்தக் காலத்தில் யான் அறியவே இல்லையே! (௲௨௱௨௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை. (௲௨௱௨௰௬)
—மு. வரதராசன்

முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை. (௲௨௱௨௰௬)
—சாலமன் பாப்பையா

மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை (௲௨௱௨௰௬)
—மு. கருணாநிதி

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.   (௲௨௱௨௰௭ - 1227)
 

காலையிலே அரும்பாகித் தோன்றி, பகலெல்லாம் பேரரும்பாக வளர்ந்து, மாலைப் பொழுதிலே மலர்ந்து மலராக விரிகின்றது (௲௨௱௨௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது. (௲௨௱௨௰௭)
—மு. வரதராசன்

காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது. (௲௨௱௨௰௭)
—சாலமன் பாப்பையா

காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும் (௲௨௱௨௰௭)
—மு. கருணாநிதி

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.   (௲௨௱௨௰௮ - 1228)
 

நெருப்பைப் போலச் சுடுகின்ற மாலைப் பொழுதுக்குத் தூதாகி, ஆயனுடைய புல்லாங்குழலின் இசையும், என்னைக் கொல்லும் படையாக வருகின்றதே! (௲௨௱௨௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது. (௲௨௱௨௰௮)
—மு. வரதராசன்

முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது. (௲௨௱௨௰௮)
—சாலமன் பாப்பையா

காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது (௲௨௱௨௰௮)
—மு. கருணாநிதி

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.   (௲௨௱௨௰௯ - 1229)
 

அறிவு மயங்கும் படியாக மாலைப்பொழுது வந்து படர்கின்ற இப்பொழுதிலே, இந்த ஊரும் மயங்கியதாய், என்னைப் போலத் துன்பத்தை அடையும் (௲௨௱௨௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும். (௲௨௱௨௰௯)
—மு. வரதராசன்

இதற்கு முன்பு நான் மட்டும்தான் மயங்கித் துன்புற்றேன்; இனிப் பார்த்தவர் எல்லாம் மதி மயங்கும்படி மாலைப் பொழுது வரும்போது இந்த ஊரே மயங்கித் துன்பப்படும். (௲௨௱௨௰௯)
—சாலமன் பாப்பையா

என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது (௲௨௱௨௰௯)
—மு. கருணாநிதி

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.   (௲௨௱௩௰ - 1230)
 

பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைத்து, பிரிவுத் துன்பத்தாலே போகாமல் நின்ற என் உயிரானது, இம் மாலைப் பொழுதில் நலிவுற்று மாய்கின்றதே! (௲௨௱௩௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது. (௲௨௱௩௰)
—மு. வரதராசன்

அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது. (௲௨௱௩௰)
—சாலமன் பாப்பையா

பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது (௲௨௱௩௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: மகாநந்தி  |  தாளம்: ஆதி
பல்லவி:
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலை நீ வாழி பொழுது

அநுபல்லவி:
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந்நோய் வந்தென்னை வருத்துதே

சரணம்:
வேதனை செய்யும் இந்த மாலைக்குத் தீங்கா செய்தேன்
விரும்பி வரும் காலைக்கு என்னதான் நன்மை செய்தேன்
காதலர் இல்வழி மாலை கொலைக் களத்து
ஏதிலார் போல வரும் என் நெஞ்சில் அலைபாயும்

நிழலும் நீரும் இல்லாத பாலையாய்த் தோணுதே
நெஞ்சில் இரக்கமிலார் செய்கையும் போன்றதே
அழல் போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல் போலும் கொல்லும் படை எனும் குறள் மெய்யானதே




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22