பெரியாரைப் பிழையாமை

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.   (௮௱௯௰௧ - 891)
 

மேற்கொண்ட செயல்களை முடிக்கவல்லவரின் ஆற்றல்களை ஒதுக்கக் கூடாது; அதுவே தீங்கு வராமல் காப்பவரின் காவல்களுள் எல்லாம், மிகச் சிறந்தது ஆகும் (௮௱௯௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது. (௮௱௯௰௧)
—மு. வரதராசன்

எடுத்துக் கொண்ட செயல்களை இனிது முடிப்பவரின் வலிமைகளை அவமதியாமல் இருப்பது, தமக்குத் தீங்கு ஏதும் வராமல் காப்பவர் செய்யும் காவல்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது. (௮௱௯௰௧)
—சாலமன் பாப்பையா

ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும் (௮௱௯௰௧)
—மு. கருணாநிதி

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.   (௮௱௯௰௨ - 892)
 

பெரியோர்களை நன்கு மதிக்காமல் நடந்தால், அப்பெரியோரால் அவருக்கு எவ்விடத்தும் நீங்காத துன்பங்களை அது கொடுத்துவிடும் (௮௱௯௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும். (௮௱௯௰௨)
—மு. வரதராசன்

பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும். (௮௱௯௰௨)
—சாலமன் பாப்பையா

பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும் (௮௱௯௰௨)
—மு. கருணாநிதி

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.   (௮௱௯௰௩ - 893)
 

தான் விரும்பிய பொழுதிலேயே பகையரசரைக் கொல்லவல்ல வேந்தரிடத்தே, தான் கெடுதலை வேண்டுபவன், நீதி நூலைக் கடந்து பிழைகளைச் செய்வானாக! (௮௱௯௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்து முடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலேச் செய்யலாம். (௮௱௯௰௩)
—மு. வரதராசன்

ஒருவன் தான் அழிய எண்ணினால் பிறரை அழிப்பதைச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர்களிடம், நீதிநூல்கள் சொல்லும் வழிகளையும் எண்ணிப் பாராமல் பிழை செய்க. (௮௱௯௰௩)
—சாலமன் பாப்பையா

ஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை யார் பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம் (௮௱௯௰௩)
—மு. கருணாநிதி

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.   (௮௱௯௰௪ - 894)
 

மூவகை ஆற்றலும் உள்ளவருக்கு, அவை இல்லாதவர் துன்பத்தைச் செய்தல், தானே வரக்கூடிய கூற்றுவனை முற்பட வருமாறு, கைகாட்டி அழைப்பதைப் போலாகும் (௮௱௯௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது. (௮௱௯௰௪)
—மு. வரதராசன்

அறிவு, செல்வம், படை ஆகிய மூன்று வகை ஆற்றலும் உடையவர்க்கு, அவை இல்லாதவர் முதலில் தீமை செய்வது தாமே எமனைக் கைநீட்டி அழைப்பதைப் போன்றது. (௮௱௯௰௪)
—சாலமன் பாப்பையா

எந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன், சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களே தங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்றுதான் பொருள் (௮௱௯௰௪)
—மு. கருணாநிதி

யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.   (௮௱௯௰௫ - 895)
 

பகைவருக்கு வெய்யதான வலி மிகுந்த, வேந்தனால் தாக்கப்பட்ட அரசர், தப்பிப் பிழைத்து எவ்விடத்துச் சென்றாலும், எங்கும் உயிர்பிழைத்திருக்கவே மாட்டார்கள் (௮௱௯௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மிக்க வலிமை உள்ள அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்க்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது. (௮௱௯௰௫)
—மு. வரதராசன்

பகைவர்க்குக் கடும் வலிமை காட்டும் ஆட்சியாளரால் கோபிக்கப்பட்டவர், ஆட்சியாளருக்கு அஞ்சி, எங்கே போனாலும் எங்கும் வாழ முடியாது. (௮௱௯௰௫)
—சாலமன் பாப்பையா

மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ முடியாது (௮௱௯௰௫)
—மு. கருணாநிதி

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.   (௮௱௯௰௬ - 896)
 

காட்டினுள் சென்றவன், காட்டுத் தீயால் சுடப்பட்டாலும், ஒருவழியாக உயிர்பிழைத்து எவ்விடத்துச் சென்றாலும், எங்கும் உயிர் பிழைத்திருக்கவே மாட்டார்கள் (௮௱௯௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பி பிழைக்க முடியாது. (௮௱௯௰௬)
—மு. வரதராசன்

தீயால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவேமாட்டார். (௮௱௯௰௬)
—சாலமன் பாப்பையா

நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது (௮௱௯௰௬)
—மு. கருணாநிதி

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.   (௮௱௯௰௭ - 897)
 

சாபமிடுதலும் அருள்செய்தலும் ஆகிய தகுதிகளால் சிறந்த தவத்தோர் சினங்கொண்டால், பலவகையாலும் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும் அழிந்து விடும் (௮௱௯௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தகுதியால் சிறப்புற்ற பெரியவர் ஒருவனை வெகுண்டால் அவனுக்கு பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும் பெரும் பொருளும் இருந்தும் என்ன பயன். (௮௱௯௰௭)
—மு. வரதராசன்

குணங்களால் சிறந்த பெரியவர்கள் சினங்கொள்வார் என்றால், பலத்தால் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும் எதற்கு ஆகும்? (௮௱௯௰௭)
—சாலமன் பாப்பையா

பெருஞ்செல்வம் குவித்துக்கொண்டு என்னதான் வகைவகையான வாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும், தகுதி வாய்ந்த பெரியோரின் கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும் (௮௱௯௰௭)
—மு. கருணாநிதி

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.   (௮௱௯௰௮ - 898)
 

குன்றுபோலத் தவநெறியால் உயர்ந்தவர்கள் கெடவேண்டும் என்று நினைப்பார்களானால், தம் குடியோடு நிலைபெற்றார் போன்ற பெருஞ்செல்வரும், மாய்வார்கள் (௮௱௯௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மலை போன்ற பெரியவர் கெட நினைத்தால். உலகில் அழியாமல் நிலைபெற்றாற் போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர். (௮௱௯௰௮)
—மு. வரதராசன்

மலை ஒத்த ஆற்றல் உடைய பெரியவர், ஒருவரை அழிக்க எண்ணிவிட்டால், அவர் எண்ணிய அளவிலேயே இப்பூமியில் நிலைபெற்று வாழ்பவர் போன்றோரும், தம் குடியோடும்கூட அழிவர். (௮௱௯௰௮)
—சாலமன் பாப்பையா

மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய் விடுவார்கள் (௮௱௯௰௮)
—மு. கருணாநிதி

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.   (௮௱௯௰௯ - 899)
 

உயர்ந்த விரத வாழ்வைக் கொண்டவர்கள் சீற்றம் அடைந்தால், இந்திரன் போன்ற வாழ்க்கையுடையவனும், அப்போதே அழிந்து போய்விடுவான் (௮௱௯௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான். (௮௱௯௰௯)
—மு. வரதராசன்

உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான். (௮௱௯௰௯)
—சாலமன் பாப்பையா

உயர்ந்த கொள்கை உறுதி கொடண்வர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும் (௮௱௯௰௯)
—மு. கருணாநிதி

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.   (௯௱ - 900)
 

மிகவும் பெரிய தவத்தை உடையவர் சினங்கொண்டாரானால், மிகப்பெரிய சார்பு உடையவரானாலும் உய்ய மாட்டார்கள்; அப்போதே அழிவார்கள் (௯௱)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால் அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பி பிழைக்க முடியாது. (௯௱)
—மு. வரதராசன்

மிகச் சிறந்த சீர்களை உடையவர் சினந்தால் மிகப்பெரும் பலங்களைச் சார்வாக உடையவரே என்றாலும் தப்பமாட்டார். (௯௱)
—சாலமன் பாப்பையா

என்னதான் எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது (௯௱)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: சிந்துபைரவி  |  தாளம்: ஆதி
பல்லவி:
பெரியாரைப் பிழை கூறித் திரியாதே - அது
பேரா இடும்பை தரும் மறவாதே

அநுபல்லவி:
எரியால் சுடப்படினும் உயிர் தப்பக் கூடும்
பெரியார் சினத்தீப் பட்டால் வாழ்வே கண்மூடும்

சரணம்:
குகையில் தூங்கும் சிங்கத்தை எழுப்பி விடாதே
குன்றன்னவர்க்கே எதிர் மாறுபடாதே
வகை மாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாகும்
தகைமாண்ட தக்கார் செறின் தன் குடியுடன் மாயும்

ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னாசெயல் நேர்வது
கூற்றுவனைக் கைகாட்டி அழைப்பதைப் போன்றது
"ஆற்றுவார் ஆற்றல் இகழாமை என்றும் போற்றிடு
போற்றலுள் எல்லாம் தலை" எனும் குறள் பாட்டிது




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22