பிறனில் விழையாமை

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.   (௱௪௰௧ - 141)
 

பிறனுக்கு உரியவளான ஒருத்தியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்து அறமும் பொருளும் ஆராய்ந்தவரிடத்து இருப்பது இல்லை (௱௪௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை. (௱௪௰௧)
—மு. வரதராசன்

இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை. (௱௪௰௧)
—சாலமன் பாப்பையா

பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை (௱௪௰௧)
—மு. கருணாநிதி

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.   (௱௪௰௨ - 142)
 

நல்ல அறநெறியை மறந்து கீழான வழியிலே சென்றவர் எல்லாரினும், பிறன்மனைவியை இச்சித்து, அவன் வீட்டு வாயிலில் நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை (௱௪௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை. (௱௪௰௨)
—மு. வரதராசன்

பாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை (௱௪௰௨)
—சாலமன் பாப்பையா

பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள் (௱௪௰௨)
—மு. கருணாநிதி

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார்.   (௱௪௰௩ - 143)
 

சந்தேகப்படாமல் தெளிந்து நம்பியர் வீட்டில் தீமையைச் செய்து நடப்பவர் செத்தவரைக் காட்டிலும் வேறுபட்டவர் அல்லர் (௱௪௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர். (௱௪௰௩)
—மு. வரதராசன்

தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன் (௱௪௰௩)
—சாலமன் பாப்பையா

நம்பிக் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான் (௱௪௰௩)
—மு. கருணாநிதி

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.   (௱௪௰௪ - 144)
 

தினையளவேனும் தம் பிழையை ஆராயாமல் பிறன் இல்லத்தே செல்லுதல், எவ்வளவு சிறப்புடையவர் ஆயினும் என்னவாக முடியும்? (௱௪௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்? (௱௪௰௪)
—மு. வரதராசன்

அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன? (௱௪௰௪)
—சாலமன் பாப்பையா

பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும் (௱௪௰௪)
—மு. கருணாநிதி

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.   (௱௪௰௫ - 145)
 

இது செய்வதற்கு எளிது எனக் கருதி பிறன் மனைவிபால் செல்கின்றவன், எக்காலத்தும் மறையாமல் நிலைத்து நிற்கும் பழியை அடைவான் (௱௪௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான் (௱௪௰௫)
—மு. வரதராசன்

அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான். (௱௪௰௫)
—சாலமன் பாப்பையா

எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான் (௱௪௰௫)
—மு. கருணாநிதி

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.   (௱௪௰௬ - 146)
 

பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கு தீமைகளும் பிறன் மனைவியை நாடிச் செல்பவனிடமிருந்து எப்போதும் நீங்காதனவாம் (௱௪௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம். (௱௪௰௬)
—மு. வரதராசன்

அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா. (௱௪௰௬)
—சாலமன் பாப்பையா

பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை (௱௪௰௬)
—மு. கருணாநிதி

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.   (௱௪௰௭ - 147)
 

அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்விலே வாழ்பவன் என்பவன், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாதவனே ஆவான் (௱௪௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே (௱௪௰௭)
—மு. வரதராசன்

அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான் (௱௪௰௭)
—சாலமன் பாப்பையா

பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான் (௱௪௰௭)
—மு. கருணாநிதி

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.   (௱௪௰௮ - 148)
 

பிறன் மனைவியை இச்சித்துப் பார்க்காத பேராண்மை, சான்றோர்க்கு அறன் மட்டுமன்று; நிரம்பிய ஒழுக்கமும் ஆகும் (௱௪௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும். (௱௪௰௮)
—மு. வரதராசன்

அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும் (௱௪௰௮)
—சாலமன் பாப்பையா

வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும் (௱௪௰௮)
—மு. கருணாநிதி

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.   (௱௪௰௯ - 149)
 

அச்சந்தரும் கடல் சூழ்ந்த இவ்வுலகிலே ‘நன்மைக்கு உரியவர் யார்?’ என்றால், பிறருக்கு உரியவளின் தோளைத் தழுவாதவரே ஆவர் (௱௪௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர் (௱௪௰௯)
—மு. வரதராசன்

அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே (௱௪௰௯)
—சாலமன் பாப்பையா

பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர் (௱௪௰௯)
—மு. கருணாநிதி

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.   (௱௫௰ - 150)
 

அறத்தையே கருதாமல் ஒருவன் அறமல்லாதனவற்றையே செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாதிருத்தலே நல்லதாகும் (௱௫௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது (௱௫௰)
—மு. வரதராசன்

அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது. (௱௫௰)
—சாலமன் பாப்பையா

பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும் (௱௫௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: சுத்த தந்யாசி  |  தாளம்: ஆதி
பல்லவி:
பிறனில் விழையாதே - என்றும்
பெருமையை இழக்காதே - நண்பா

அநுபல்லவி:
அறனில்லை இதில் ஆண்மைக்கழகே இல்லை
அன்போ சிறிதும் இல்லை துன்பங்களே தொடரும்

சரணம்:
எத்தனை செல்வம் சீர் சிறப்பிருந்தாலும்
இவர் கனவான் என எவர் புகழ்ந்தாலும்
அத்தனையும் கெடுக்கும் அயல்மனை ஆசை
அகற்றிடு அகற்றிடு உன் மனமாசை

பகை பழிபாவம் அச்சத்தைக் கூட்டும்
பண்புள்ள நண்பரும் பதைத்திட வாட்டும்
தகைமை இல்லாதது தாழ்வு நிலையிது
தன்னுயிர்த் துணைவியைத் தவித்திடச் செய்வது

பிறன்மனை நோக்காப் பெயர் பெறும் ஆண்மை
பெற்றவனாவதில் உனக்குள்ள மேன்மை
திறன்மிக அறமும் நல்லொழுக்கமும் கூடும்
தீவினை உனை விட்டே தூரத்தில் ஓடும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22